ரயிலில் அடிபட்டு சாகும் தொழிலாளர்கள் - தோழர் :மருதையன்
தோழர் :மருதையன் கட்டுரை. 17/05/20.
ரயிலில் அடிபட்டு சாகும் தொழிலாளர்கள், சாலை விபத்துகளில் கொத்து கொத்தாக மடியும் தொழிலாளர்கள், ஊனமுற்ற மனைவியை வண்டியில் இழுத்துச் செல்லும் கணவன், சூட்கேசின் மீது தூங்கியபடி பயணம் செய்யும் குழந்தை, கால்களில் செருப்புக்கு பதிலாக காலி தண்ணீர் பாட்டில்களை கட்டிக்கொண்டு நடக்கும் தொழிலாளிகள்…
மார்ச் மாதம் தொடங்கிய புலம் பெயர் தொழிலாளர்களின் இந்தத் துயரப் பயணம் இன்னும் முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு கோரக்காட்சி. ஒரு சோகச் செய்தி.
புலம்பெயர் தொழிலாளிகளின் அவலநிலையை மத்திய மாநில அரசுகள் அலட்சியப்படுத்துவதைக் கண்டு மனம் பதைத்து இந்தியாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் பலர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவுகளால் பெரிதாக எதுவும் நடந்து விடப்போவதில்லை என்ற போதிலும், மேற்கூறிய வழக்குகளில் புலம்பெயர் தொழிலாளிகளின் நிலை குறித்த இரக்க மனப்பான்மையையும் அக்கறையையும் உயர்நீதிமன்றங்கள்தான் ஓரளவிற்கேனும் வெளிப்படுத்தியிருக்கின்றன. ஈவிரக்கமின்றி நடந்து கொள்வதில் மோடி அரசை விஞ்சியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
15.5.20 அன்று புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இருவேறு வழக்குகள் வந்திருக்கின்றன. தொழிலாளிகளின் நிலை கண்டு கண்ணீர் வருகிறது என்று கூறியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். “ரயில் பாதையில் படுத்தால் சாகத்தான் வேண்டும்” என்று சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. கடந்த ஒன்றரை மாதங்களில் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சில வழக்கு விவரங்கள் மட்டும் கீழே தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.
0000000
“சோறு கொடுங்கள் இல்லையேல் இப்போதே எங்களைக் கொன்று விடுங்கள்” என்று 200 புலம்பெயர் தொழிலாளர்கள் கதறுவதாக செய்திவெளியிட்டது அகமதாபாத் மிரர் என்ற நாளேடு. “ரயிலுக்காக சோறு தண்ணீரில்லாமல், 45 டிகிரி வெயிலில் 19 மணி நேரமாக காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்” ன்று புலம்பெயர் தொழிலாளர்களின் கதையை இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியிருந்தது.
இவற்றைப் படித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, இலேஷ் ஜே வோரா ஆகியோரைக் கொண்ட அமர்வு இதனை ஒரு பொதுநல வழக்காக தானே முன்வந்து (suo motu) எடுத்துக்கொண்டது.
“நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. சமூகத்தின் ஆக கீழ்நிலையில் இருக்கின்ற, வசதி வாய்ப்புகளற்ற மக்கள் இவர்கள் என்பதை மனதில் வையுங்கள். அவர்கள் யாரும் கொரோனாவைக் கண்டு அஞ்சவில்லை. பட்டினியால் சாவோம் என்றுதான் அஞ்சுகிறார்கள். இத்தகைய சூழலில் அரசின் நடவடிக்கைகள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கவேண்டும் என்பதை மனதில் வையுங்கள்” என்று 12.5.20 அன்று கூறி அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அபய் ஓகா, நீதிபதி நாகரத்னா ஆகியோர் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான பொதுநல வழக்கில் 14.5.20 அன்று பிறப்பித்துள்ள உத்தரவு கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
“பல்வேறு அரசுத்துறை மற்றும் தனியார்துறை திட்டங்களை நிறைவேற்றுவதிலும், உள் கட்டுமானங்களை நிர்மாணித்து மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் புலம்பெயர் தொழிலாளிகளின் அளப்பரிய பங்களிப்பை மத்திய மாநில அரசுகள் அங்கீகரிக்க வேண்டும். அத்தகைய தொழிலாளர்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கும்போது அவர்களுக்கு கைகொடுக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்…. அவர்களுக்கு வேலை இல்லை. எனவே அவர்களிடம் பணமும் இல்லை. பணமில்லை என்பதற்காக அவர்கள் சொந்த ஊர் போகும் உரிமையைப் பறித்துவிட முடியாது. அது அரசியல் சட்டம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் உரிமை. எனவே ஊர் திரும்ப விரும்புவோருக்கு உரிய ஏற்பாட்டை மத்திய மாநில அரசுகள் செய்து தர வேண்டும்”.
மார்ச் 29 அன்று கேரளா, கோட்டயம், பெரும்பாவூர் பகுதிகளில் அசாம், மேற்கு வங்கத்தை சேர்ந்த சுமார் பத்தாயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு கோரியும், தங்களை ஊருக்கு அனுப்பக் கோரியும் சாலை மறியல் செய்தனர். இந்தச் செய்தியைப் படித்து விட்டு, புலம்பெயர் தொழிலாளர்களைப் பராமரிப்பதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து 3 நாட்களில் அறிக்கை அளிக்குமாறு மார்ச் 30 அன்று கேரள அரசுக்கு உத்தரவிட்டது அம்மாநில உயர் நீதிமன்றம்.
மும்பை உயர்நீதிமன்றம் அவுரங்காபாத் விபத்தை தொடர்ந்து தானாக முன்வந்து பொதுநல வழக்கை எடுத்துக்கொண்டு, கீழ்க்கண்ட விவரங்களை உடனே தாக்கல் செய்யுமாறு எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் விவரம், ஊருக்கு போக முடியாதவர்களுக்கு உணவு, இருப்பிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா, உளவியல் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அவர்களுக்கு மனநல கவுன்சலிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரம், கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள் வீடுகளை காலி செய்யச்சொல்லி அச்சுறுத்தப்படுவதாக நாளேடுகளில் வந்துள்ள செய்தி குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்ற விவரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதி ரவீந்திர குகே 15.5.20 அன்று உத்தரவிட்டிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோரடங்கிய அமர்வின் முன், தமிழகத்திலிருந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள், மகாராட்டிர மாநிலத்தின் சாங்லி மாவட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஒரு ஆட்கொணர்வு மனு போடப்பட்டிருந்தது. அந்த மனுவின் மீது 15.5.20 அன்று விசாரணை நடத்திய அமர்வு கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது.
“லட்சக்கணக்கான தொழிலாளிகள் தமது உடைமைகளையும் கைக்குழந்தைகளையும சுமந்து கொண்டு நடக்கிறார்கள். போகும் வழியில் நல்ல உள்ளம் கொண்டோர் கொடுக்கும் சோற்றைத் தின்று பசியாறுகிறார்கள். சிலர் பட்டினியால் சாகிறார்கள். தொழிலாளர்களின் துயரம் பற்றி ஊடகங்களில் கடந்த ஒரு மாதமாக பல செய்திகள் வந்து விட்டன. இருப்பினும் அரசுகளுக்கிடையே எந்தவித ஒருங்கிணைந்த நடவடிக்கையும் இல்லை. புலம்பெயர் தொழிலாளிகளின் அவலநிலையைப் பார்க்கும்போது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை…”.
என்று கூறி இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து, மே 22 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு உத்தரவும் பிறப்பித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை புலம்பெயர் தொழிலாளிகள் உள்ளனர் என்ற விவரம் மத்திய அரசால் பராமரிக்கப் படுகிறதா? ஆயின் அந்த விவரங்கள் என்ன? தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் முடங்கியிருக்கிறார்கள்? மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு வழங்கும் உதவிகள் என்ன? நடந்து செல்வோரில், வழியில் இறந்தவர்கள் பற்றிய விவரங்கள் என்ன? பேருந்து, ரயிலில் அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன? ஊர் திரும்பியவர்களுக்கு அவர்களது சொந்த மாநிலத்தில் நிதி உதவி, வேலைவாய்ப்புகள் எற்படுத்தி தருமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறதா?
-என்பன போன்ற பல கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளிடம் கேட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மத்திய அரசு பொறுப்பாக பதிலளிக்கப் போவதில்லை. ஒருவேளை, “இதெல்லாம் உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பினை மீறிய விசயங்கள்” என்று மத்திய அரசு கூறினால், அதனை உச்ச நீதிமன்றம் வழி மொழியவும் கூடும்.
00000
இனி இதே நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட பொதுநல வழக்குகளைப் பற்றிப் பார்ப்போம்.
மோடியின் திடீர் ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளிகளின் சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்ஷ் மந்தேர் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
செய்த வேலைக்கு சம்பளம் தரப்படாமல் விரட்டப்பட்டதையும், முகாம்களில் அவர்களது அவல நிலையையும் ஊருக்கு செல்ல விரும்புகிறவர்கள் தடுக்கப்படுவதையும் ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, இவையெல்லாம் அரசியல் சட்டப்படியான அவர்களுடைய அடிப்படை உரிமைகளைப் பறிப்பவை. புலம்பெயர் தொழிலாளர் சட்டம், 1979 இன் கீழ் மத்திய மாநில அரசுகள் தங்கள் கடமையிலிருந்து தவறியிருக்கின்றன என்று அவரது மனு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறது.
தலைமை நீதிபதியின் அமர்வில் அந்த மனு விசாரிக்கப்பட்டது. இந்த சட்டமீறல்கள் எதையும் நீதிபதிகள் கண்டுகொள்ளவே இல்லை. “அரசாங்கத்தைக் காட்டிலும் எங்களை அறிவாளிகள் என்று காட்டிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை” என்று கூறி அரசை நியாயப்படுத்தினார்கள். புலம்பெயர் தொழிலாளிகளில் 89% பேருக்கு சம்பளம் தரப்படவில்லை என்று மனுதாரர் கேட்டதற்கு, “முகாம்களில் சோறுதான் போடுகிறார்களே அப்புறம் பணம் எதற்கு?” என்று எதிர்க்கேள்வி கேட்டார் தலைமை நீதிபதி. “சம்பளம் கொடுக்கச்சொல்லி உத்தரவிடுவதெல்லாம் இயலாது” என்றும் “அரசாங்கம் தேவையானதை செய்யும்” என்றும் கூறி மனுவின் கதையை முடித்தது உச்ச நீதிமன்றம்.
அவுரங்காபாதில் 16 தொழிலாளிகள் ரயில்பாதையில் அடிபட்டு சாவதற்கு 3 நாட்கள் முன்னதாக ஜக்தீப் சொக்கர் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். “ஊர் திரும்ப விரும்பும் தொழிலாளிகளுக்கு (மருத்துவ சோதனை போன்று) பல நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. ரயில் கட்டணம் கேட்கப்படுகிறது. இத்தகைய நிபந்தனைகள் இன்றி அவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்பது மனு.
அந்த மனுவில் அவர் எழுப்பியிருந்த எந்தப் பிரச்சனைக்கும் பதில் சொல்லாமல், மத்திய மாநில அரசுகள் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றன. எனவே இந்த மனுவை விசாரிக்கத் தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்துவிட்டனர்.
மார்ச் மாதமே பட்டினி கிடக்கும் தொழிலாளிகள் குப்பையில் கிடந்த வாழைப்பழங்களைப் பொறுக்கித் தின்னும் காட்சி சமூக ஊடகங்களில பரவியது. நடந்து செல்லும் தொழிலாளர்கள் 22 பேர் பட்டினியில் துவண்டு, வெயிலில் வாடி இறந்துவிட்டனர் என்ற செய்தியும் ஊடகங்களில் வந்திருந்தது. இந்தச் செய்திகளை எடுத்துக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட இன்னொரு பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்திம் மார்ச் 31 அன்று விசாரித்தது. “ஒரு புலம்பெயர் தொழிலாளிகூட நடந்து செல்லவில்லை. அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். “ஊரடங்கு 3 மாதங்களுக்கு நீடிக்கும் என்று ஊடகங்களில் பரவிய பொய்ச் செய்தியை நம்பி பீதியடைந்து சிலபேர் ஊருக்கு கிளம்பியிருக்கிறார்கள். அதில் சிலர் இறந்திருக்கிறார்கள்” என்று மோடி அரசு கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டு அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
சுவாமி அக்னிவேஷ், “ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோருக்கு உணவுப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று ஒரு மனு தாக்ல் செய்தார். அவரத மனுவில் கூறப்பட்டுள்ள எதையும் பரிசீலிக்காமல், “ஆவன செய்யப்படும்” என்று அரசு தரப்பு அலட்சியமாக பதிலளித்ததைக் காட்டி வழக்கை முடித்துவிட்டது உச்ச நீதிமன்றம்.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருணாராய் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். ஊருக்கு திரும்பி செல்லும் புலம்பெயர் தொழிலாளிகள் கிராமங்களில் வேலையின்றி தவிப்பார்கள். எனவே, அவர்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத்துக்கான தற்காலிக அட்டை வழங்கப்படவேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கான ஊதிய பாக்கிகளை உடனே தரவேண்டும் என்பது மனுவின் கோரிக்கை. மிகவும் அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய இந்த மனுவை தேதி தள்ளிப்போட்டு கிடப்பில் போட்டது உச்ச நீதிமன்றம்.
நேற்று (15.5.20) அலக் அலோக் ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் அவுரங்காபாத் விபத்தையும் சாலை விபத்துகளையும் சுட்டிக்காட்டி, “புலம்பெயர் தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நடந்து செல்வோருக்கு உணவும் நீரும் உறைவிடமும் அளிப்பதற்கும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிடுங்கள்” என்று பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
நாகேஸ்வர ராவ், சஞ்சய் கவுல், பி.ஆர்.கவாய் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
“தண்டவாளத்தில் படுத்து தூங்கினால் சாகத்தான் வேண்டும். அதை யார் தடுக்க முடியும்?” என்று ஈவிரக்கம் இல்லாமல் கேள்வி எழுப்பினார்கள் நீதிபதிகள். “ரயிலுக்கு காத்திருக்க பொறுமையில்லாமல் அவர்கள் அவசரப்பட்டு நடந்து செல்கிறார்கள்” என்று தொழிலாளிகளையே குற்றம் சாட்டினார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. அதை ஆமோதித்த நீதிபதிகள். “யாரெல்லாம் நடந்து போகிறார்கள் என்று கண்காணிப்பதுதான் எங்கள் வேலையா?” என்று மனுதாரரை நோக்கி சீறினார்கள்.
அது மட்டுமல்ல, மனு தாக்கல் செய்த வழக்குரைஞர் ஸ்ரீவத்சவாவை சாடினார்கள். “சும்மா பேப்பரை படித்துவிட்டால் நீங்கள் எல்லாம் தெரிந்த அறிவாளியா? நீங்கள் சொல்வதை வைத்து நாங்கள் முடிவு செய்ய வேண்டுமா? அரசிடம் சொல்லி உங்களுக்கு ஒரு சிறப்பு பாஸ் வாங்கித்தருகிறோம். நீங்கள் வேண்டுமானால் போய் அரசு உத்தரவுகளை அமல்படுத்துகிறீர்களா? என்று நக்கல் செய்துவிட்டு, மனுவையும் தள்ளுபடி செய்தார்கள்.
இதுதான் உச்ச நீதிமன்றம்.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டுமே அரசியல் சட்ட நீதிமன்றங்கள்தான். எனினும், அவை ஒரே பிரச்சனையில் நேர் எதிரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றனவே, “சட்டத்தின் ஆட்சி” குறித்து உபதேசம் செய்பவர்கள்தான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்.
ஊருக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பார்ப்பான் சொல்வதுதான் ஸ்மிருதிகள் மற்றும் தர்ம சாத்திரங்களுக்கான விளக்கம் என்பதைப் போல நீதிபதிகள் சொல்வதுதான் சட்டம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஆகப்பெரும்பான்மையினர் பார்ப்பனர்கள் அல்லது ஆதிக்க சாதியினர் என்பதை சொல்லத்தேவையில்லை.
புலம்பெயர் தொழிலாளிகளின் அவலநிலை குறித்து வருத்தப்படுவது போல வசனம் பேசிவிட்டு, அதன் பின் அதற்கு நேர் எதிரான கண்ணோட்டத்தில் தீர்ப்பு வழங்கலாம். மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு வழக்கமாக பல நீதிமன்றங்கள் செய்யும் தந்திரம் அது. மோடியின் நம்பிக்கையைப் பெறுவது எப்படி என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் கவலை. எனவே அதற்கேற்ப நடந்து கொண்டிருக்கக் கூடும்.
நமது நாட்டில் பொதுநல வழக்குகள் எனப்படுபவை உச்ச நீதிமன்றத்தில அறிமுகமானதற்கு குறிப்பிட்ட நீதிபதிகளின் கண்ணோட்டம் மட்டுமின்றி, அன்றைய அரசியல் சமூகச் சூழலும் காரணமாக அமைந்தன. புதிய தாராளவாதக் கொள்கைகளும் அதன் உடன் பிறப்பான பார்ப்பன பாசிசமும் செல்வாக்குப் பெறத் தொடங்கிய 1990 களிலிருந்தே உச்ச நீதிமன்றம் பல்லிளிக்கத் தொடங்கிவிட்டது. பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை விட இதைப் புரிந்து கொள்வதற்கு வேறு சான்று தேவையில்லை.
தற்போதைய தலைமை நீதிபதி பாப்டேதான், தமிழக மக்களுக்கு சொந்தமான சிதம்பரம் கோயிலை தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு வழங்கித் தீர்ப்பளித்தவர். நீதிபதி கவுல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதுதான் தமிழக வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறை விதிகளைப் பிரகடனம் செய்தார். இந்தியாவிலேயே எங்கும் நடந்திராத வகையில் தமிழக வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். புலம்பெயர் தொழிலாளிகள் தொடர்பான பொதுநல வழக்குகளை விசாரித்த அமர்வுகளில் இருவரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தொழிலாளிகளின் நிலை கண்டு இரங்காத மனிதரில்லை. உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, ரயிலில் அடிபட்டு இறந்தவர்கள் மீது கூட நீதிபதிகளுக்கு இரக்கம் பிறக்கவில்லை என்பதுதான் நம் கவனத்துக்குரியது.
ஹர்ஷ் மந்தேர் தாக்கல் செய்த மனுவில் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுடன் வாக்குவாதம் செய்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா “சும்மா எதற்கெடுத்தாலும் பொதுநல வழக்கு என்று வந்து விடுகிறார்கள். இந்த கொரோனா பிரச்சனை தீரும்வரை பொது நல வழக்கெல்லாம் கிடையாது என்று கடையை மூடிவிடுவதுதான் நல்லது, மை லார்ட்” என்று நீதிபதிகளிடம் முறையிட்டிருக்கிறார்.
அதுவும் நல்லதுதான். லார்டு வெங்கடாசலபதி, லார்டு ரங்கநாதர், லார்டு கபாலீசுவரர் போன்ற லார்டுகளின் கடைகளெல்லாம் கொரோனாவுக்கு பயந்து மூடப்பட்டு விட்டன. மேற்சொன்ன “லார்டுகள்” யாரும் கொரோனாவிலிருந்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை பக்தர்கள் யாருக்கும் இல்லை.
மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றக்கூடும் என்ற நம்பிக்கையில் உச்ச நீதிமன்ற லார்டுகளை அணுகியிருக்கிறார்கள் பல மனுதாரர்கள்.
தெய்வீக லார்டுகளின் கடையை மூடியது போல, இந்த லவுகீக லார்டுகளின் கடையையும் மூடிவிட்டால் மக்களுடைய மயக்கமாவது கொஞ்சம் குறையக்கூடும்.
00000
--மருதையன்.
கருத்துரையிடுக