அமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு புகார்! விஜிலென்ஸ் கமிஷனர் நடவடிக்கைக்கு உத்தரவு


மதுரை, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தாக்கலான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அறிக்கையை விஜிலென்ஸ் கமிஷனரின் மேல்நடவடிக்கைக்கு அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை தல்லாகுளம் மகேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு
  • அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிட மனு செய்தபோது, தான் வருமானவரி செலுத்தாதவர்; அசையும் சொத்து மதிப்பு 18 லட்சத்து 88 ஆயிரத்து 552 ரூபாய்; அசையா சொத்து 19 லட்சத்து 11 ஆயிரத்து 963 ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டார்.
  • அமைச்சரான பின் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாயில் 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அதன் உண்மை மதிப்பு 6 கோடி ரூபாய்.
  • சிவகாசி அருகே திருத்தங்கல்லில் 23 லட்சத்து 35 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பில் 2 பிளாட்கள் வாங்கியுள்ளார். 75 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இவற்றின் மதிப்பு 8 கோடி ரூபாய்.
  • அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதால், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் புகார் செய்தேன்.
  • மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மகேந்திரன் மனு செய்தார்.
ஏற்கனவே நீதிபதிகள் அமர்வு, 'எஸ்.பி., அந்தஸ்திற்கு குறையாத ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.
நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.விசாரணை குறித்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரின் அறிக்கை 'சீல்' இடப்பட்ட உறையில் வைத்து அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள், 'இயக்குனரின் அறிக்கையை விஜிலன்ஸ் கமிஷனரின் மேல் நடவடிக்கைக்கு அனுப்ப வேண்டும். விசாரணை ஆக.,14க்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்றனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 26.07.2019