மறைந்தார் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்

டெல்லி: டெல்லி மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் இன்று காலமானார். இருதய கோளாறு உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஷீலா தீட்சித் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு வயது 81. ஷீலா தீட்சித் மரணம் குறித்து தகவல் தெரிவித்துள்ள எஸ்கார்ட்ஸ் ஃபோர்டிஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அசோக் சேத், எங்களது மருத்துவர்கள் குழு ஷீலா தீட்சித் அவர்களை சிறப்பாக கவனித்து கொண்டது. இருப்பினும் பிற்பகல் 3:15 மணியளவில் அவர் மீண்டும் இருதய நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சரியாக பிற்பகல் 3:55 மணிக்கு அவர் உயிர் அமைதியாக பிரிந்தது என குறிப்பிட்டார். டெல்லி மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டு காலம் டெல்லி முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 2014-ம் ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கேரள மாநில ஆளுநராகவும் பதவி வகித்தார் மறைந்த ஷீலா தீட்சித். சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஷீலா தீட்சித் தோல்வியை தழுவியிருந்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/former-delhi-chief-minister-sheila-dikshit-has-passed-away-357543.html