இந்துத்துவ அம்பேத்கர்’: அண்ணலைப் பற்றி அவருக்கே தெரியாத ‘கதை’ -சா.திருவாசகம் (எழுத்தாளர்)
இந்துத்துவ அம்பேத்கர்’: அண்ணலைப் பற்றி அவருக்கே தெரியாத ‘கதை’
-சா.திருவாசகம் (எழுத்தாளர்)
-சா.திருவாசகம் (எழுத்தாளர்)
தம்மால் அழிக்க முடியாத எந்தவொன்றையும் தன் வயப்படுத்திக் கொள்ளுவது என்பது பார்ப்பனியத்தின் தந்திரங்களுள் ஒன்று. அண்ணல் அம்பேத்கருக்கும் இதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவரை, அவரது சிந்தனைகளை, அவரது இந்துத்துவ பார்ப்பனிய எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத பார்ப்பனர்கள், சங்கிகள் அவரைத் தங்களுள் ஒருவராக வரித்துக் கொள்ளும் வேலைகளைச் செய்து வருகிறார்கள். அவற்றின் ஒருபகுதிதான் ’இந்துத்துவ அம்பேத்கர்’ போன்ற குப்பை நூல்.
இப்படியான குப்பை நூலைக் கூட எச்.ராஜா, இல.கணேசன், எஸ்வி.சேகர், காயத்திரி ரகுராம் போன்ற பார்ப்பனர்களும் பாஜகவிலுள்ள இன்னபிற சூத்திரர்களும் எழுத மாட்டார்கள். எழுதவும் இயலாது. அவ்வளவு அறிவு அவர்களுக்கேது? அவர்களுக்கெல்லாம் இருப்பது வாய் மட்டுமே. அதை வைத்து அவர்கள் அதிகாரம் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள்போலன்றி அருமை சகோதரர் ம.வெங்கடேசன் அறிவுச் செயல்பாட்டில் இறங்க முனைந்திருக்கிறார். அவருடைய முனைப்பிற்கு என் பாராட்டுக்கள். எதிர் முனையிலிருந்தாலும் அறிவு மரபைச் சேர்ந்தவரல்லவா?
அம்பேத்கரின் எழுத்துகளில் சிக்குண்டு கிடக்கும் இந்துத்துவ கருத்துக்களை வெட்டி, ஒட்டி அவரைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கும் வெங்கடேசன், ஒரு கட்டத்தில் சாவர்க்கரைப் பற்றி எழுத தொடங்கி விடுகிறார் இந்நூலில்.
அதாவது சாவர்க்கருக்கும் அண்ணலுக்கும் இடையே இருந்ததாக சங்கிகள் நம்பும் ’உன்னதமான நட்பை’ பற்றி எழுதித் தள்ளுகிறார். ஒருகட்டத்தில் அண்ணலும் சாவர்க்கரும் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் போன்றதொரு முகம்பார்க்கா நட்பினராக இருந்தனர் என்கிற அளவிற்கு வெங்கடேசன் கதைவிட்டுள்ளார்.
நல்ல வேளை அண்ணலும் சாவர்க்கரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் எதுவும் இல்லை என அவரே சொல்லி விட்டார். இருந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் சொல்லித் தொலைத்திருப்பார்களோ! (வருங்காலத்தில் அண்ணலும் சாவர்க்கரும் இந்துமாகா ஜன சங்கத்தில் சந்தித்த அரிய புகைப்படம் ஒன்றை அவர்கள் உருவாக்காமல் இருக்க வேண்டுமென இப்போதே ’திக்’கென அடித்துக் கொள்கிறது.)
சரி புத்தகத்திலுள்ள ஒரு கதைக்கு வருவோம்.
காந்தியாரைக் கொன்ற வழக்கில் சாவர்க்கர் கைது செய்யப்படுகிறார். அந்த வழக்கில் சாவர்க்கர் சார்பில் வாதாடிய வழக்குரைஞரின் பெயர் போபட்கர். அவர் சொன்னதாக வரலாற்றில் இடம் பெறவிருக்கும் கதை இது. இனி வருவன வெங்கடேசனின் நூலிலிருந்து…
”சாவர்க்கர் வழக்கு வெற்றிகரமாக முடிந்து சாவர்க்கர் விடுதலை ஆகிறார். வழக்கை வெற்றிகரமாக முடித்த பிறகு, போபாட்கர் பூனேவிற்குச் சென்ற போது, அவரது நண்பர்கள் அவருக்கு ஒரு விருந்து கொடுத்தனர். அப்பொழுது, எப்படி வழக்கில் வென்றீர்கள் என்று கேட்டபோது. வழக்கில் கோட்சே மீதுதான் குறிப்பாக, தெளிவாக குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. ஆனால், சவர்கரின் மீது அத்தகைய குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இல்லை. இப்பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.
“அன்னா சாஹெப் போபட்கர் பேசுகிறேன்”
“நான் டாக்டர் அம்பேத்கர் பேசுகிறேன். இன்றைக்கு 6.30 அளவில் (மதுரா) ரோடில் ஆறாவது மைல்கல் அருகில் வந்து என்னை சந்திக்கவும்”
போபட்கர் அதற்கு பதில் சொல்லும் முன்னரே தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மாலை போபட்கர் தனது காரில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றார். ஆனால், அவருக்கு முன்பே அங்கு அம்பேத்கர் இருந்தார். காரை அவரே ஓட்டி வந்திருந்தார், ஏனெனில் கூட யாரும் இல்லை.
அம்பேத்கர், அவரை காரில் ஏறுமாறு சைகை செய்தார். காரை ஓட்டிக் கொண்டு ஒரு மைல் தூரம் சென்று நிறுத்தினார். பிறகு, அவர் போபட்கரைப் பார்த்துச் சொன்னார்:
“உங்களுடைய கட்சிக்காரர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. பிரயோஜனம் இல்லாத ஆதாரங்களை வைத்துக் கொண்டு வழக்கை ஜோடித்திருக்கிறார்கள். அமைச்சரவையில் உள்ள பலர் வெறும் சந்தேகத்தின் பெயரால் சாவர்க்கர் மீது குற்றம் சாட்டக்கூடாது என்ற கருத்துள்ளது. ஆனால், மிகப்பெரிய தலைவர் ஒருவரின் பிடிவாதத்தினால் அவரும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறார். தைரியமாக நீங்கள் வழக்காடுங்கள். நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”, என்று சொல்லி முடித்தார்.
அதற்குப் பிறகு, அவர், காரைத் திருப்பி ஓட்டி வந்த இடத்திற்கே திரும்ப வந்து, என்னை விட்டுவிட்டுச் சென்றார்”
இதுதான் நூலிலிருக்கும் அந்த கதை. எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? இந்த கதையின் மூலமாக வெங்கடேசன் சொல்ல வருவது, சாவர்க்கரின் விடுதலையில் அண்ணல் அவ்வளவு அக்கறை கொண்டிருந்தார். ஏனெனில், இந்துமதத்தின் மீதுதான் அண்ணலுக்கு எவ்வளவு பற்று! அதனால்தான் ஏதோ ஜெய்சங்கரின் படங்களில் வருவது போல போன் செய்வதும் ஏதோவொரு இடத்திற்கு வர சொல்வதும்… காரில் காத்திருப்பதும்… வாரே வா.. என்னா ஒரு சீன்?
சரி இந்த சீனுக்கு என்ன சான்று வைத்திருக்கிறார்கள் என்று தேடினால் ஏதோவொரு இணையதள கட்டுரையைக் காட்டுகிறார் வெங்கடேசன். சரி என்று அந்த இணைய தளத்தில் சென்று தேடினால் கதை இன்னும் நீள்கிறது.
(கைக்கு வந்ததை எதனா ஒளறிட்டுப் போயிருங்கடா. நாங்க வேலை மெனக்கெட்டுத் தேடி மடியுறோம்.)
போபாட்கர் என்கிற வக்கீல் மேலும் சொல்கிறார்,
“இதை யாருக்கும் சொல்லக் கூடாது. ஏனெனில், அப்படிச் செய்தால் பாபாசாஹேப் அம்பேத்கருக்குத் துரோகம் செய்வது போல ஆகும்”, என்றும் தனது நண்பர்களுக்கு எச்சரித்தார். இது ஜனவரி 10, 1949ற்கு முன்பாக நடந்திருக்க வேண்டும். ஏனெனில், இந்நாளில் சவர்க்கார் விடுவிக்கப்பட்டார். இதேபோலத்தான், கோட்சேவின் இறுதி வாக்குமூலமும் ரகசியமாகக் காக்கப்பட்டது. யாருக்கும் வெளிப்படுத்தப் படவில்லை.
நேரு காலமாகிய பிறகு போபட்கர் அம்பேத்கர் சந்திப்பு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன. மே 27, 1964 அன்று ஜவஹர்லால் நேரு காலமானார். அதுவரை, இந்த விஷயம் வெளியில் சொல்லப்படவில்லை. எஸ்.ஆர்.டதே என்பவர் ஆசிரியராக இருந்த “கல்” என்ற மராத்திய நாளிதழில் ஜூன் 16, 1983ல் முதன் முதலாக இவ்விரங்கள் வெளியிடப்பட்டன. பிறகு பிப்ரவரி 16, 1989ல் வெளியிடப்பட்ட, சவர்கர் நினைவு புத்தகத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. இவை சுருக்கமான விவரங்கள் தாம் என்று மனோஹர் மல்கோங்கர் (1913-2010) என்பவர் மே 16, 1999ல் “டிரிபியூன்” நாளிதழில் எழுதும் போது வெளியிட்டுள்ளார். இவர் ஒரு பிரபலமான ஆங்கில எழுத்தாளர் ஆவர். தவிர மேலும் விவரங்களை “காந்தியை யார் கொன்றது” என்ற அவருடைய புத்தகத்தில் காணலாம்.”
இதுதான் அந்த சான்று. அதாவது அண்ணல் இருக்கும்வரை எங்கும் எவராலும் சொல்லப்படாத உண்மை, நேரு இருக்கும் வரை எங்கும் எவராலும் சொல்லப்படாத உண்மை. 1983ல் தான் முதல் முறையாகச் சொல்லப்படுகிறது. அதுவும் எந்த எழுத்து ஆவணங்களுமின்றி. இந்த ’வரலாற்றுக் கதை’க்கு அந்த இணையதளத்தில் ஒரு படம் இணைத்திருக்கிறார்கள். அதுதான் காமெடி. ஒரு கார். அதன் அருகில் அந்த வக்கீல் அருகில் அண்ணல். இதுதான் சான்று, ஜெய்சங்கர் படமேதான்.
இப்படியான வாய்மொழிக்’கதை’களுக்கும் வெட்டி ஒட்டுதல் படங்களுக்கும் வரலாற்றில் இடம் இல்லை என்பது தெரிந்தே தான் இந்த பித்தலாட்டங்களையெல்லாம் செய்கிறார்கள். இதெல்லாம் பூர்வ சங்கிகளின் பித்தலாட்டம். வெங்கடேசன் போன்ற அறிவுச் செயல்பாட்டை நம்புபவரும் இதே காப்பியை அடிக்கலாமா?
சீமானைக் கவனியுங்கள், எவ்வளவு உஷார் ஆசாமி. அன்னார் இப்போது அடித்து விட்டுக் கொண்டிருக்கும் எல்லா கதைகளுக்கும் முன்னதாகவே ஒரு போட்டோ தயார் செய்து கொண்டார். நாம நம்பலானாலும் அதான் நெசம். ஆனால், போட்டோஷாப்பின் வீரியம் தேர்ந்த சங்கிகள். அண்ணல் விஷயத்தில் சற்றே கவனக்குறைவாக இருந்து பின் தங்கி விட்டார்கள் போல. இப்போது மாட்டிக் கொண்டு அவமானப்படுகிறார்கள், இதெல்லாம் புதுசா அவர்களுக்கு. தொடைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.
இந்நூலில் இன்னும் ஏகப்பட்ட பொய்கள். அவற்றையெல்லாம் வரிசைப்படுத்த அவகாசமில்லை. மேலும் இந்த ஒரு பருக்கைப் பொய் போதாதா? நூல் முழுக்கவே உடான்ஸ் என அறிய.
இதிலுள்ள பல பொய்ச் செய்திகளுக்குச் சான்றாகச் சகோதரர் வெங்கடேசன் காட்டுவது ஆர்எஸ்எஸ் தரப்பு நூல்களையும் தனஞ்செய் கீர் எழுதிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நூலையும். ஆர்எஸ்எஸ் தரப்பு நூல்களை விட்டு விடலாம். அது அவர்கள் ஏரியா. எப்படியும் காட்டுத்தனமாக அடித்து விளையாடி இருப்பார்கள். ஆனால், தன்ஞ்செய் கீர் எழுதிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலை அப்படி எடுத்துக் கொள்ள முடியுமா என தெரியவில்லை.
ஆனால் வேறொன்றைச் சொல்ல முடியும். அண்ணலின் வாழ்க்கை வரலாறு எழுதிய இதே தனஞ்செய் கீர் தான் சாவர்க்கரின் வரலாற்றையும் எழுதியுள்ளார். எனில் எவ்வளவு வரலாற்றுப் புரட்டுகள் இருக்கும் என கணிக்க முடியும்? நம்பகமான அண்ணல் வாழ்க்கை வரலாறு இனிதான் எழுதப்பட வேண்டும். யார் எழுதுவார்கள். பார்க்கலாம்.
ரங்கநாயகம்மா என்றொரு ஆந்திர அரை டிக்கெட்டு அண்ணலை விமர்சித்து எழுதிய குப்பை புஸ்தகத்திலிருந்த ( புத்தர் போதாது அம்பேத்கர் பத்தாது…. ) பொய்களையும் தவறுகளையும் முதன்முதலில் கண்டறிந்தது நான்தான். அந்த புத்தகம் எழுதப்பட்டு சுமார் இருபது ஆண்டுகள் ஆந்திராவில் யாரும் அவற்றைக் கண்டறியவில்லை. தமிழில் வெளியான போதும் அதிலுள்ள தவறுகளை எவரும் சுட்டிக் காட்டவில்லை. சும்மாவே ஆய் ஊய் என வாதித்துக் கொண்டிருந்தார்கள். நான்தான் அதிலுள்ள தவறுகளைக் கண்டறிந்து சொன்னேன். அண்ணல் குறித்த நம் வாசிப்பின் போதாமை அவ்வளவு இருக்கிறது என்பதை நேர்மையாக ஒத்துக் கொள்ளவே வேண்டும். அண்ணலை வரித்துக் கொள்ள முனையும் வெங்கடேசனின் இந்த நூலில் உள்ள பொய்களையும் காமெடிகளையும் நானே சுட்டிக் காட்டுகிறேன். விரிவாக எழுதுபவர்களுக்குப் பயன்படும்.
இவரெல்லாம் ஒரு ஆளா, இதெல்லாம் ஒரு நூலா என ஒவ்வொன்றையும் கடந்து செல்ல நினைத்தால் நாம் அண்ணலை இழக்க நேரிடலாம். ஆகவே, கொசு சைஸ்களாகவே இருந்தாலும் அடித்து விட வேண்டும் வெங்கிகளையும் சங்கிகளையும்.
கருத்துரையிடுக