மனித_சாரத்தை_மீட்டெடுப்போம்!

வல்லரசு அமெரிக்கா முதல், வக்கற்ற இந்திய அரசு வரை கரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கவும், மீட்கவுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை என்பதான கருத்தையே "மக்கள் கரோனாவோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும்" என்பதாக வெளிப்படுத்தியுள்ளது. கரோனா தொற்று பரவல் சமூக தொற்றாக மாறிவிட்டதா? இல்லையா? என்பதனை தெளிவாக அறிவிக்கவில்லை. நாளுக்கு நாள் கிடு கிடுவென தொற்று பரவலின் எண்ணிக்கையான தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இவற்றைப் பற்றிய உண்மைகள் எதையும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இப்படியான நக்கலான பதிலை மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ளது.
கரோனா பாதிப்பு, அதனை கட்டுப்படுத்த தவறிய அரசுகளின் மெத்தனப் போக்கு, அலட்சியம், கைகழுவிய தன்மை இவற்றைப் பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கையில், அதைவிடவும், அடிப்படை மனித மாண்புகளை, உரிமைகளை உறுதிசெய்யும் தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் முதலாளிகள் துடைத்துக் கொள்ள கழிவறை காகிதங்களாக மாற்ற துடிக்கிறது காவி-பாசிச மோடி அரசு. உ.பியில் சங்கி சாமியார் அதியனாத்தின் அரசு தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மூன்று வருடங்களுக்கு செல்லாது என அறிவித்து இருக்கிறது. இது நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கான பேராபத்தின் நிழல் தலைக்கு மேல் படர்ந்துள்ளது.
நேற்று பிரதமர் உடனான மாநில முதல்வர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதமர் பேசியுள்ளார். அதில் கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இணையாக இனி பொருளாதாரத்தை சீர்படுத்திவதில் மாநில முதல்வர்கள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன் உள் அர்த்தம் அனைவருக்கும் விளங்கக்கூடியதே. ஏனென்றால், ஊரடங்கு அறிவித்தது, அதன் தயாரிப்பு குழறுபிடிகள், சுகாதார பாதுகாப்பு, நிதி ஒதுக்கீடு இப்படி எந்தவொரு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சார்ந்த அம்சத்திலும் மத்திய அரசிடம் இருந்து அலட்சியம் கைகழுவிய போக்கு, தயாரிப்பின்மை போன்றவையே வெளிப்பட்டன. மேலும் இந்த ஊரடங்கு நடவடிக்கையையே பெரும் சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொண்டன. நிவாரணமின்றி பெருவாரியான உழைக்கும் மக்கள் இன்று வரையிலும் தவித்து வருகின்றன. இப்படி இருக்க தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்ற ஊரடங்கு தளர்வுகள் அதன் நேரெதிராக அதிகரித்து வருகின்ற கரோனா பாதிப்பு விகிதாச்சாரம், தற்போது பிரதமரின் அறிவிப்பு இவற்றை அனைத்தையும் தொடர்பு படுத்தியே புரிந்துகொள்ள வேண்டும். அந்தவகையில், வறுமையிலும், தொற்று பாதிப்பிலும் சிக்கித் தவிக்கின்ற ஏழை-எளிய உழைக்கும் மக்களுக்கு இது சாதகமானதாக இருக்க வாய்ப்பே இல்லை.
* மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1979
* தொழிற்சாலைகள் சட்டம், 1948 (போபால் விபத்துக்கு பிந்தைய திருத்தம்)
* பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஏற்பாடுகள் சட்டம், 1952
* பணிஓய்வு நிதி வழங்குதல் சட்டம்(Payment of Gratuity Act, 1972)
* ஒப்பந்த தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம் 1970
மேலே உள்ள தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக செல்லுபடியாகாதென உ.பி அதியனாத் அரசு அறிவித்துள்ளது. மேலதிகமாய் இந்த சட்டங்கள் எதுவும் பெரும்பாண்மையான மாநில அரசுகளால் இன்று வரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், தற்போது இவை செல்லுபடியாகாது என எறிவித்திடுப்பது பெரும் கேடு விளைவிக்கக்கூடிய ஒன்றாகும். இதனை உ.பியில் ஆளும் பாஜக அரசு தொழிலாளர் சட்டங்களின் மீதான தற்காலிக இரத்தை அறிவித்திருப்பதும், பிரதமர் மோடி பேசியிருப்பதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட விசயமாகும்.
இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் உள்ள போதே; இவற்றை மாநில அரசுகள் முழுமையாக நடைமுறை படுத்தாத போதே பாரதூரமான விளைவுகளை தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இது எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கற்பனைக்கெட்டாதது. ஏனென்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது இதயத்தை அறுக்கும் எத்தனையோ நிகழ்விகள் நடந்தேறின. புலம் பெயர் தொழிலாளர்கள் சொல்லொன்னா துயரத்தில் உள்ளனர். இப்படியான தருனத்தில் இவற்றை தடைசெய்வது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என கற்பனை செய்து பாருங்கள்.
போபால் விசவாயு கசிவு நிகழ்வுக்கு பின்பாக தொழிற்சாலைகள் சட்டத்தில் முக்கிய சரத்துக்கள் இணைக்கப்பட்டன. அது தொழிலாளர் நலனையும், பாதுகாப்பையும் சட்ட அளவில் உறுதிப்படுத்துவதாய் அமைந்தது. ஆனால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது விசாகபட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தில் உற்பத்தி தொடங்கப்பட்டு ஸ்டெரின் வாயுக்கசிவால் 17க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையிலும், 5000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்ததான கோர நிகழ்வு அரங்கேறியது. தமிழகத்திலும் நெய்வெளி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த நிகழ்வும் நடந்தேறியது. இவற்றை கவனத்தில் கொண்டு இந்த சட்ட இரத்தை பார்த்தோமானால் தொழிற்சாலைகள் தொழிலாளர்களை புதைக்கும் புதைமேடுகளாய் மாற்றுவதாக தான் உள்ளது. இதில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கின்ற பொதுமக்களின் உயிரையும் வைத்து சூதாடுவதாகத்தான் முடியும்.
பெரும்பாண்மை புலம்பெயர் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் முறையாக பதிவு செய்யப்படாமலேயே தங்களது பணிகளைத் தொடர்ந்து வந்த நிலையில் ஊரடங்கு அறிவிப்பினால் அரசு கொடுத்த அற்ப உதவிகளைக் கூட பெற முடியாத நிலையிலேயே இன்று வரையிலும் இருக்கின்றனர். இவர்களை முறையாக பதிவு செய்து, புள்ளிவிவரங்களை பேனாத மைய-மாநில அரசுகள் தங்களது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், பொருப்பாளியாக தான் இருப்பதனை தட்டிக்கழிக்கவே செய்கிறது.
"வர்த்தகத்தை இலகுவாக்குவது" என்ற பெயரில் தொழிலாளர்களின் வாழ்வை நரகமாக்கப்பட்டு வருகிறது. அதில் இத்தகைய அரசின் நடவடிக்கைகள் எரியும் நரகத்தில் உலலும் தொழிலாளர்களது வாழ்வில் சேர்க்கப்படும் கொடூர தண்டனைகளாகவே மாறும். ஆகவே,
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! சனநாயக-முற்போக்கு சக்திகளே!
பார்ப்பனிய இந்துத்துவ காவி பாசிச அரசு கரோனா முகமுடியின் கீழ் நிறைவேற்றிவரும் மனித மாண்புக்கு விரோதமான, மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்ப்போம். இந்த காலகட்டத்தில் மக்கள் செயற்பாட்டாளர்கள் மீது ஏவப்பட்டு வரும் கைதுகளாகட்டும், இத்தகைய நடவடிக்கைகள் ஆகட்டும்
அனைத்தும் இந்த அரசின் மக்கள் விரோத தன்மை மட்டுமில்லாமல்; பாராளுமன்றமும், இந்த அரசு கட்டமைப்பும் அதற்காகவே அடிமுதல் முடிவரை கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை வெட்டவெளிச்சமாக்கி வருகிறது.
நம் போராட்டங்கள் அனைத்தையும் அரசியல் போராட்டங்களாக மாற்றுவோம்! அது அரசில் பங்கு கேட்பதற்கு மாறாக அரசதிகாரத்தை கைப்பற்றுவதற்கான, உழைக்கும் மக்களது உண்மையான அதிகாரத்தையும், உண்மையான ஜனநாயகத்தை நிறுவதற்கான போராட்டமாய் மாற்றுவோம்!