பொள்ளாச்சி_ஆணவப்_படுகொலை



#பொள்ளாச்சி_ஆணவப்_படுகொலை

#கெளதம்_கொலைக்கு_நீதி_வேண்டும்

பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த கெளதம் என்ற 20 வயதே ஆன இளைஞர் படுகொலை செய்யப்பட்டதைச் செய்திகள் வாயிலாக நீங்கள் அறிந்திருக்கக்கூடும். பொள்ளாச்சி தங்கம் திரையரங்கம் அருகில் உள்ள எம்.ஜி நகரைச் சேர்ந்த ஹரிஸ்மித்ராவும் கெளதமும் காதலித்து வந்துள்ளனர். சென்ற 07.05.2020 அன்று #ஹரிஸ்மித்ரா அழைத்ததன் பேரில் கெளதம் அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட பெண்ணின் தாயார் அவர் கணவர் அண்ணாதுரைராஜிடம் தகவல் தந்துள்ளார். பெண்ணின் தந்தையான இந்த அண்ணாதுரைராஜும் தாய்மாமன் விசுவநாதன், அண்ணன் குருதேவ் ஆகிய மூன்று பேரும் கெளதமையும் ஹரிஸ்மித்ராவையும் தாக்கியுள்ளனர். கெளதமை மட்டும் தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரையும் பேச வைத்து காணொளி எடுத்துள்ளனர். அந்தக் காணொளி இந்த வழக்குக்குரிய பொள்ளாச்சி C 1 நகரக் கிழக்குக் காவல்நிலையத்தின் வசம் இருக்க வேண்டும். முதலில் காணொளி எடுக்க வேண்டிய தேவை என்ன? அந்தக் காணொளியில் என்னவெல்லாம் பதிவாகியிருக்கிறது? கெளதம் பேசியது என்ன? ஹரிஸ்மித்ரா பேசியது என்ன? இந்தக் கேள்விகளுக்குரிய விடை இந்த வழக்கில் நீதி வெல்ல பெருந்துணை செய்யும் என நாம் நம்புகிறோம்.

#கொலை_செய்யப்படுமளவு_கெளதம்_செய்த_குற்றம்... காதலித்தது. காதலித்த பெண்ணோடு பேசிக் கொண்டிருந்தது. அதுவும் அந்தப் பெண்ணே அழைத்ததன் பேரில் வந்தது. அழைத்திராமல் பெண் வீட்டிற்குள் போய் கெளதமால் பேசிக் கொண்டிருந்திருக்க முடியாது. வீட்டில் அப்போது யாருமில்லை என்பதையோ... வந்தால் பேசிக் கொண்டிருக்கலாம் என்பதையோ அந்தப் பெண் குறிப்பிட்டு அழைக்காமல் வீட்டிற்குள் புகுந்து பேசும் துணிவு கெளதமுக்கு வந்திருக்காது.

கெளதம் வீட்டில் மகளோடு பேசிக் கொண்டிருக்கிறார் எனக் கேள்வியுற்று வந்த மாத்திரத்தில் கெளதமும் ஹரிஸ்மித்ராவும் மேற்சொன்ன மூவராலும் தாக்கப்படுகிறார்கள். தன் மகள் காதலித்துவிட்டார் என்பதால் மகளும் தாக்கப்படுகிறாள். ஹரிஸ்மித்ரா நாயக்கர் சமூகம். கெளதம் செட்டியார் சமூகம். சாதி மறுத்துக் காதல் எனும் போது பெரிய சாதி வேறுபாடு இல்லையானாலும் கூட சாதிய மனம் வன்மம் கொள்கிறது. கெளதம் என்ற இளைஞன் எப்படிப்பட்டவன்... ஒழுக்கமுள்ளவனா? பொறுப்புமிக்கவனா? தன் உழைப்பை நம்பி வாழ்கிறவனா? மகளை உண்மையாகவும் நேர்மையாகவும் காதலிக்கிறானா? இந்தக் கேள்விகளுக்கு இடமின்றி கேட்கும் நிதானமுமின்றி மகளோடு கெளதமும் தாக்கப்படுவதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும் சாதிவெறி. தலித் என்பதால் மட்டுமே சாதிவெறி தலைக்கேறும் என்பதில்லை. எந்த சாதிகளுக்கு இடையில் என்றாலும் சாதிவெறிக்கு எதிராய் நிற்க வேண்டும். அதுவே அறம்.

தன் மகள் 16 வயதே ஆனவள். அவளைக் காதலிப்பதா? எனக் கேட்கலாம். அதையே நாமும் திருப்பிக் கேட்டால் அதில் தவறிருக்க முடியாது. 20 வயதே ஆன இளைஞனைக் காதலிப்பதா? பெண் உரிய வயதடையாதவள் என்றால் இங்கே ஆணும் உரிய வயதடையாதவன்தான். இருவருக்கும் உரிய வயதில்லை என்பது திருமணத்திற்குத்தானே ஒழிய காதலிப்பதற்கு அல்ல. காதல் மலர்வதற்குப் பிறப்புச் சான்றிதழ் அடிப்படையானது என்று பைத்தியக்காரர்கூட சொல்லமாட்டார். அப்படியே இருந்தாலும் அவர்களை அமர்த்திக் பேசி உரிய வயது வரட்டும்... அவரவர் வாழ்வில் முன்னேறுங்கள்... அதுவரை விலகி நில்லுங்கள்... வயது எட்டிய பிறகும் விருப்பம் தொடர்ந்தால் பேசலாம்... என்ற உரையாடலுக்கு இடமின்றி கண்மூடித்தனமாகத் தாக்குவதற்கு ஒன்றே ஒன்றுதான் அடிப்படை... சாதி வெறி.

ஒருவேளை இந்தக் காதல் தொடர்ந்தால் திருமணத்தில் போய் முடியும். பெண்ணின் உறுதியையும் இயல்பையும் பெற்றவர்களே நன்கு புரிந்தும் உணர்ந்தும் வைத்திருப்பார்கள். அந்த அடிப்படையில் இது திருமணத்தில் முடிந்துவிடுமோ எனும் அச்சம் மேலெழுகிறது. அப்படி முடிந்தால் சொந்த சாதிக்காரர்கள் இடையே அவமானம் ஏற்படும். சாதிக் கூட்டத்தாரிடையே தலைநிமிர்ந்து நடக்க முடியாது. அதனால் சாதிக் கெளரவம் காக்கவே கெளதம் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதனால் இது சாதிய கெளரவக் கொலையே. அதாவது சாதிய ஆணவக் கொலையே. இதை இன்னும் பல கோணங்களில் நம்மால் மெய்ப்பிக்க இயலும். அடுத்தடுத்துப் பேசுவோம்.

எல்லாவற்றுக்கும் மேலே இது உணர்ச்சிவயத்தால் தாக்கி சிகிச்சைப் பலனின்றி இறக்க நேர்ந்ததல்ல. இது அப்பட்டமான படுகொலை. எப்படி? அடுத்த பதிவில்...

#கெளதம்_கொலைக்கு_நீதி_வேண்டும்.

- வே. பாரதி


பதிவு - https://www.facebook.com/photo.php?fbid=997140670688901&set=a.364127737323534&type=3&theater