மார்க்சிஸ்ட் என்ற அடையாளத்தை எந்தவொரு இடத்திலும் மறைக்க அவசியமில்லை

"சாதிய ஒடுக்குமுறை, சாதிய பாரபட்சம் என்ற பிரச்சனைக்கு நீண்ட தொரு வரலாறு உள்ளது. இது முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக முறையிலேயே ஆழமாக வேரோடிவிட்டது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையிலான சமூகம் ஏற்கெனவே இருந்த சாதிய முறையுடன் சமரசம்செய்துகொண்டது.  இந்திய முதலாளி வர்க்கமே கூட இந்த சாதிய வேறுபாடுகளை வளர்த்து விடுகிறது. தலித் மக்களில் மிகப் பெரும் பகுதியினர் உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக உள்ள நிலையில், சாதிய முறைக்கும், தலித் மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கும் எதிரான ஒற்றுமை உழைக்கும் மக்களின் ஒற்றுமையே ஆகும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்கு முறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்." 
- கட்சித்திட்டம் 5.12 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 

 நான் மார்க்சியவாதி...
 பெரியாருடைய சிந்தனைகளும் அம்பேத்கரின் கருத்துக்களும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் தான் என்னை மார்க்சியவாதியாய் பரிணாமிக்க வைத்தது என்பதை ஒருபோதும் நான் மறுப்பதில்லை. 
அடிப்படையில் பெரியாரின் கருத்துக்கள் தான்  வாசிக்கும் பழக்கத்தையும் கேள்விகேட்கும் மனப்பான்மையையும் வளர்த்து விட்டது என்பதையும் நான் மறைக்கவில்லை... 
நான் இன்று மார்க்சியத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.  மார்க்சியத்தின் அறிவியல் சார்ந்த கருத்துகளிலிருந்து என்னை சுற்றி நிகழும் பிரச்சனைகளுக்கான தீர்வை தேடிக்கொண்டிருக்கிறேன். மார்க்சை கடவுளாகவும் மார்க்சியத்தை மதமாகவும் நினைத்து நான் அணுகவதில்லை. மார்க்சை தோழனாய் நினைத்தே மார்க்சிய கருத்துகளோடு எனக்குள்ளிருக்கும் சந்தேகங்களையும் விவாதித்துக்கொண்டிருக்கிறேன். 

ஆயினும் , நான் தூய்மைவாத மார்க்சியத்தை ஏற்பதில்லை. அதன்பால் எனக்கு துளியளவும் விருப்பம் இல்லை. தோழர் லெனின் வகுத்து நடைமுறைப்படுத்திய மார்க்சியத்தின் மீது எனக்கொரு தீராக்காதல் உண்டு. 

இந்திய சமூகத்தில் பெரியாரும் அம்பேத்கரும் ஆற்றிய பங்கினை ஒரு போதும் நான் மறுப்பதுமில்லை நிராகரிப்பதும் இல்லை. அதே நேரத்தில் பெரியார் மீதும் அம்பேத்கர் மீதும் எவ்வித விமர்சனமும் இல்லையென சொல்லி போலி பாசாங்கு காட்டவும் எனக்கு விருப்பமில்லை.
அம்பேத்கரை முன்னொரு காலத்தில் வாசித்ததுற்கும் தற்போதைய வாசிப்பும் வெவ்வேறாக இருப்பதாய் உணர்கிறேன். அம்பேத்கருடைய  எழுத்துக்களில்  அம்பேத்கரே குறிப்பிட்ட இடங்களில் தன்னுடைய எழுத்துக்களில் இருந்து  முரண்பட்டு இருப்பதாய் உணர்கிறேன் (இது குறித்து உரையாடல் நடத்த வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் நோக்கம்) ... 
அப்படி என்னுடைய உணர்வு சரியானது என்றால் அம்பேத்கரை ரஷ்ய சிந்தனையாளர்களாலான மக்சீம் கார்க்கியோடோ அல்லது டால்ஸ்டாயோடா ஒன்றுபடுத்தி பார்க்கவே செய்கிறேன்... 

 பெரியாரும் அம்பேத்கரும் மார்க்சுக்கு அருகில் இருப்பவர்கள் என்று நினைத்தே இவ்விருவரையும் அணுகிக்கொண்டு என்னளவில் இயங்கிக்கொண்டிருக்கிறேன். 
ஆனால் தற்போதைய கருத்தியல் பேசுபவர்கள் மத்தியில் இரண்டு விதமான போக்குகள் இருப்பதாக உணர்கிறேன். அதில் ஒன்று அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிஸ்ட் என்றும் பெரியாரிய மார்க்சிஸ்ட் என்றும் ஒரு குழு இயங்கிக்கொண்டிருக்கிறது. இவர்கள்  சந்தர்ப்பவாதிகளே தவிர வேறு யாருமில்லை... அதே நேரத்தில் இன்னொரு குழுவினர் அம்பேத்கரும் வேண்டாம் பெரியாரும் வேண்டாம் மார்க்ஸ் மட்டுமே போதும் என்று மார்க்ஸ் ஒருவர் மட்டுமே சர்வரோக நிவாரணி என்பது போல் தூய்மைவாதத்தை மார்க்சின் மேல் திணிக்க பார்க்கிறார்கள். இவர்கள் சந்தர்ப்பவாதிகள் மட்டுமல்ல ; கற்பனாவாதிகள்... 

நிற்க , மார்க்சியத்தை கற்றுக்கொண்டும் நான் கற்றதை கற்பித்துக் கொண்டும் எனக்கு முன்பிருக்கும் சமூக பிரச்சினைக்கு எதிராக போராட ஒரு சிறந்த தளமாக
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்)  விளங்குகிறது என்பதாகவே எண்ணற்ற தோழர்களை போலவே நானும் உணர்கிறேன். எங்கள் மீதான விமர்சனங்களை சரியான முறையில் அணுகி அதற்கு மறுப்பும் குறைப்பட்டு நிற்கும் இடங்களில் திருத்தம் செய்துகொள்வதும் ஒரு மார்க்சிஸ்ட்டின் கடமையாகவே கருதுகிறேன் ... 

(குறிப்பு : மேற்குறிப்பிட்ட கருத்துக்களும் எண்ணங்களும் பின்னாட்களில் மாறலாம் )

ஆகவே நான் மார்க்சிஸ்ட் என்ற அடையாளத்தை எந்தவொரு இடத்திலும் மறைக்க அவசியமில்லை. சந்தர்ப்பத்திற்காக என்னை நான் பெரியாரிஸ்ட் என்றும் அம்பேத்கரிஸ்ட் என்றும் அழைத்துக்கொள்வதற்கான அவசியமும் இல்லை என்றே நான் கருதுகிறேன்...

#_பீமன்