அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு
வெட்டுக்கிளி கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த ஒரு பூச்சியினம் ஆகும்.
வெட்டிக்கிளிகள் பல்வேறு நிறங்களில் உள்ளன. வேளாண்மை செய்யப்படும் பயிர்ச் செடிகளுக்குக் சேதம் விளைவிப்பதால் இது உழவர்களின் எதிரி என்று அறியப்படுகிறது.இவற்றின் ஆயுட்காலம் 6 முதல் எட்டு வாரங்கள். இதற்குள் மூன்று முறை இவை முட்டையிடுகின்றன(ஒரு நாளில் பெண் வெட்டுகிளி 150 முட்டைஇடும்). அறுவடைக்குத் தயாராக உள்ள வேளாண் பரப்பு எங்குள்ளது என்பதை காற்றின் மூலம் அறிந்து அந்தத் திசையில் இவை படையெடுப்பவை.
பாலைவனப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான ஈரான், ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் உருவாகும் இந்த பூச்சிகள், படையெடுப்பின் போது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 4 கோடி பூச்சிகள் வரை இருக்கும். இவை ஒரே நாளில் 80,500 கிலோ பயிர்களை உட்கொள்ளும். இது 35,000 மனிதர்கள் ஒரு நாளில் உட்கொள்ளும் உணவுக்குச் சமமாகும்.

தற்போது இந்தியாவின் வடமேற்கு மாநில விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருகிறது வெட்டுகிளிகள். உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து, பத்தில் ஒரு பங்கு உலக மக்கள்தொகையைப் பட்டினிக்குத் தள்ளும் அளவுக்குத் திறன்பெற்றவை இந்த வெட்டுக்கிளிகள். பொதுவாக, நம் பகுதிகளில் சாதாரணமாகக் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள்தான். இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்க்கைமுறை மிகவும் விசித்திரமானது. பொதுவாக, தனித்தனியாக (solitary phase) குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு உணவுக்காக வந்துசேர்கின்றன. பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது, அவற்றின் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருளை அதன் உடல் உற்பத்திசெய்கிறது. அப்போதுதான் அவை அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.
செரட்டோனின் உடலில் சுரந்த சில மணி நேரங்களில் அவற்றின் குணநலன்களில் பெரும் மாறுதல் ஏற்படுகின்றன. தனித்து வாழும் வெட்டுக்கிளிகள் அப்போதுதான் சமூகமாய் வாழும் கூட்டு வாழ்வுக்குத் (gregarious phase) தூண்டப்படுகின்றன. அவற்றின் உணவுப் பழக்கம், நடத்தை, வேகம் என அத்தனையும் திடீரென மாற்றமடைகின்றன. இந்நிலையில், சரியான ஈரப்பதமும் ஈரமண்ணும் வாய்க்கப்பெற்றால் அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவ அமைப்பிலும் நிறத்திலும்(Brown), ஏன் மூளை அளவிலும்கூட மாறுதல் பெறுகின்றன. வறட்சியைத் தொடர்ந்து வரும் மழை அவற்றுக்கு எண்ணிக்கையில் தழைத்துப் பெருக சாதகமான சூழலாய் அமைகிறது.
இவை ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர்களுக்கும் மேல்கூட பயணிக்க வல்லவை. செங்கடலை தரையிறங்காமல் தாண்டக்கூடியவை. இலைகள் முதல் மரத்தின் மேல் வேர்கள் வரை எல்லாவற்றையும் சாப்பிடும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரு கூட்டமாகப் புறப்படுகையில், ஒரு நாளில் ஒரு கிராமத்தின் மொத்தப் பயிர்களையும் நாசமாக்கிவிடுவதோடு, ஒரு வாரத்தில் அந்தக் கிராமத்தின் அத்தனை பயிர்களையும் தின்று தீர்த்துவிட வல்லவை. ராஜஸ்தானில் இவை எட்டாயிரம் கோடி ரூபாய் பயிர்களைச் சேதப்படுத்தியிருக்கின்றன. பாகிஸ்தானில் இருந்து கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் தொடங்கிய வெட்டுக்கிளிகள் ஊடுருவல், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின், 20 மாவட்டங்களில் பரவியுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்களில் வெறும் 22 இனங்களே இப்படி அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை. ஆச்சரியகரமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அவை தாமாகவே தமது முந்தைய தனிமை வாழ்க்கைக்கு நகர்ந்து, மீண்டும் ஆபத்தற்ற ஒன்றாகவும் மாறிவிடுகின்றன.
வெட்டுக்கிளிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும் மாலத்தியான் மருந்தை மிகப் பெரிய தெளிப்பான்கள், தீயணைப்பு வாகனங்களின் மூலம் தெளிக்க வேண்டுமென்றும் வேளாண் துறை கூறியிருக்கிறது.கென்யா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வெட்டுக்கிளிகள் விரைவிலேயே இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்துமென ஐ.நா.வின் உணவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடதக்கது.
இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும், இவற்றின் இடப்பெயர்ச்சியைச் சரியாக யாராலும் கணிக்க முடியாது. இப்போதே துறைசார் நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து, அவற்றின் இடப்பெயர்ச்சியைக் கண்காணிப்பதோடு ஏதேனும் ஆபத்து ஏற்படின் அதற்கான துரித நடவடிக்கை எடுப்பதற்கான ஆயத்த நிலையில் இருக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.
-ராஜேஷ் ராஜேந்திரன்
முதுகலை வேதியியல் ஆசிரியர்