அப்துல் வஹாப் குறித்து தோழர் திருப்பூர் குணா அவர்களின் பதிவு

அப்துல் வஹாப் என்பவர் தமிழ் வஹாப் (Tamilwahab) என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது தவறு என்றால், நாளை கம்யூனிஸ்ட் கட்சியில் பெருவாரியான இசுலாமிய இளைஞர்கள் இணையும் போது தமது பேரோடு பகத்சிங், சே, லெனின், ஸ்டாலின்... என சேர்க்க நேரிடும்போது என்ன சொல்வீர் என் முற்போக்கு தோழரே? இசுலாமியர் இசுலாமிய பேரோடு இருப்பதுதான் சொந்த அடையாளத்தைப் பாதுகாத்தல் என்றால், எல்லா தேசத்து இசுலாமியருக்கும் சொந்த அடையாளம் என்பது அரபும், உருதும்தானா?
இசுலாத்தை ஒருவர் ஏற்றுக்கொள்வதென்பது அவரது தேசிய அடையாளங்கள் உட்பட அனைத்து சமூக அடையாளங்களையும் தூக்கி வீசி விட வேண்டும் என்பது மத அடிப்படைவாதம் இல்லையா?
உங்களது முற்போக்கு அடையாளத்திற்காக அடிக்கடி கேரளாவை உதாரணம் காட்டுவீர்கள்தானே! அங்கு இசுலாமியர்களுக்கும் கூட கேரள பண்பாட்டு அடிப்படையில் வீட்டின் (தரவாட்டு) பேரை ஒட்டிக்கொள்வது தெரியுமா? இன்னும் கூட ராஜா, பாபு, முத்து... என்று பொதுப்பெயர்களோடு கூடிய இசுலாமியப் பெயர்கள் இருப்பது தெரியுமா?
தமிழ்நாட்டிலும் கூட அடிப்படைவாதம் செல்வாக்கு செலுத்துவதற்கு முன்புவரை இத்தகைய பொதுப்பெயர்கள் இருந்தன. பெண்களுக்கு செல்வி போன்ற பெயர்கள் இணைத்து வைப்பது இயல்பாக இருந்தது.
எல்லாவற்றையும் அடிப்படைவாதம் தகர்த்தது. இசுலாமியர்களின் சொந்த அடையாளம் அவரது பேரிலேயே தனித்து தெரிய வேண்டுமென்று திணித்தது. நீங்களும் சொந்த அடையாளம் என்று அடிப்படைவாதத்தைத்தான் சொல்கிறீர்களா?
நாம் தமிழர் கட்சியை, அதன் தலைமையை கொள்கை ரீதியாக விமர்சிப்பதற்கு ஆயிரம் இருக்கிறது. அதை விடுத்து அக்கட்சி சார்ந்த ஒருவர் தமிழ் அடையாளத்தைப் பொருத்திக்கொண்டிருப்பதை, "சுய அடையாளம் இழந்தவன்" என்று கேலியாக்குவது - ஒருவகையில் மிரட்டுவது - எப்படி முற்போக்காகும்?

- திருப்பூர் குணா