டாஸ்மாக்_செயின்_ஸ்நாட்சிங் - தோழர்:மருதையன்
#டாஸ்மாக்_செயின்_ஸ்நாட்சிங் !
*****************************************
டாஸ்மாக் விற்பனை அரசின் எதிர்பார்ப்பை விஞ்சிவிட்டது. முதல் ஐந்து நாட்களில் சுமார் 700 கோடி வியாபாரம். இனி வர இருக்கும் நாட்களில் எல்லா குடும்பங்களிலும் வன்முறை, திருட்டு, கண்ணீர் பெருகுமென்பதும், குற்றங்கள் அதிகரிக்குமென்பதும் அரசுக்குத் தெரியும்.
*****************************************
டாஸ்மாக் விற்பனை அரசின் எதிர்பார்ப்பை விஞ்சிவிட்டது. முதல் ஐந்து நாட்களில் சுமார் 700 கோடி வியாபாரம். இனி வர இருக்கும் நாட்களில் எல்லா குடும்பங்களிலும் வன்முறை, திருட்டு, கண்ணீர் பெருகுமென்பதும், குற்றங்கள் அதிகரிக்குமென்பதும் அரசுக்குத் தெரியும்.
கடை திறந்த பிறகு நடைபெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றில், அதிமுக அரசுக்குப் பரிந்து பேசிய சுமந்த் சி ராமன், “டாஸ்மாக்கை திறக்கக் கூடாது என்று சொல்பவர்கள் வருமானத்துக்கு வேறென்ன வழி என்று சொல்ல வேண்டும். பால், பேருந்து, மின்சாரம் போன்ற எதற்கு கட்டணம் ஏற்றி, இந்த வருமானத்தை ஈட்டலாம் என்று யோசனை சொல்ல வேண்டும். டாஸ்மாக் திறக்காவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. முதியோர் பென்சன் தரமுடியாது, பரவாயில்லையா?” என்று ஆணவமாக கேள்வி எழுப்பினார்.
“புலம்பெயர் தொழிலாளிகளுக்காகக் கண்ணீர் வடிப்பவர்கள், அவர்களுடன் சூட்கேசை சுமந்து கொண்டு நடப்பார்களா?” என்று நிர்மலா சீதாராமன் கேட்டாரே, அதன் இன்னொரு வெர்சன்தான் “பெண்களுக்காகக் கண்ணீர் வடிப்பவர்கள் அரசு ஊழியருக்கு சம்பளம் கொடுப்பீர்களா?” என்ற சுமந்த் சி ராமனின் கேள்வி.
அவருக்கு பதிலளித்த திமுக பிரதிநிதி, குடிநீர் வடிகால் வாரியம், குடி மராமத்து போன்ற சில இனங்களுக்கான செலவுகளைத் தள்ளி வைப்பதன் மூலம் சில ஆயிரம் கோடி ரூபாய்களை பயன்படுத்த முடியும் என்று பதிலளித்து விட்டு, “அப்படியே திறப்பதென்றாலும் ஊரடங்கு முடிந்த பிறகாவது திறக்கலாமல்லவா” என்று தற்காப்பு நிலைக்கு மாறினார்.
அதிமுக என்பது ஈவிரக்கம் இல்லாத கிரிமினல் கும்பல் என்பது உண்மை. கூடுதல் விலைக்கு விற்கப்படும் ஒவ்வொரு மதுப்புட்டியின் காசும், அதிமுக கும்பலால் கொள்ளையிடப்படுகிறது என்பதும் உண்மை. இவற்றுக்கு அப்பால் இன்னொரு முக்கியமான உண்மையும் இருக்கிறது.
எந்த மாநில அரசிடமும் பணமில்லை. “ஊழல் அதிமுக அரசிடம்” மட்டுமல்ல “ஊழல் எதிர்ப்பு ஆம் ஆத்மி அரசின்” கஜானாவிலும் பணமில்லை. கடையைத் திறந்ததுடன், மதுவின்மீது கூடுதலாக 70% கோவிட் வரியும் விதித்திருக்கிறது ஆம் ஆத்மி அரசு.
கஜானா காலி என்று கைவிரித்திருக்கும் கர்நாடக பாஜக அரசும், மதுக்கடையைத் திறக்கிறது. “அரசுக்கு பணம்தானே வேண்டும், நாங்கள் தருகிறோம். தயவு செய்து மதுக்கடையைத் திறக்காதீர்கள்” என்று எடியூரப்பாவுக்கு மணி ஆர்டரில் பணம் அனுப்புவதை ஒரு போராட்டமாக நடத்துகிறார்கள் கர்நாடக மாநிலப் பெண்கள்.
“காது – மூக்கில் இருப்பதையெல்லாம் கழற்றிக் கொடுத்து விடுகிறேன். இத்தோடு என்னை விட்டு விடு” என்று வழிப்பறிக் கொள்ளையனிடம் கெஞ்சுகின்ற பெண்ணின் நிலைக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
பெண்கள் அனுப்பிய மணி ஆர்டர் பணத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு, தேங்காய், ஊதுபத்தி, சூடம், சாம்பிராணி, அதிர் வேட்டுகளுடன், கர்நாடக அரசு மே 4 ஆம் தேதி சாராயக் கடைகளைத் திறந்து விட்டது.
000
சாராய வருவாய் தவிர்க்கவியலாதது என்ற இந்த நிலைமை அரசுக்கு ஏன் ஏற்பட்டது?
முன்னர் எம்ஜிஆர் மதுவிலக்கை நீக்கியபோது, “அப்பனுக்குச் சாராயம் – பிள்ளைக்குச் சத்துணவு” என்று சிறிது காலம் கேலி பேசப்பட்டது. காலப்போக்கில், சாராயம் சத்துணவுத் திட்டத்தால் நியாயப்படுத்தப்பட்டது. பின்னர் லாட்டரிச் சீட்டும், சுரண்டல் லாட்டரியும் இரண்டாவது பெரும் தீமையாக தமிழகம் மழுதும் தலைவிரித்தாடின. சேர்ந்து கொண்டன. 2003 இல் லாட்டரி விற்பனையைத் தடை செய்து விட்டு, சாராய விற்பனையை தமிழக அரசின் ஏகபோகமாக்கினார் ஜெயலலிதா.
முன்னர் எம்ஜிஆர் மதுவிலக்கை நீக்கியபோது, “அப்பனுக்குச் சாராயம் – பிள்ளைக்குச் சத்துணவு” என்று சிறிது காலம் கேலி பேசப்பட்டது. காலப்போக்கில், சாராயம் சத்துணவுத் திட்டத்தால் நியாயப்படுத்தப்பட்டது. பின்னர் லாட்டரிச் சீட்டும், சுரண்டல் லாட்டரியும் இரண்டாவது பெரும் தீமையாக தமிழகம் மழுதும் தலைவிரித்தாடின. சேர்ந்து கொண்டன. 2003 இல் லாட்டரி விற்பனையைத் தடை செய்து விட்டு, சாராய விற்பனையை தமிழக அரசின் ஏகபோகமாக்கினார் ஜெயலலிதா.
தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே மதுவிலக்கு அகற்றப்பட்டு சாராயம் வந்து விட்டது என்ற போதிலும், தாராளமயத்துக்கு பிந்தைய காலம்தான், சாராய வருவாயின் அளவு கூடிக்கொண்டே வந்த காலம். முன்னர் அரசு வரி வருவாயில், சாராய விற்பனைக்கு இருந்த பங்கிற்கும், தற்போதைய நிலைக்குமிடையில் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கிறது.
தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கம் தீவிரமடைய, தீவிரமடைய, அரசின் நேர்முக வரி வருவாய் குறைந்து கொண்டே வந்தது. சாராய வியாபாரம், லாட்டரி வியாபாரம் முதல் பொதுச்சொத்துகளின் விற்பனை வரையிலான அனைத்து தீமைகளும், “கஜானா காலி” என்ற அச்சுறுத்துலைக் காட்டியே நியாயப்படுத்தப்பட்டன. இது மட்டுமல்ல, “கஜானா காலி” என்ற வாதம், கல்வி – மருத்துவம் தனியார்மயமாக்கலை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது.
பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பொருட்டு, தங்க நாற்கரச் சாலை உருவாக்கப்பட்டதைப் போல, அந்தக் கார்கள் – நுகர்பொருட்களை வாங்குவதற்காகவும், தனியார் கல்விக்கூடங்கள் – மருத்துவமனைகளின் வாடிக்கையாளர்களைப் பெருக்குவதற்காகவும், நடுத்தர வர்க்கம் சம்பள உயர்வு கொடுத்து திட்டமிட்டே வளர்க்கப்பட்டது. பங்குச் சந்தையையே அறிந்திராத நடுத்தர வர்க்கம், ஷேர் மார்க்கெட் மோகத்தில் வீழ்ந்ததும், “குடி” நடுத்தர வர்க்க கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக மாறத்தொடங்கியதும் இந்தக் காலத்தில்தான்.
புதிய தாராளவாதத்தின் பலிபீடத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள் விவசாயிகள். தப்பிப் பிழைத்து நகரத்துக்கு ஓடியவர்கள்தான்,
இன்று தங்க நாற்கரச் சாலையில் கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் வர்க்கம்தான், வாஜ்பாயி ஆட்சிக்காலத்தில் இந்தச் சாலையை அமைத்தது. பின்னர் அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்திடமிருந்து விடைபெற்று, இதே சாலையில் பெருத்த நம்பிக்கையுடன் நகரத்தை நோக்கிச் சென்றது. எல்லா மாநிலங்களிலும் சாராயக்கடை வாசலில் தவமிருப்பதும் இந்த வர்க்கத்தினர்தான்.
000
தமிழக அரசின் வரி வருவாயில், மூன்றில் ஒரு பங்குக்கு மேல் டாஸ்மாக்கிலிருந்து வருகிறது. அதுவும் நாளொன்றுக்கு சராசரி 90 கோடி ரூபாய் வீதம், சுடச்சுடப் பணமாகக் கைக்கு வருகிறது. சாராயத்தின் மீது மாநில அரசு விதிக்கின்ற வாட் வரி மற்றும் கலால் வரி இரண்டும் சேர்த்து தமிழக அரசின் வருவாய் 31,157 கோடி (2018-19 கணக்கின்படி).
வாகன வரி, பத்திரப் பதிவுத்துறை வருமானம் ஆகியவற்றையும் சேர்த்தால் இவை மாநில அரசின் மொத்த வருவாயில் 61%. மீதமுள்ள 39% மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி வரியின் பங்காகவும் வேறு சில இனங்களிலும் வர வேண்டிய தொகை. பல இனங்களில் மோடி அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு வரவேண்டிய தொகை வரவில்லை.
மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வரவேண்டிய பாக்கித் தொகை 3 இலட்சம் கோடி என்று கூறியிருக்கிறார் அசோசெம் தலைவர் ஹீரா நந்தானி. மோடி அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி பாக்கி மட்டும் 2 இலட்சம் கோடி ரூபாய் என்று குற்றம் சாட்டியிருக்கிறார் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா. அரசுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான செஸ் (Cess) வரி என்று திரட்டப்பட்ட 4,25,795.81 கோடி ரூபாய் செலவிடப்படாமல் மோடி அரசிடம் முடங்கியிருக்கிறது. (The Hindu, June 20, 2019)
இதுவன்றி தமிழக உள்ளாட்சிகளுக்கு வரவேண்டிய தொகை 4345.57 கோடி, 14 வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்துக்கு வரவேண்டிய ஊக்கத்தொகை 2029.22 கோடி என்று கடந்த பிப்ரவரி மாதம் மோடி அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் நிதியமைச்சர் பன்னீர்செல்வம். 15 வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்துக்குத் தரப்படவேண்டிய 9000 கோடி ரூபாயும் தரப்படவில்லை (The Hindu, 2.5.20)
ஜனவரி 2020 வரை தமிழகத்துக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி பாக்கி 7214 கோடி என்கிறது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை. (TOI, 3.1.20) தமிழ்நாடு, மகாராட்டிரா, அரியானா ஆகிய மாநிலங்கள் வரி வருவாயாக மோடி அரசுக்கு ஈட்டிக் கொடுக்கும் தொகையில் ரூ.100 க்கு ரூ.30 மட்டுமே திரும்ப வருகிறது என்பது சுரண்டலின் இன்னொரு பரிமாணம்.
இத்தகைய நிலைமைகளின் விளைவுதான் மாநில அரசுகளின் சாராயச் சார்புநிலை. தமிழகத்தின் சாராய வருவாய் 31,157 கோடி என்றால், கர்நாடகத்தில் 21,450 கோடி, கேரளத்தில் 14,505 கோடி. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின், வரி வருவாயின் பெரும்பகுதியை மோடி அரசு கைப்பற்றிக் கொண்டுவிட்ட காரணத்தினால், மாநில அரசுகளின் சாராயச் சார்பு நிலை அதிகரித்த வண்ணமிருக்கிறது. இந்த நிதி நெருக்கடியைத் தீவிரமாக்கிவிட்டது – கொரோனா.
000
“இது வரலாறு காணாத நெருக்கடி. இதனைச் சமாளிக்க கடன் வாங்கலாம், தேவைப்பட்டால் நோட்டும் அடிக்கலாம், பற்றாக்குறை சதவீதம் அதிகரிப்பது பற்றியோ பணவீக்கம் பற்றியோ கவலைப்படத் தேவையே இல்லை” என்று பல முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை கூறிவிட்டார்கள். அந்த ஆலோசனைகளை மோடி அரசு காதில் வாங்கவே இல்லை. “கார்ப்பரேட்டுகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் வரி விதித்து நிதி திரட்டலாம்” என்று வருமானவரித்துறை அதிகாரிகள் ஆலோசனை சொன்னார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விட்டது.
20 இலட்சம் கோடி என்ற நிர்மலா சீதாராமனின் பித்தலாட்ட அறிவிப்பில், மாநில அரசுகளுக்கு ஒரு பைசா கூட தரப்படவில்லை. “சாராயக் கடைகளைத் திறந்து கொள்ளுங்கள்” என்பது மட்டும்தான் மாநில அரசுகளின் வருவாய்க்கு மோடி அரசு வகுத்துத் தந்திருக்கும் வழி.
“FRBM சட்டத்தின் படி (Fiscal Responsibility and Budget Management Act) மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (SGDP) 3.5% மட்டுமே கடன் வாங்கலாம் என்ற வரம்பினை 1.5% கூட்டி 5% ஆக உயர்த்தினால் வெளிச்சந்தையில் கடன் வாங்கிக்கொள்கிறோம்” என்பது மாநில அரசுகளின் கோரிக்கை.
அப்படி கடன் வாங்க, மாநில அரசுகளை அனுமதிப்பதற்கு தற்போது, 4 நிபந்தனைகளை விதித்திருக்கிறது மோடி அரசு. “விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்வது, உள்ளூராட்சிகளின் வரி விதிப்புகளைக் கூட்டி வருமானத்தை அதிகரிப்பது, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்துக்கு ஒப்புதல் தருவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் செய்வதற்கான சூழலை மேலும் எளிதாக்குவது” – என்ற இந்த நான்கு நிபந்தனைகளை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டுமாம். “ஒரு நிபந்தனை நிறைவேற்றப் பட்டால், கால் விழுக்காடு கூடுதல் கடன் வாங்க அனுமதி தரப்படும்” என்றும், “மொத்தத்தில் நான்கையும் ஒரு மாநில அரசு எப்படி நிறைவேற்றுகிறது என்பதைப் பொறுத்து மேலும் அரை விழுக்காடு சேர்த்து ஒன்றரை விழுக்காடு கடன் வாங்க அனுமதி தரப்படும்” என்றும் மோடி அரசு கூறியிருக்கிறது.
இந்த நிபந்தனைகளுக்கு பணிந்து போவதைக் காட்டிலும், மோடியின் வீட்டுக்கு முன்னால், மாநில முதல்வர்கள் அனைவரும் தெருவில் அமர்ந்து பிச்சை எடுக்கலாம். இப்படி மாநில அரசுகளுக்கு நிபந்தனை விதிப்பதற்குரிய அருகதை மோடி அரசுக்கு இருக்கிறதா?
1947 முதல் மார்ச் 2014 வரையிலான 70 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்தக் கடன் ரூ. 53,11,081 கோடி. சென்ற 5 ஆண்டு மோடி ஆட்சியில் இந்தக் கடன் ரூ. 83,40,026 கோடி ஆகிவிட்டது. அதாவது புதிதாக 30,28,945 கோடி அளவுக்கு இந்தியாவின் கடன் அதிகரித்திருக்கிறது. 2014 இல் ஒரு இந்தியக் குடிமகனின் தலை மீது 40,854 ஆக இருந்த கடன் மோடி ஆட்சியில் ரூ. 64,154 ஆக உயர்ந்திருக்கிறது. இதுதான் மோடி அரசின் யோக்கியதை. எந்தெந்த குஜராத்தி பனியா முதலாளிகளைக் குளிப்பாட்டுவதற்காக, நாம் கடனாளி ஆக்கப்பட்டிருக்கிறோம் என்றும் நமக்குத் தெரியாது.
ரிசர்வ் வங்கியின் நிதி இருப்பு 1.76 லட்சம் கோடியை எடுத்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்த மோடி அரசு, அதே ரிசர்வ் வங்கியிடமிருந்து 4.4.% வட்டிக்கு மாநில அரசுகள் கடன் வாங்கக் கூடாது என்று தடுக்கிறது. 7% முதல் 9% வட்டிக்கு வெளிச்சந்தையில் கடன் வாங்கும் நிலைக்கு மாநிலங்களைத் தள்ளியிருக்கிறது. அப்படிக் கடன் வாங்குவதற்குத்தான் மேற்சொன்ன 4 நிபந்தனைகள்.
வரி வருவாய் அனைத்தையும் ஜி.எஸ்.டி யிடம் பறி கொடுத்துவிட்ட மாநில அரசுகள், தமது மாநில மக்கள் மீது கூடுதல் வரி விதித்தோ, சாராய வியாபாரத்தை மேலும் அதிகரித்தோ, அல்லது பொதுச்சொத்துக்களை விற்றோதான் தமது கடன்களை அடைக்கவேண்டும். ஒரு தேசிய இன மக்களுக்கும் சரி, ஒரு மாநில அரசுக்கும் சரி, இதைக்காட்டிலும் வேறு அவமதிப்பும் இல்லை. இதை விடக் கொடிய சுரண்டலும் இல்லை.
000
இதை வேறொரு கோணத்தில் பார்ப்போம்.
கொரோனா பெருந்தொற்று தோற்றுவித்திருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் கட்டாயமாக பிடிக்கப்பட்டிருக்கிறது. எம்.பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதி அவர்களைக் கேட்காமலேயே பிடுங்கப்பட்டிருக்கிறது. தொழில்கள் முடங்கி அனைவரும் தத்தளித்து வரும் இந்தக் காலத்திலும் பெட்ரோல், டீசல் மீது மத்திய மாநில அரசுகள் கூடுதல் வரி விதிக்கின்றன. டோல்கேட் கட்டணத்தை மோடி அரசு கூட்டியிருக்கிறது. மதுபானங்களின் மீது எல்லா மாநிலங்களும் வரியைக் கூட்டியிருக்கின்றன. இவை அனைத்தின் வாயிலாகவும், ஏழை நடுத்தர மக்களிடமிருந்து மத்திய மாநில அரசுகள் பிடுங்க இருக்கின்ற வரி சில லட்சம் கோடிகளாக இருக்கும்.
இவை அனைத்துமே கொரோனாவுக்குப் பின் சாமானிய மக்கள் மீது கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கும் வரிகள். இது போதாதென்று இலவச மின்சாரத்தை ரத்து செய்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கவேண்டும். உள்ளூராட்சி வரிகளைக் கூட்ட வேண்டும் என்று மாநிலங்களை மிரட்டுகிறார் நிர்மலா சீதாராமன்.
இப்படி சாமானிய மக்களின் ரத்தத்தைப் பிழிந்து எடுக்கும் மோடி அரசு, அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் மீதும் பெரும் செல்வந்தர்கள் மீதும், கொரோனாவுக்காக ஒரே ஒரு ரூபாயாவது நேர்முக வரியைக் கூட்டியிருக்கிறதா? கூட்டவில்லை என்பது மட்டுமல்ல, அப்படி வரி விதிக்கலாம் என்று ஆலோசனை சொன்ன அதிகாரிகளைத்தான் தண்டித்திருக்கிறது.
டாஸ்மாக் பிரச்சனையில் மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டிய மையமான விசயம் இது.
கடந்த ஜனவரி மாதம், இந்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், ஆக்ஸ்ஃபாம் என்ற தன்னார்வ நிறுவனம், இந்தியாவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் விவரங்களைக் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது.
“இந்தியாவின் 1% கார்ப்பரேட் முதலாளிகளிடம், பொருளாதாரத்தின் கீழ் மட்டத்தில் உள்ள 70% (95.3 கோடிப் பேர்) மக்களிடம் இருக்கின்ற சொத்தைப் போல 4 மடங்கு சொத்து இருக்கிறது” என்றது அந்த அறிக்கை. அதாவது, நாடு முழுவதும் மதுபானக்கடைகளின் முன் இன்று அலை மோதுகிறார்களே, அந்த 95 கோடிப் பேரிடம் இருக்கும் வீடு, நிலம், வாகனம், மனைவியின் நகை, பண்ட பாத்திரம் உள்ளிட்ட சொத்துகளையெல்லாம் கூட்டினாலும் அதைப்போல 4 மடங்கு சொத்து ஒரு சதவீதம் பேரிடம் இருக்கிறது.
இன்னொரு கோணத்தில் சொன்னால், அந்த 1% பண முதலைகளிடம் நாட்டின் மொத்த செல்வத்தில் 42.5% இருக்கிறது. அடி மட்டத்தில் உள்ள 50% (65 கோடி) மக்களிடமோ வெறும் 2.8% செல்வங்களே உள்ளன என்கிறது அந்த அறிக்கை.
இந்த ஒரு சதவீத பணமுதலைகள் அவர்களாகப் பார்த்து, “பி.எம். கேர்ஸ்” நிதிக்கு ஒரு தொகையை உண்டியலில் போடலாம். விரும்பினால் அம்பானி அன்னதானம் செய்யலாம். எதுவாக இருந்தாலும் அவர்களாக செய்கின்ற தருமம்.
ஆனால், நடுத்தர வர்க்கம் தொடங்கி, பரம ஏழைகள் வரையிலான மக்களிடமிருந்து, பெட்ரோல் டீசலில் தொடங்கி, சாராயம் வரை (மதுவின் விலையில் பெரும்பகுதி வரிதானே) அனைத்து வழிகளிலும் கட்டாயமாக மறைமுக வரி பிழிந்தெடுக்கப்படுகிறது.
ஒரு சதவீத பணமுதலைகளின் சொத்து என்பது கோடிக்கணக்கான மக்களை நேரடியாகவும், அரசின் மூலம் மறைமுகமாகவும் சுரண்டிச் சேர்த்த லாபம் – நாட்டின் வளங்களைத் திருடிச் சேர்த்த சொத்து.
70% ஏழைகளின் சொத்து என்பது அவர்களோ அவர்களது பெற்றோரோ உழைத்து குருவி போலச் சேர்த்த சொத்து. இந்த 70% பேரின் இரத்தத்தைப் பிழிந்து, 1% பேருக்கு வழங்கும் கொள்கையின் வக்கிரமான வெளிப்பாடுதான் டாஸ்மாக்.
“வேலைக்குப் போய் 500 ரூபாய் சம்பாதித்து 300 ரூபாய்க்கு குடித்தான்” என்பது பழைய கதை. இது கொரோனா காலம். ஆணுக்கும் வேலையில்லை, பெண்ணுக்கும் வேலையில்லை. சோற்றுக்கே வழியில்லை. இந்த நிலையில் சாராயக் கடையைத் திறந்தால் என்ன நடக்கும் என்பது எடப்பாடிக்குத் தெரியும். மோடிக்கும் தெரியும்.
அரிசியில் தொடங்கி, அடுப்பு வரை குடிகாரன் எதையும் விற்பான். வீட்டில் திருடுவான். வெளியிலும் திருடுவான். மனைவி, தாய், பிள்ளைகளைத் தாக்குவான், கொலையும் நடக்கும். மக்களின் ரத்தக் கவிச்சி வீசும் அந்தக் காசுதான் அரசுக்கு வேண்டும்.
அந்தக் காசை வசூல் செய்வதற்கு ஒரு பில் கலெக்டரோ, பண்ட பாத்திரங்கள், நகைகளை பறிமுதல் செய்வதற்கு ஒரு அமீனாவோ அரசுக்குத் தேவைப்படவில்லை. ஜப்தி நடவடிக்கையை முடித்து, வரிப்பணத்தை அரசுக் கருவூலத்தில் சேர்ப்பதற்கு, ஒவ்வொரு வீட்டிலும் அரசு நியமித்திருக்கும் அமீனாதான் குடிகாரன்.
மது விற்பனை செய்வதென்பது, வருவாய் ஈட்டுவதற்கு அரசு மேற்கொள்கின்ற “நெறியற்ற வழிமுறை” என்று பலரும் விமர்சிக்கிறார்கள். அந்த நெறியின்மையின் இதயம் வள்ளுவர் கூறிய கள்ளுண்ணாமையில் இல்லை. “அம்பானியிமிருந்து எடுக்க மாட்டேன், அன்றாடங்காய்ச்சியிடம்தான் பிடுங்குவேன்” என்பதுதான் ஆக மோசமான நெறியின்மை. 1% x 70% என்ற சுரண்டலில்தான் இருக்கிறது ஆகக்கொடிய இரக்கமின்மை.
“அரசாங்கமே இப்படிச் செய்யலாமா?” என்று கேள்வி எழுப்பும் பெண்களுக்கு அரசாங்கம் யாருடைய நலனுக்காக இப்படிச் செய்கிறது என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.
நாற்பது நாளாகக் குடியை மறந்திருந்த கணவனை மீண்டும் குடிகாரனாக்குவதை மோடியோ, எடப்பாடியோ, அதிகாரிகளோ தெரியாமல் செய்யவில்லை. கடை வாசலில் கூட்டம் கூடி நோய்த்தொற்று பரவி பல்லாயிரம் மக்கள் சாகக் கூடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இது தெரியாமல் செய்யும் தவறோ, முட்டாள்தனமோ, திறமையின்மையோ அல்ல. தெரிந்து திட்டமிட்டு செய்யப்படும் குற்றம். இந்தக் குற்றச் செயலைப் புரியும் அரசுக்கு திட்டவட்டமான ஒரு நோக்கம் இருக்கிறது – என்ற புரிதலை போராடும் பெண்களிடம் மட்டுமின்றி, பொதுச் சமூகத்திடமும் ஏற்படுத்த வேண்டியுள்ளது.
கொரோனா ஊரடங்கு எப்போது முடியும், வேலைவாய்ப்புகள் இருக்குமா? தெரியாது. ஆனால் டாஸ்மாக் இருக்கும். அது ஒரு குடும்பத்திலும் சமூகத்திலும் தோற்றுவிக்கும் விளைவுகள் முன்னிலும் கோரமானதாக இருக்கும்.
டாஸ்மாக் மட்டுமின்றி, மாநில உரிமை பறிக்கப்படுவதிலும் பாதிக்கப்படுவோர் உழைக்கும் மக்கள்தான். மாநிலத்தின் உரிமை பறிபோவதால் எடப்பாடி எதையும் இழப்பதில்லை. இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டாலும், உள்ளூராட்சி வரி கூடினாலும் பாதிக்கப்படுவோர்
ஏழை நடுத்தர வர்க்க மக்கள்தான்.
கொரோனா காலத்து தொழில் முடக்கம் 1% மேன்மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் கூடுதல் நட்டத்தை நம் தலையில் வைக்கும் பணியைத்தான் மோடியும் எடப்பாடியும் மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் டாஸ்மாக் திறப்பு.
செயின் ஸ்நாட்சிங் (சங்கிலி பறிப்பு) திருடர்கள், இரண்டு பேராகத்தான் பைக்கில் வருவார்கள். எப்போதுமே பெண்களின் கழுத்துச் சங்கிலியை அறுப்பவன், பின்னால் உட்கார்ந்திருப்பவன்தான். பறிகொடுக்கும் பெண்களுக்கு பின் சீட்டுக்காரனின் முகம் மட்டும்தான் தெரியும்.
டாஸ்மாக் செயின் ஸ்நாட்சிங்கில், பின் சீட்டு யார், முன் சீட்டு யார் என்று அடையாளம் சொல்ல வேண்டுமா என்ன?
-மருதையன்

கருத்துரையிடுக