அவினாசியில் தலித் இளைஞர் மற்றும் அவரது சகோதரி மீது நடந்தேறிய சாதிய வன்கொடுமைக்கு கண்டனங்கள் - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

அவினாசியில் தலித் இளைஞர் மற்றும் அவரது சகோதரி மீது நடந்தேறிய சாதிய வன்கொடுமைக்கு கண்டனங்கள்
- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
அவினாசி வட்டம், பழங்கரை ஊராட்சி, தேவம்பாளையம் கிராமத்தில் கடந்த 07.05.2020 ஆம் தேதி லோகனாதன் (25) என்பவரின் ஆட்டுக்குட்டி, மூர்த்தி என்பவரின் தோட்டத்துக்குள் சென்றதற்காக, லோகநாதனையும் அவரின் தங்கையையும், மூர்த்தியின் மகன் பிரவீன் (21) மற்றும் குடும்பத்தினர் மிகவும் தரக்குறைவாகவும், சாதியைக் குறித்து இழிவாகவும் பேசி, தாக்கியுள்ளனர்.
அன்றிரவே, சுதாமா கோபாலன், என்பவர் தலைமையில் ஊர் முக்கிய பிரமுகர்களான ஆர்ம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, எஸ்.கே. செந்தில்குமார் (முன்னாள் பழங்கரை ஊராட்சித் தலைவர்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, ஊர்க்கூட்டம் என்கிற பெயரில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி, லோகனாதன் குடும்பத்தினரை சாதிஆதிக்கவாதிகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
லோகனாதன் குடும்பத்தினர், நாங்கள் யார் காலிலும் விழமாட்டோம் என்று கூறிவிட்டனர்.
ஆர்எஸ்எஸ்-சின் முக்கிய பொறுப்பாளர்களான, பெரும் தொழிலதிபர்களான இருவரின் சொந்த ஊர் இது என்பதால், அவர்கள் முன்னிலையில் நடந்த கட்டப் பஞ்சாயத்தில், லோகனாதன் விஷச்செடியை போன்றவன். அதை உடனே கிள்ளி எறியவேண்டும். இவன் ஊருக்குள் இருந்தால் எல்லோரையும் கெடுத்து விடுவான். இவனை ஊருக்குள் விட்டு வைக்காதீர்கள் என்று தலித் மக்களைத் தூண்டியுள்ளனர்.
இதன்காரணமாக பயந்துபோன தாழ்த்தப்பட்ட மக்கள், ஊர்ப்பெரியவர் காளிமுத்து என்பவர் மூலமாக, லோகனாதன் குடும்பத்தினரை, கொரோனா நிவாரணப் பொருள் தரமாட்டார்கள், கோவிலுக்கு கொடை தரமாட்டார்கள், இங்குள்ள குடும்பங்களுக்கு வேலை தரமாட்டார்கள் எனவே நீ மன்னிப்புக் கேள், இல்லையென்றால் ஊரைவிட்டு வெளியேறு என்று தொடர்ந்து கடந்த நான்கைந்து நாட்களாக அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இந்தக் கொடுமையால் மன உளைச்சலுக்கும், அவமானத்திற்கும் உள்ளான லோகனாதன் குடும்பத்தினர், அவினாசி காவல்நிலையத்தில் 13.05.2020 அன்று புகார் அளித்துள்ளனர்.
ஆனால், அவினாசி காவல்நிலைய ஆய்வாளர், லோகனாதன் குடும்பத்தினரை மிரட்டும் தொனியில் பேசி அனுப்பிவிட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன்பிறகு, சாதி ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்களின் சார்பில் 14.5.2020 அன்று, வழக்குப் பதியச் சொல்லி, அவினாசி துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
15.5.2020 அன்று காலையில் அவினாசி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த விசாரணக்குப்பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில், லோகனாதன் குடும்பத்தினருடன் சாதி ஒழிப்புக் கூட்டமைப்பு சார்பில் ச.நந்தகோபால் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), விடுதலைச் செல்வன் (ஆதித் தமிழர் பேரவை), தமிழ்வேந்தன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), முகில் ராசு (திராவிடர் விடுதலைக் கழகம்), சண். முத்துக்குமார் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), தலித் விடுதலைக் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிடத் தமிழர் கட்சி, மக்கள் அதிகாரம், சமூக நீதிக் கட்சி, திராவிடர் தளம், சசி தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர்.
கூட்டமைப்பின் கோரிக்கைகள் :
1.உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டும்.
2.பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த கிராமத்தில் தொடர்ந்து வாழ காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
3.பாதிக்கப்பட்டவர்களுக்கு, சொந்த மக்களே அச்சுறுத்தல் தருவதைத் தடுக்கும் வகையில் காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் அவர்களின் சொந்த தொகுதியான அவினாசியில், தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதும், இந்த வன்கொடுமைகள் தொடர்பாக அவர் எதிர்வினையாற்றாமல்
தொடர்ந்து அமைதிகாப்பதும் சரியல்ல என்பதையும் கூட்டமைப்பின் சார்பாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
#TNUEF