#அனைத்து_காவல்துறை_அதிகாரிகளுக்கும்_சமர்பணம்
காவல்துறை என்றதுமே கொஞ்சம் முரட்டுத்தனமான ஆட்கள், பேச்சே கடுமையாக இருக்கும், விஜயகாந்த் படத்தில் வரும் போலீஸ் கதாபாத்திரங்கள்தான் மனதில் வந்து போகும். ஆனால், இவ்வளவு வலிமையான மனிதர்களுக்கும் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகவே உள்ளது.
ஒருவருடைய மனநிலை சீராக இருக்கும் போது மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு ஓய்வு அவசியம். காவலர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுகிறார்களா? நிச்சயமாக இல்லை. காவலர்கள் எட்டு மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற வேண்டாம் என்று சட்ட ஏட்டில் மட்டுமே இருக்கிறது. பெரும்பாலானவர்கள் கிட்டத்தட்ட இருபது மணி நேரத்திற்கு மேல் பணியாற்றுவதை பார்க்க முடிகிறது. இரவு எத்தனை மணிக்கு வீட்டுக்கு சென்றாலும், காலை ஏழு மணிக்கு காவல் நிலையத்துக்கு ரோல்காலுக்கு சென்றுவிட வேண்டும்.
குடும்பத்தோடு தினமும் தொலைக்காட்சி பார்க்கும் பாக்கியம் எத்தனை காவலர்களுக்கு கிடைக்கிறது ?
குடும்பத்தோடு பத்து நாட்கள் விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் என்று செல்ல முடியுமா? எந்த நேரமும், திருட்டு, கொலை, கொள்ளை, ஊர்வலம், கலவரம் என்று போராட்டங்களுக்கிடையே வாழும் போது கோபமும், வெறுப்பும் அவர்களது அடிப்படை குணமாகவே மாறுகிறது. வீட்டு விசேஷங்கள் மற்றும் பண்டிகைக்கு கூட குடும்பத்துடன் சேர்ந்திருக்க முடியாத நிலையில்தான் இன்றைய காவல்துறை இருக்கிறது.
கடுமையாக உழைப்பது சம்பளத்துக்காகத்தான். நான் உழைப்பைக் கொடுக்கிறேன், நீ சம்பளத்தை கொடு, என்பதுதான் இயற்கை நீதி. உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லையென்றால், அந்த இடத்தில் தவறுகள் நுழையும் வாய்ப்பு அதிகம். அப்படிப்பட்ட வாய்ப்பு தமிழக காவல்துறையில் நுழைந்திருப்பதை பார்க்க முடிகிறது. நம்மைச் சுற்றியுள்ள பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழக காவல்துறையின் சம்பளவிகிதம் மிகக் குறைவு. அதைப் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) - ஆந்திரா ரூ.40,270 - ரூ.93,780, கர்நாடகா ரூ.28,100 - ரூ.50,100, கேரளா ரூ.45,800 - ரூ.89,000. தமிழகம் ரூ.15,600 - ரூ.39,100.
ஆய்வாளர் - ஆந்திரா ரூ.35,120 - ரூ.87,130, - கர்நாடகா ரூ.21,600 - ரூ.40,050, கேரளா ரூ.39,500 - ரூ.83,000. தமிழகம் ரூ.9,300 - 34,800.
துணை ஆய்வாளர் - ஆந்திரா ரூ.28,940 - ரூ.7,8910, - கர்நாடகா ரூ.20,000 - ரூ.36,300, கேரளா ரூ.32,300 - ரூ.68,700. தமிழகம் ரூ.9,300 - ரூ.34,800.
தலைமைக் காவலர் - ஆந்திரா ரூ.21,230 - ரூ.63,010, - கர்நாடகா ரூ.12,250 - ரூ.24,000, கேரளா ரூ.27,800 - ரூ.59,400. தமிழகம் ரூ.5,200 - ரூ.20,200
காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் குறைகளைத் தெரிவிக்க நடத்தப்படும் காவலர்கள் குறை தீர்ப்பு முகாமைத் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றாலும், அவர்களுடைய குறைகள் சரியான முறையில் கேட்கப்படுவதில்லை என்று பலர் புலம்புகின்றனர்.
காவலர்களின் நலனுக்காக சில பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைக் காவல்துறையில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சிக்காக சிறந்த பயிற்சி நிபுணர்களை மேம்படுத்த வேண்டும். கொடுக்கப்படும் பயிற்சி வகுப்பானது குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது கொடுக்க அனுமதிக்க வேண்டும். மனம் சார்ந்த பல்வேறு உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து கொடுக்கப் பயிற்சியுடன் கூடுதலாக இணைக்க வேண்டும். அதேபோல், ஆயுதங்களைக் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தவும், அதற்கான பயிற்சியையும் முறையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக விளையாட்டுகள், கவுன்சிலிங், பொழுது போக்குகள் போன்ற சில ஏற்பாடுகளை செய்துகொடுக்கலாம்.
காவல் துறையை எப்படி வேண்டுமானாலும் சாடலாம், நக்கல், நையாண்டி செய்யலாம். அவர்கள் பதில் சொல்ல முடியாது. அவர்களுக்கென்று தொழிற்சங்கம் கிடையாது. காவல்துறைக்கு எதிராக யாராவது ஒரு கருத்தை சோஷியல் மீடியாக்களில் பதிவு செய்தால், அதற்கு மறுப்பு தெரிவிக்கவோ, ஆமோதிக்கவோ காவல்துறைக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
இந்த கொரோனா நோய் காலத்திலும் கூட நாம் அனைவரும் நமது குடும்பத்தார் உடன் வீட்டில் இருக்கிறோம் ஆனால் அவர்கள் நமக்காக இரவு பகல் பார்க்காமல் கஷ்டப்படுகிறார்கள்.
காவல்துறையின் மோசமான சில செயல்பாடுகள் சில இடங்களில் நடந்தாலும் அவர்களின் பிரச்னையும் பேசப்பட வேண்டிய விஷயமாகவே உள்ளது. மக்கள் நலனுக்காக வேலை செய்யும் காவல்துறையின் பிரச்னையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
நல்ல சம்பளம், நல்ல பணியாற்றும் சூழல், நசுக்கப்படும்போது குரல் எழுப்பும் உரிமை, சுதந்திரமாக செயல்படும் உரிமை ஆகியவை காவல்துறைக்கு கொடுக்கப்படுமானால், அப்பழுக்கில்லாத துறையை உருவாக்க முடியும்.பிறகு அவர்களும் நமது "நண்பர்கள்தான்".
ராஜேஷ் ராஜேந்திரன்
முதுகலை வேதியியல் ஆசிரியர்

கருத்துரையிடுக