#விசாகப்பட்டினம்_ஸ்டைரின்_வாயு_கசிவு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் இயங்கி வந்த ரசாயன ஆலையில் இருந்து ஸ்டைரின் என்ற வாயு கசிந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

#ஸ்டைரின்_என்பது_என்ன :

 

ஸ்டைரின் என்பது C8H8 என்ற வேதிச்சமன்பாடு கொண்ட வேதிப்பொருள் ஆகும். இது, பென்சீன் (C6H6) என்பதிலிருந்து பெறப்படுகிறது. தொழிற்சாலைகளில் இது திரவமாக சேகரித்து வைக்கப்படுகிறது. இது எளிதில் ஆவியாகி விடும் என்பதால், 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவாக உள்ள நிலையிலேயே இது பாதுகாக்கப்பட்டு வருகிறது. பாலிஸ்டைரின், அதிக நெகிழ்வுத்தன்மை கொண்ட பிளாஸ்டிக் ஆகும். இது குளிர் சாதன பெட்டிகள், மைக்ரோ ஓவன்கள், வாகன உதிரி பாகங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள், டிஸ்போசல் கப்புகள் உள்ளிட்டவைகளின் தயாரிப்பிற்கு பயன்படுகிறது.

 

#பாதிப்புகள் :

 

ஸ்டைரின் வாயு, மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். சுவாசித்தலில் பிரச்சனை, சுவாச கோளாறுகள், கண்களில் எரிச்சல், அஜீரணம், மூக்கடைப்பு, திடீரென்று சுயநினைவு இழத்தல், நடுக்கம் உள்ளிட்டவைகள் நமது உடல், ஸ்டைரின் வாயு உள்நுழைந்தால் ஏற்படும் பாதிப்புகள் ஆகும். சிறிதுநேரம் இந்த வாயுவை நுகர்ந்தாலே, நீண்டகால பிரச்சனைகளுக்கு நாம் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் . நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டோர் இந்த வாயுவை சுவாசிக்க நேர்ந்தால், மனக்கவலை பிரச்சனைகள் உள்ளிட்டவைகள் ஏற்பட வழிவகுக்கும்.
ஸ்டைரின் வாயு, சுவாசப்பாதையில் உள்ள சளி அடுக்குகளை முக்கியமாக பாதிக்கின்றன. விசாகப்பட்டினத்தில் நிகழ்ந்த விபத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசித்தலில் பிரச்சனை ஏற்பட்டது. அவர்களில் பலர் சுவாசிக்க முடியாமல் மரணத்தை தழுவினர்.

 

#கசிந்தது_எப்படி :

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த எல்ஜி கெம் பாலிமர்ஸ் தொழிற்சாலை, 1961ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இது முன்னதாக இந்துஸ்தான் பாலிமர்ஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. விசாகப்பட்டினம் நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள கோபாலபட்டினம் பகுதியின் RRV புரத்தில் இயங்கி வருகிறது.
2,400
டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு தொட்டியில், 1,800 டன் ஸ்டைரின் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. தொழிற்சாலைகள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்தன் பேரில், தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு பணிகள் துவங்கின. தொழிலாளர்கள், ஸ்டைரின் வைக்கப்பட்டிருந்த தொட்டியை திறக்க முற்பட்டபோது, அதிலிருந்து ஸ்டைரின் வாயு கசிந்துள்ளது. திரவமாக இருந்த ஸ்டைரின், அதிக வெப்பநிலை காரணமாக வாயுவாக மாறிய நிலையில், அது கசிந்து பரவ துவங்கியது. சேமிப்பு தொட்டி 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்ததன் காரணத்தினால், அதன் உட்புற பகுதியில் இருந்த சில வாயுக்களால், அதன் வெப்பநிலை அதிகரித்திருக்கும். இதன்காரணமாகவே, திரவம் வாயுவாக மாறி கசிந்துள்ளது. இந்த நிகழ்வை ஆட்டோ பாலிமரைசேசன் என்று அழைப்பர். இருப்பினும், வாயுகசிவிற்கான முழுக்காரணம் தெரியவில்லை. சேமிப்பு தொட்டியில் விரிசல் ஏற்பட்டு வாயு கசிந்துள்ளதா என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

-ராஜேஷ் ராஜேந்திரன்
முதுகலை வேதியியல் ஆசிரியர்