புலம்பெயர் தொழிலாளிகள் பற்றி நாம் இதுவரை_கவலைப்பட்டதுண்டா??

#பி.சாய்நாத்.
(ஃபர்ஸ்ட் போஸ்ட் இணைய இதழில் வெளிவந்த பேட்டியின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்)
அவுரங்காபாத்தில் ரயிலில் அடிபட்டு இறந்த 16 தொழிலாளிகள் குறித்த ஊடகங்களின் எதிர்வினை பற்றி
எத்தனை ஆங்கில பத்திரிகைகள் இறந்த தொழிலாளிகளின் பெயர்களை வெளியிட்டார்கள்? அவர்களெல்லாம் பெயரில்லாதவர்கள், முகமில்லாதவர்கள் என்பதுதான் ஏழைகள் குறித்த நமது அணுகுமுறை. இதுவே விமான விபத்தாக இருந்தால், இறந்தவர்கள் 300 பேராக இருந்தாலும் அவர்கள் பெயரெல்லாம் வெளிவரும். 16 பேரும் ஏழைத்தொழிலாளிகள். அவர்களில் 8 பேர் கோண்ட் பழங்குடிகள். எனவே எதற்காக கவலைப்படவேண்டும்? அவர்கள் ரயில்வே லைனை ஊருக்குப் போகும் வழிகாட்டியாக நினைத்து நடந்திருப்பார்கள். ஏன் தண்டவாளத்தில் தூங்கினார்கள்? அசந்திருப்பார்கள். அது மட்டுமல்ல, ரயில் எதுவும் ஓடுவதில்லையே என்று நினைத்திருப்பார்கள்.
ஊரடங்கு குறித்த அரசின் அறிவிப்பு பற்றி
130 கோடி மக்கட்தொகை கொண்ட தேசத்தை இழுத்து மூடுவதற்கு 4 மணி நேரம் அவகாசம் கொடுத்தோம். இராணுவத்தின் ஒரு சிறிய காலாட்படை பிரிவை ஒரு பெரும் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டுமென்றால் கூட 4 மணி நேர அவகாசம் போதாது என்று சொன்னார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம். தொழிலாளர்கள் ஊருக்கு திரும்புவதை நாம் ஒப்புக்கொள்கிறோமா இல்லையா என்பதல்ல பிரச்சனை. அவர்கள் தெளிவாகத்தான் முடிவெடுத்திருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம், அவர்களை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகள் அல்லது நம்மைப் போன்ற நடுத்தர வர்க்த்தினர் எல்லோரும் எந்த அளவுக்கு இரக்கமற்றவர்கள், கொடூரமானவர்கள், நம்ப முடியாதவர்கள் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய மதிப்பீடு சரிதான் என்பதை நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் ஊருக்குப் போகக்கூடாது என்று அரசு தடுக்கவில்லையா?
பீதியைப் பரப்பியது இந்த அரசுதான். லட்சக்கணக்கானவர்களை நெடுஞ்சாலைகளை நோக்கித் துரத்தியது இந்த அரசுதான். வெளிநாட்டிலிருந்து திரும்புகிறவர்களை நட்சத்திர விடுதிகளில் குவாரன்டைனில் வைத்தார்களே, திருமண மண்டபங்களையும், பள்ளிகளையும் கல்லூரிகளையும் மூடிவிட்டு அங்கே புலம்பெயர் தொழிலாளர்களையும் வீடற்றவர்களையும் தங்க வைத்திருக்க முடியாதா?


Image may contain: 1 person, suit
அவர்களுக்கு ரயில் ஏற்பாடு செய்து விட்டு முழு கட்டணம் வாங்குகிறார்கள். தொழிலாளிகள் எல்லோரும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டு ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். “அடிமைகள் எல்லோரும் தப்பி ஓடுகிறார்கள்” என்று கர்நாடக முதலமைச்சரை சந்தித்த ரியல் எஸ்டேட் முதலாளிகள் புகார் சொல்கிறார்கள். உடனே ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஒரு அடிமைகளின் கலகத்தை எதிர்பார்த்து, அதனை முன் கூட்டியே அடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது அரசு. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியின் பொருள் அதுதான்.
நாம் எப்போதுமே ஏழைகளுக்கு ஒரு அளவுகோல், மற்றவர்களுக்கு வேறொரு அளவுகோல் வைத்திருக்கிறோம். இருந்தாலும் என்ன வேடிக்கை? அத்தியாவசிய சேவைகளைப் பட்டியல் போட்டுப் பார்த்தால், டாக்டர்களைத் தவிர அந்த சேவைகளைச் செய்கின்ற மற்ற அனைவரும் ஏழைகள்தான். இறுதியில் அவர்கள்தான் அத்தியாவசியமானவர்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. செவிலியர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். இன்னும் தூய்மைப் பணியாளர்கள், சமூகநலப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், ஆலைத் தொழிலாளிகள் என்று போகிறது இந்த சமூகத்துக்கு அத்தியாவசியமானவர்களின் பட்டியல். வசதி படைத்தவர்கள்தான் இந்த நாட்டுக்குத் தேவையில்லாதவர்கள் என்ற உண்மை பளிச்சென்று தெரிய வருகிறது.
புலம்பெயர்தல் என்பது பல பத்தாண்டுகளாகவே நடப்பதுதானே? ஊரடங்கிற்கு முன்னரும் கூட இவர்களது வாழ்க்கை மிக மோசமாகத்தானே இருந்தது?
புலம்பெயர்பவர்கள் பலவிதம். அதிலுள்ள வர்க்க வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். நான் சென்னையில் பிறந்தவன். டில்லியில் நான்காண்டுகள் உயர் கல்வி கற்றேன், பிறகு மும்பை வந்தேன். இங்கே 36 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். ஒவ்வொரு புலம்பெயர்தலும் எனக்கு ஆதாயமளிப்பதாகவே இருந்தது. ஏனென்றால் நான் ஒரு குறிப்பிட்ட சாதி, வர்க்கப் பின்புலத்திலிருந்து வருகிறேன். எனக்கென்று ஒரு சமூக வலைப்பின்னல் இருக்கிறது, ஒரு சமூக மூலதனம் இருக்கிறது.
ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு புலம் பெயர்ந்து, பின்னர் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு வகை.
ஒரு ஆண்டின் குறிப்பிட்ட பருவங்களில் புலம் பெயர்பவர்கள் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக கரும்பு விவசாயத் தொழிலாளிகள். மகாராட்டிரத்திலிருந்து கர்நாடகத்துக்கும் அங்கிருந்து மகாராட்டிரத்துக்கும் ஆண்டு தோறும் 5 மாதங்கள் புலம் பெயர்கிறார்கள். பருவம் முடிந்தவுடன் தங்கள் ஊருக்கு திரும்பிவிடுவார்கள். ராய்ப்பூரில் சுற்றுலா சீசன் வந்தவுடன் அங்கே ரிக்ஷா ஓட்டும் வேலைக்காக கலகாந்தி மாவட்டத்திலிருந்து செல்வார்கள். ஒரிசாவின் கோராபுத் மாவட்டத்திலிருந்து ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள செங்கல் சூளைகளுக்கு ஆண்டுதோறும் சில மாதங்கள் வேலைக்கு செல்வார்கள்.
வேறொரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள்தான் நம் அக்கறைக்குரியவர்கள். சிலர் இவர்களை நாடோடி தொழிலாளிகள் என்று சொல்வதுண்டு. இந்த நாடோடி தொழிலாளிகளுக்கு எந்த ஊருக்குப் போகப்போகிறோம் என்றே தெரியாது. அவர்கள் ஒரு காண்டிராக்டருடன் வருவார்கள். மும்பையில் ஒரு கட்டுமானப் பணியில் 90 நாள் வேலை பார்ப்பார்கள். அது முடிந்தபின் கொஞ்ச நாட்களுக்கு ஒன்றுமிருக்காது. பிறகு அந்த காண்டிராக்டர் மாகாராஷ்டிராவின் இன்னொரு மூலையில் இருக்கும் வேறொரு காண்டிராக்டரிடம் இவர்களை அனுப்பி வைப்பான். இது இப்படியே முடிவின்றி போய்க்கொண்டிருக்கும். ஒரு கொடிய நொறுங்கிப்போன வாழ்க்கை. கடைசி வரையில் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத வாழ்க்கை. இத்தகைய தொழிலாளிகள்தான் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளிகளின் நிலைமை எப்போதிலிருந்து மிகவும் மோசமாகத் தொடங்கியது?
புலம்பெயர்தல் என்பது ஒரு நூற்றாண்டாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கடந்த 28 ஆண்டுகளில்தான் அது பிரம்மாண்டமாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது. 2001 – 2011 கால கட்டத்தில்தான் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப் பெரிய அளவுக்கு புலம்பெயர்தல் நடந்திருக்கிறது என்பதை 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு நமக்கு காட்டுகிறது.
1921 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிராமப்புற மக்கள் தொகையின் அதிகரிப்பைக் காட்டிலும் நகர்ப்புற மக்கள் தொகையின் அதிகரிப்பு கூடுதலாக இருந்தது இந்த காலகட்டத்தில்தான் என்பதை 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ள இயலும்.
2011 சென்சஸ் கூறுகின்ற இந்த உண்மைகள் தொடர்பாக எந்த தொலைக்காட்சியிலாவது ஒரு விவாதம் நடந்திருக்கிறதா என்று தேடிப்பாருங்கள். கிராமங்களிலிருந்து நகர்ப்புறத்துக்கு இவ்வளவு அதிகமான அளவில் ஏன் புலம்பெயர்தல் நடக்கிறது என்பது குறித்து எத்தனை பேர் விவாதம் நடத்தியிருக்கிறார்கள்?
கிராமப்புற வறுமைதான் புலம்பெயர்தலுக்கு ஆணிவேர் – இல்லையா?
நாம் விவசாயத்தை அழித்ததன் விளைவாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை நொறுங்கிவிட்டது. ஊரகப் பகுதிகளின் எல்லா வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டன. விவசாயத்துக்கு அடுத்தபடியாக கைத்தறியும் கைவினைத் தொழில்களும் பெரிய அளவுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வந்தன. படகோட்டிகள், மீனவர்கள், கள் இறக்குபவர்கள், பொம்மை செய்வோர், நெசவாளர்கள், சாயப்பட்டறைக்காரர்கள் .. என ஒருவர் பின் ஒருவராக அனைவரும் வீழ்ந்து விட்டார்கள். அவர்கள் பிழைத்திருப்பதற்கு வேறெந்த வாய்ப்பும் இல்லை.
இப்போது கிராமத்தை நோக்கிச் செல்லும் தொழிலாளிகள் மீண்டும் நகரத்துக்கு வந்து விடுவார்களா என்பது குறித்துப் பலரும் கவலைப்படுகிறோம். அவர்கள் கிராமத்திலிருந்து இங்கே வரும் நிலை ஏன் ஏற்பட்டது? அது நம் அக்கறைக்குரியது இல்லையா?
கணிசமான புலம்பெயர் தொழிலாளிகள் நகரங்களுக்கு திரும்ப வந்து விடுவார்கள் என்றுதான் நானும் கருதுகிறேன். ஆனால் அவர்கள் உடனே வந்து விட மாட்டார்கள். சிறிது காலம் பிடிக்கும். அவர்கள் கிராமத்திலேயே வாழமுடியும். ஆனால் அதற்கு இருந்த வாய்ப்புகள் அனைத்தையும் நாம் நெடுங்காலம் முன்பே ஒழித்துவிட்டோம் – நகரத்தில் நமக்கு மலிவான உழைப்பாளிகள் வேண்டும் என்பதற்காகத்தான்.
சில மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களை தளர்த்த விருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு அவசரச் சட்டத்தைப் போடுவதன் மூலம் அரசமைப்பு சட்டத்தையும் இருக்கின்ற சட்டங்களையும் செல்லாக்காசாக ஆக்கும் முயற்சி இது. இரண்டாவதாக இது தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் பிரகடனம். மூன்றாவதாக, வேலை நேரம் தொடர்பாக நிலைநாட்டப்பட்ட அரிய உரிமையை நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு இது பின் தள்ளுகிறது. அடிப்படையான விசயம் என்னவென்றால், எட்டு மணி நேர வேலைநாள் என்பது உலகின் எல்லா சட்டங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

குஜராத் அரசின் அறிவிப்பைப் பாருங்கள். அது கூடுதல் வேலை நேரத்துக்கு மிகுதிநேரப்படி (overtime allowance) கிடையாது என்று சொல்கிறது. கூடுதல் வேலை நேரத்துக்கு ஓவர்டைம் ஊதியம் உண்டு என்கிறது ராஜஸ்தான் அரசின் அறிவிப்பு. ஆனால் வாரத்துக்கு 24 மணி நேரத்துக்கு மேல் ஓவர்டைம் கிடையாதாம். அதாவது ஒரு தொழிலாளி வாரம் 6 நாட்களும் 12 மணி நேரம் வேலை செய்யவேண்டும் என்பது இதன் உட்பொருள்.
இந்த திருத்தங்கள் எல்லாம் ஆலைகள் சட்டத்தில் இருக்கும் விதிவிலக்குகளை மேற்கோள் காட்டி செய்யப்படுகின்றன. ஓவர்டைம் உள்ளிட்டு ஒரு தொழிலாளி வாரத்துக்கு அதிகபட்சம் 60 மணி நேரம்தான் வேலை செய்யலாம் என்று கூறுகிறது ஆலைகள் சட்டம். இப்போது அது 72 மணி நேரமாகிவிட்டது.
மிக முக்கியமான விசயம் என்னவென்றால், 8 மணி நேரத்துக்கு மேல் ஓவர்டைம் செய்ய விருப்பமில்லை என்று கூறும் உரிமை தொழிலாளிக்கு இல்லை. வேலை நேரத்தை கூட்டினால் உற்பத்தி கூடும் என்று நினைக்கிறார்கள். வரலாற்றில் இதன் முடிவுகள் நேர் எதிராகவே உள்ளன. நீண்ட நேரம் வேலை செய்யச்செய்ய, தொழிலாளியின் உடல் அசதி காரணமாகவும் ஆற்றலின்மை காரணமாகவும் உற்பத்தி குறைகிறது என்ற ஆய்வுகளைப் பார்த்த காரணத்தினால்தான், சென்ற நூற்றாண்டில் பல ஆலைகள் 8 மணி நேர வேலை என்பதை அவர்களே கடைப்பிடிக்க ஆரம்பித்தனர்.
இவை ஒருபுறமிருக்க, இது மனித உரிமைகள் மீதான தாக்குதல். தொழிலாளிகளை அடிமைகளாக்கும் நடவடிக்கை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொத்தடிமைகளைப் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றன இந்த அரசுகள். இதனால் மிக அதிகமாக பாதிக்கப்படவிருப்பவர்கள் தலித்துகள், பழங்குடிகள் மற்றும் பெண்கள்தான்.
இந்தியாவின் 93% தொழிலாளிகள் முறைசாராத் தொழில்களில் இருப்பவர்கள், அமைப்பு சாராத் தொழிலாளிகள். அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. கேட்கவும் முடியாது. மிச்சமுள்ள 7% தொழிலாளர்களின் உரிமைகளையும் ஒழித்து விடுவோம் என்பதுதான் இவர்கள் சொல்ல வரும் செய்தி. தொழிலாளர் சட்டத்தை மாற்றி விட்டால் முதலீடுகள் வந்துவிடும் என்று இந்த அரசுகள் வாதிடுகின்றன. எங்கே நல்ல உள்கட்டுமானங்கள், நல்ல சூழ்நிலை உள்ளதோ, எங்கே சமூக அமைதி உள்ளதோ அங்கேதான் முதலீடுகள் வருகின்றன. இந்த தகுதிகள் ஏதாவது உத்தரப் பிரதேசத்துக்கு இருந்திருந்தால், இந்தியா முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் மாநிலமாக அது இருந்திருக்காது.
முன்னோக்கிச் செல்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
தொழிலாளி வர்க்கத்தின் வாழ்நிலையை மேம்படுத்த வேண்டும். நமது சமூகத்தில் நிலவுகின்ற மிக மோசமான ஏற்றத்தாழ்வின் காரணமாகத்தான் கொரோனா பெருந்தொற்றினால் அவர்கள் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சட்டங்களை இயற்றுவதன் மூலம், இந்திய அரசும் சேர்ந்து நிறைவேற்றிய பல சர்வதேச தொழிலாளர் ஒப்பந்தங்கள் மீறப்படுகின்றன.
அம்பேத்கர் இதைத் தெளிவாகப் பார்த்திருக்கிறார். வெறுமனே அரசாங்கங்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்பதை அவர் புரிந்திருக்கிறார். முதலாளிகளின் தயவில் தொழிலாளிகள் வாழவேண்டிய நிலைமை குறித்து நாம் பேசவேண்டும் என்பதனால்தான் தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு அடித்தளமிட்டிருக்கிறார். அவர் கொண்டு வந்த சட்டங்களைத்தான் இந்த அரசுகள் முடக்கி வருகின்றன.
மாநில அரசுகளில் இருக்கும் தொழிலாளர் துறை என்ன செய்யவேண்டும்?
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் அவர்களது பணி. ஆனால் நம்முடைய மத்திய தொழிலாளர் துறை அமைச்சர், கார்ப்பரேட் முதலாளிகள் சொல்வதைக்கேட்டு நடக்குமாறு தொழிலாளிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்…
ஊர் திரும்பும் தொழிலாளர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் கோபமாக இருக்கிறார்கள். நாம் ஒரு எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறோமா?
எரிமலை கண்முன்னே வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கிறது. நாம்தான் அதனைப் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்ள முயற்சிக்கிறோம். அரசுகள், ஊடகங்கள், ஆலை முதலாளிகள், ஒரு சமூகம் என்ற முறையில் நாம் – அனைவரது போலித்தனத்தையும் எண்ணிப் பாருங்கள்.
மார்ச் 26 ஆம் தேதிவரை நமக்கு புலம்பெயர் தொழிலாளிகளைப் பற்றித் தெரியாது. திடீரென்று லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளைத் தெருவில் பார்க்கிறோம். இன்று நகரத்தில் நமது சேவைகளுக்குத் தேவைப்படும் ஆட்கள் இல்லை. அதனால்தான் நமக்கு வலிக்கிறது. மார்ச் 26 ஆம் தேதிக்கு முன்னால் நம்மைப் போன்ற சமமான உரிமை கொண்ட மனிதர்கள் என்று அவர்களை நாம் மதித்திருக்கிறோமா?
ஏழைகள் படித்து விட்டால், பணக்காரனுக்கு பல்லக்கு தூக்க ஆளிருக்காது என்றொரு பழமொழி உண்டு. திடீரென்று பல்லக்குத் தூக்கிகளை நாம் இழந்து விட்டோம்.
தமது ஊர்களுக்கு கால்நடையாகச் செல்லும் புலம்பெயர் தொழிலாளிகளின் துன்பங்கள் குறித்து
நீண்ட தூரம் நடப்பது புலம்பெயர் தொழிலாளிகளுக்கு பழக்கம்தான். சான்றாக, குஜராத் மாநிலத்தின் ஒரு ஆலையிலிருந்தோ அல்லது அகே வேலை பார்த்துவந்த நடுத்தர வர்க்க முதலாளியின் வீட்டிலிருந்தோ புலம்பெயர் தொழிலாளிகள் தெற்கு ராஜஸ்தானில் உள்ள தங்கள் ஊருக்கு நடந்தே செல்வார்கள். அந்த சூழ்நிலை வேறு.
40 கி.மீ நடப்பார்கள். ஒரு டீக்கடையிலோ, உணவு விடுதியிலோ நிற்பார்கள். அங்கே ஏதாவது வேலை செய்து விட்டு, செய்த வேலைக்குக் கூலியாக சாப்பிட்டு விட்டு, மறுநாள் காலை நடக்கத் தொடங்குவார்கள். அடுத்து ஏதாவது ஒரு பேருந்து நிலையம். அங்கேயும் இதே போல உழைப்பு – கூலியாக சாப்பாடு. உழைத்தபடியேதான் அவர்கள் வீடு திரும்புவார்கள். இப்போது கடைகள் எல்லாம் மூடிக்கிடக்கின்றன. ஆனால் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். பசி, நீர்ச்சத்து இழப்பு, பேதி என்று பலவிதமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் நிலைமையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
நாம் தேர்ந்தெடுத்துள்ள வளர்ச்சிப் பாதையிலிருந்து முற்றிலுமாக முறித்துக் கொள்ள வேண்டும். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராகப் பெரியதொரு தாக்குலைத் தொடுக்க வேண்டும். அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி என்று நமது அரசமைப்பு கூறுவதன் முக்கியத்துவத்தை உணராமல் அதனைச் செய்ய இயலாது. சமூக, பொருளாதார நீதி என்பது அரசியலுக்கு முன்னால் வந்திருப்பது தற்செயல் அல்ல என்று நினைக்கிறேன். அதனை எழுதியவர்கள் முன்னுரிமைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டுதான் எழுதியிருக்கிறார்கள். போகவேண்டிய பாதையை அரசமைப்பு சட்டமே காட்டுகிறது.
மீண்டும் வழக்கம் போல ஆட்டத்தைத் தொடரலாம் என்று இந்திய மேட்டுக்குடி வர்க்கத்தினர் கருதுவார்களேயாயின், அது மிகக் கொடிய அடக்குமுறைக்கும் வன்முறைக்குமே வழி வகுக்கும்.
Urban India didn’t care about migrant workers till 26 March, only cares now because it’s lost their services: P Sainath, Firstpost, 13.5.20.
தமிழாக்கம் : மருதையன்