சோசலிச_புரட்சிக்கு_பின்னர்... சோவியத்_ஒன்றியம்
ரஷ்யபுரட்சி மேலை நாட்டு பெண்களிடையேயும் புதிய நம்பிக்கையை தோற்றுவித்தது.
1921ல் அனைத்து ரஷ்ய பெண் கம்யூனிஸ்ட் போராளிகளின் முதல் மாநாட்டில் சோவியத் பெண் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் வாழ்த்தி கிழக்கத்திய பெண்கள் என்ற அமைப்பின் பிரதிநிதி ஆற்றிய உரையில் கூறியதாவது:
"நாம் அடிமைகளாகவே பிறந்தோம்; அடிமைகளாகவே இறந்தோம். லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் வாழ்க்கையை அப்படிதான் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால்.... 1917-ல் அக்டோபர் புரட்சியின் பொழுது ஒரு "சிவப்பு நட்சத்திரம்" தோன்றியது. அதற்கு முன் நாம் அதை பார்த்ததில்லை. பெண் தொழிலாளர்களும், விவசாயிகளும் புரட்சியில் பங்கேற்றது பெண்களின் வாழ்க்கையை நிறையவே மாற்றி விட்டது.
நீண்ட காலம் நாம் அதை நம்பவில்லை. தந்தைகளும், சகோதரர்களும் நம்மை வெளியுலகுடன் தொடர்பு கொள்ள இயலாமல் செய்துவிட்டனர். சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்துள்ள பெண் தோழர்கள் நமக்கு மிகுந்த தைரியத்தையும், நம்பிக்கையையும் அளித்துள்ளனர்..."
முதல் உலகப் போர் காலத்தில் பெண்கள் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டது பின்னர் பெருமளவில் புரட்சிக்கு உதவியது. கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவு புரட்சியின் மகத்துவத்தை பரப்புவதற்கு உதவியது.
சம வேலைக்கு, சம ஊதியம், , பணியிடங்களில் பாதுகாப்பு சட்டங்கள், மகப்பேறு வசதி, தொழிற்சங்கத்தில் பெண்களின் பிரச்னைகளை விவாதித்தல் போன்ற சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. முறை தவறி பிறந்த குழந்தைகளுக்கு முழு உரிமைகள், பெண்களுக்கு விவாகரத்து கோரும் உரிமை, விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை போன்றவை உறுதி செய்யப்பட்டன.
பெண்களின் இரட்டைச் சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னாட்களில் மேலை முதலாளித்துவ நாடுகளில் சம உரிமைகளுக்கு பெண்கள் போராடியபோது சோவியத் ஒன்றியத்தின் பாலின சமத்துவ, பெண்கள் நல சட்டங்கள் அவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தன.
கல்வியில், குறிப்பாக, கணிதம், அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ கல்வியில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. விண்வெளி ஆய்வு உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பிரகாசிக்க துவங்கினர்.
முதன்முதலில் விண்வெளியில் சென்ற பெண் சோவியத் நாட்டை சேர்ந்த வாலண்டினா தெரெஷ்கோவா. விளையாட்டு துறையில் உலக அளவில் சோவியத் பெண்கள் சாதனைபுரிந்துள்ளனர்.
சோவியத் யூனியன் சிதைந்த பின்னரும் விளையாட்டு துறையில் அதில் முன்பு இருந்த நாடுகள் இன்றும் முன்னணியில் இருப்பதற்கு காரணம், சோஷலிச அரசு கல்விக்கு கொடுக்கும் அளவு முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் கொடுத்ததுதான். இலவச பயிற்சி தரப்பட்டது. குழந்தை பருவம் முதல் அவர்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து அதில் முன்னேற அனைத்து வாய்ப்புகளும் வசதிகளும் தரப்பட்டன.
இத்தகைய சாதனைகளை அவர்கள் செய்வதற்கு சோஷலிச கட்டுமானம் இல்லாமல் சாதித்திருக்கமுடியாது. கம்யூனிச எதிர்ப்பாளர்கள் கூட சோவியத் யூனியன் பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான நாடு என்று புகழ்ந்தனர்.
#கியூபா :
புரட்சிக்கு பின்னர் கியூபாவில் பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. திறமைகளை வளர்த்துக் கொள்ள பிரத்யேக பயிற்சிகள் தரப்பட்டன. சமூக பொருளாதார நிலையை புரிந்து கொள்ளும் பயிற்சிகள் தரப்பட்டன. கல்வி கட்டாயமாக்கப்பட்டு நாட்டின் உற்பத்தியில் பெண்களின் பங்கை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றில் பெண்களின் சமபங்குடன் கியூபா சாதனைகளை படைத்துள்ளது. உழைக்கும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, குழந்தைகளை பராமரிக்க, வசதிகள், போன்றவை அமுலுக்கு வந்தன. பெண்கள் தொழிற்சங்க பணிகளில் முழுமையாக ஈடுபட்டனர். தொழிற்சாலைகளில், வேலைக்கு அமர்த்துவதில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது.
1971-ல் பெண்கள் முன்னணி என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இது தொழிற்சங்கங்களில் பெண்கள் செயல்படுவதற்கான அமைப்பு ஆகும். 1980-ல் இது மகளிருக்கான துறை என்று மாற்றி அமைக்கப்பட்டது.
கியூபா பெண்களின் குரலை உரக்க ஒலிக்க செய்ய இந்தத் துறை உதவியது. பணிபுரியும் மகளிருக்கு இரட்டைச் சுமை ஏற்படுவதை கணக்கில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டன. குடும்பச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வீட்டு வேலைகளை கணவன் மனைவி இருவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.
சொத்துக்கள் இருவர் பெயரிலும் பதிவு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. விவாக ரத்து கோருவதில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு. ஒரு மாத கால அவகாசத்தில் விவாகரத்து பெற இயலும்.
சோவியத்யூனியனைப் போலவே, இங்கும், மருத்துவ கல்வி, சட்டக் கல்வி துறைகளில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிகவும் அதிகமாக இருந்தது. அரசியலிலும் பெண்கள் பங்கேற்பு சிறிது சிறிதாக அதிகரித்தது. பெண் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. சட்டமன்றங்களில் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இருப்பினும் மிக உயர்ந்த அளவில் நிர்வாகத்தில் பெண்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. 1984 கட்சி காங்கிரசில் பெண்களுக்கெதிரான அனைத்துவித பாரபட்சமும் முடிவுக்கு வர வேண்டும் என்றும், உயர் பதவிகளை வகிக்க அவர்களுக்கு எந்தத் தடையும் இருக்க கூடாதென்றும் வலியுறுத்தப்பட்டது. புரட்சிக்கு பின்னர் கியூப பெண்களின் குரல் நன்கு ஒலிக்கவே செய்கிறது.
1949-1989 வரையிலான நாற்பது ஆண்டுகள் ஜி.டி.ஆர் ஒரு சோஷலிசஅமைப்பை கொண்டதாக, திட்டமிட்ட பொருளாதாரத்தை பின்பற்றும் குடியரசாகத் திகழ்ந்தது.
இந்தக் குறுகிய காலத்தில் இந்த அரசு பெண்கள் நிலையை பெரிதும் மேம்படுத்தியது. பெண்கள் விடுதலை பெற பொருளாதார சுதந்திரம் தேவை என்பதை கணக்கில் கொண்டு, பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தது. அரசு மூன்று முக்கிய நோக்கங்களை கொண்டிருந்தது:
1. ஆண்-பெண் இருவரும் சமம். எனவே, சமத்துவத்தை நிலை நாட்டுதல்
2. உழைக்கும் பெண்களை உயர்த்துதல்.
3. தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரத்தியேக பாதுகாப்பு அளித்தல்.
முதல் பத்தாண்டுகளில் பெண்களை அந்நாட்டின் உழைக்கும் சக்தியுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உலகப்போரின் காரணமாக, பெண்கள் பெரும் எண்ணிக்கையில் உழைப்புச் சந்தைக்குள் வந்து விட்டனர்.
பெண்களுக்கான நிறைய சட்டங்கள் இந்த காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டன. பெண்களுக்கான கமிட்டிகள் அமைக்கப்பட்டன. பாசிச எதிர்ப்பு பிரச்சாரம், கலாச்சார விழிப்புணர்வு போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன.
ஜனநாயக மகளிர் அமைப்பு உருவாக்கப்பட்டு, பெண்களை ஒன்றுதிரட்டி, அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும் பணியில் முனைப்பு ஏற்பட்டது. ஆண்-பெண் சமத்துவத்தை முன்னெடுத்து செல்ல தொழிற்சங்கங்கள் நல்ல வாய்ப்பாக அமைந்தன.
தொழிற்சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை 37% [1952] என்பதிலிருந்து 53% [1988] என்று அதிகரித்தது. பெண்களுக்கு பணிகளில் பிரத்யேக பயிற்சி, பணி உயர்வுக்கான பயிற்சிகள் தரப்பட்டன. மேற்கு ஜெர்மனியின் பெண்களை விட இப்பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க சோஷலிச அமைப்பே காரணமாக அமைந்தது.
இங்கும் புரட்சிக்கு பின்னர் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே, நிர்வாக துறையில் மிக அதிக எண்ணிக்கையில் பெண்கள் இருப்பதற்கு காரணம் சோஷலிச அடித்தளம் ஆகும். சம வேலைக்கு சம ஊதியம், உழைக்கும் பெண்களுக்கு சாதகமாக ஏராளமான சட்டங்கள் திருமணம் மற்றும் குடும்ப சட்டம் போன்றவை பெண்களின் உரிமைகளை, பாதுகாப்பை, கணக்கில் கொண்டு இயற்றப்பட்டவை ஆகும்.
மக்கள் சீனத்தில் மாவோ தலைமையிலான அரசு அமைந்தவுடன், பாலின சமத்துவ கருத்துக்கள் முன்னிறுத்தப்பட்டன. விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டு. கட்டாயத் திருமணம் இல்லை. வயதுவந்த இருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், மூன்றாவது நபர் நுழைந்து அதைத் தடுக்க இயலாதபடி சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
வரதட்சிணகொடுமை இல்லை. திருமணத்திற்கு பின் சேரும் சொத்துக்களில் ஆண்-பெண் இருவருக்கும் பங்கு உண்டு 2001-ல் திருமண சட்டம் திருத்தி அமைக்கப்பட்டு, பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஷரத்துக்கள் கொண்டு வரப்பட்டு சொத்துக்கள் இருவர் பெயரிலும் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், பெண்கள் ஓரளவு ஆளுமை பெற்றவராக இருக்கின்றனர்.
1950லேயே பெண்களுக்கு விவாக ரத்து கோரும் உரிமை அளிக்கப்பட்டது. 2005-ல் குடும்ப வன்முறை குற்றமயமாக்கப்பட்டு விட்டது. இருப்பினும் முப்பது சதம் குடும்பங்களில் வன்முறை நிகழ்வுகள் நடப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை உண்டு.
எனவே, அத்தகைய சம்பவங்கள் குறைவு. பெண்கள் இரவிலும் சுதந்திரமாக நடமாட முடியும் என்பதே நம்பிக்கை அளிக்கும் விஷயமாகும். மக்கள் சீனத்தில் மக்கள்தொகை அதிகம் என்பதால், குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்படுகிறது..
அப்படி பிரச்சாரம் செய்யும் பொழுதுகூட, கணவன் மனைவி இருவரையும் அழைத்து பேசி, அதன் அவசியத்தை உணர்த்துகின்றனர். பெண்ணை மட்டும் மையமாக வைத்து குடும்ப கட்டுப்பாடு நடப்பதில்லை.
கல்வி, ஆரோக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் சீனப் பெண்கள் உலகில் முன்னணியில் இருக்கின்றனர். உழைப்புப் படையில் பெண்களின் பங்கு கணிசமாக உள்ளது.
1997 முதல் மக்கள் அனைவரும் சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மக்கள் சீனத்தில் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி குடி பெயர்தல் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. குடிபெயரும் பெண்களின் பிரத்யேக பிரச்னைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றன.
அரசியலில் பெண்கள் பங்கு என்று பார்க்கும்போது 28.4% என தெரிகிறது. எனவே, அதில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதை அந்த அரசு உணர்ந்திருக்கிறது. பாலின சமத்துவக் கருத்துக்கள் வேரூன்றி வருகின்றன. புரட்சிக்கு பின்னர் மக்கள் சீனத்தில் பெண்கள் பிரமிக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
கருத்துரையிடுக