ஈழம் மெய்ப்படும் …. (11)

ஈழம் மெய்ப்படும் …. (11)
++++++++++++++++++++++++++++++
தோழர்கள் கொளத்தூர் மணி, சுபவீ., பெ. மணியரசன் ஆகியோரின் அறிக்கைகளை முன்வைத்து…
++++++++++++++++++++++++++++++++
ஏதாவது ஒன்றை அல்லது யாராவது ஒருவரை மறக்கத் தீர்மானித்தால் அது அல்லது அவர் எப்போதும் நினைவுக்கு வந்து கொண்டே இருப்பது இயல்புதான். தோழர் பெ. மணியரசன் தந்தை பெரியாரை மறக்க வேண்டும், மறக்கடிக்க வேண்டும் என்று தீர்மானித்து, அவரையே நினைத்துக் கொண்டும் நினைவுபடுத்திக் கொண்டும் இருக்கிறார். கீழடி என்றாலும் ஈழம் என்றாலும் பெரியாரை இழுத்தாக வேண்டும்!
ஈழத் தமிழர் இனவழிப்பில் இந்தியாவின் பங்கு என்ன? இந்தியா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியுமா? என்ற விவாதத்தில் பெரியார் எப்படி வருவார்? தோழர் பெ.ம. வரவழைத்தாக வேண்டும் என்று இறங்கிய பின் வராமல் இருக்க முடியுமா?
”இந்தப் பாதையெல்லாம் திராவிடத் தந்தை பெரியார் வகுத்துக் கொடுத்த பாதைதான்!” என்று தொடங்கிப் பெரியாரின் அரசியல் நிலைப்பாடுகளில் காணப்பட்ட முரண்பாடுகளைப் பட்டியலிடுகிறார். இவை குறித்து இந்தத் தலைப்பின் கீழ் பேசத் தேவையில்லை என்று கடந்து போகிறேன். தந்தை பெரியாரைத் திறனாய்வுக்கு அப்பாற்பட்டவராக நான் கருத வில்லை. அவரே இப்படிக் கருதிக் கொள்ளவில்லை.

இந்தத் தலைப்புக்கு உட்பட்ட குற்றாய்வுகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
தோழர் பெ. மணியரசன் சொல்கிறார்:
--- 1970களின் தொடக்கத்தில் தந்தை செல்வா அவர்கள், சென்னையில் பெரியாரை சந்தித்து தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கோரிய போது, “நானே இந்தியாவுக்கு அடிமையாக இருக்கிறேன்; ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலைக்கு எப்படி உதவ முடியும்” என்று விடை கூறி, ஈழத்திற்கு ஆதரவு தர மறுத்தவர் பெரியார் ---
1972ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் ஈழத் தந்தை செல்வா (எஸ்,ஜெ.வி. செல்வநாயகம்) தலைமையிலான ஒரு குழுவினர் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியாரைச் சந்தித்தார்கள் என்பது உண்மை. அப்போது செல்வா பெரியாரிடம் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கோரினாராம்! ”நானே இந்தியாவுக்கு அடிமையாக இருக்கிறேன், ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலைக்கு எப்படி உதவ முடியும்” என்று விடை கூறி ஈழத்திற்கு ஆதரவு தர மறுத்து விட்டாராம்!
செல்வாவுக்கும் பெரியாருக்கும் நடுவில் இப்படி ஓர் உரையாடல் நிகழ்ந்தது என்பதற்கு பெ. மணியரசன் எவ்விதச் சான்றும் தரவில்லை. இத்தனைக்கும் இந்த உரையாடலை அவர் நேர்க்கூற்றாகவே எடுத்துக்காட்டுகிறார்.
“தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கொடுக்காமல், ஒதுங்கிக் கொள்வதற்காக – தந்திரமாக ஓர் அடிமை இன்னொரு அடிமையின் விடுதலையை எப்படி ஆதரிக்க முடியும் என்று கேட்டு ஆதரவு தர மறுத்துள்ளார்” என்று இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டைச் சொல்வதற்கு முன் தரவுகளை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டாமா?
1972ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தந்தை செல்வாவே இன்னும் தமிழீழ விடுதலை கோரவில்லை. அப்படியிருக்க, தான் கேட்காத விடுதலைக்குப் பெரியாரிடம் ஆதரவு கேட்டார் என்பது நம்பும் படியாகவா உள்ளது?
1970ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயகா உலகத்தின் முதல் பெண் தலைமையமைச்சர் என்ற புகழோடு இலங்கையின் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது வரை டொமினியனாக இருந்த சிலோன் நாட்டை சிறிலங்கா குடியரசாக மாற்றும் பொருட்டு புதிய அரசமைப்பை நிறைவேற்றத் திட்டமிட்டு அதற்காக நாடாளுமன்றத்தை அரசமைப்புப் பேரவையாக அறிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வாவும் பிற தமிழ்த் தலைவர்களும் இது பழைய சோல்பரி அரசமைப்பின் சிறுபான்மைப் பாதுகாப்பை நீக்கி விட்டு, தமிழர்களுக்கு எதிரான தேசிய இன ஒடுக்குமுறைக்குச் முழுச்சட்ட வடிவம் கொடுக்கும் சூழ்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்டு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
தந்தை செல்வா தலைமையிலான தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்கள் இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அரசமைப்புப் பேரவை (UNCONSTITUTIONAL CONSTITUENT ASSEMBLY) என்று அறிவித்து விட்டு வெளியேறினார்கள். இந்தப் பின்னணியில்தான் தந்தை செல்வா தலைமையிலான குழுவினர் சென்னை வந்து தந்தை பெரியாரையும், அப்போதைய முதலமைச்சர் கலைஞரையும், காங்கிரஸ் பெருந்தலைவர் காமராசரையும் சந்தித்தார்கள். ஒவ்வொருவரிடமும் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. வேறு யாரையும் சந்தித்தார்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்? என்றும் தெரியவில்லை.
ஆனால் செல்வா விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டிருப்பார் என்று நம்ப முடியவில்லை. ஏனென்றால் அப்போது அவரோ இலங்கைத் தமிழரசுக் கட்சியோ வேறு தமிழமைப்புகளோ விடுதலைக் கோரிக்கையை முன்னிறுத்தவில்லை.
பார்க்கப் போனால் சிறிலங்காவின் குடியரசு அரசமைப்புச் சட்டமே 1972 மே 22ஆம் நாள்தான் சாற்றப்பட்டது. செல்வா சென்னை வந்த நேரம்
அது பற்றிய விவாதம்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இறுதியில்
அது இயற்றப்படுவது உறுதி என்பதால்தான் அப்போதே தமிழ் அமைப்புகள் அதற்கெதிரான பரப்புரையை நடாத்தத் தொடங்கின, அதன் பகுதியாகத்தான் செல்வா குழுவினர் சென்னை வந்து பெரியாரையும் மற்றத் தலைவர்களையும் சந்தித்தனர்.
1972 மே 4ஆம் நாள் இலங்கைத் தமிழரசுக் கட்சி, சிலோன் தொழிலாளர் காங்கிரஸ், அகில சிலோன் தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் அரசியல் அமைப்புகள் கூடி தமிழர் ஐக்கியக் கூட்டணி (TUF) அமைத்தன. செல்வநாயகம், எஸ். தொண்டைமான், ஜிஜி பொன்னம்பலம் ஆகியோரின் கூட்டுத் தலைமை அறிவிக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு விடுதலைக் குறிக்கோளை ஏற்ற போது தமிழர் ஐக்கியக் கூட்டணியின் பெயர் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF) என்று மாற்றப்பட்டது. 1976 மே 14 வட்டுக்கோட்டை மாநாட்டில்தான் தமிழீழத் தனியரசு கோரிக்கைக்கான தீர்மானம் இயற்றப்பட்டது.
எப்படி 1972 பிப்ரவரி மாதம் சென்னை வந்த போதே தந்தை செல்வா ஈழ விடுதலைக்கு ஆதரவு கேட்டிருக்கவும், தந்தை பெரியார் தந்திரமாகப் பேசி ஆதரவு தர மறுத்திருக்கவும் முடியும்?
பெரியார்-செல்வா சந்திப்பில் என்ன நடந்தது? அப்போது வெளிவந்த விடுதலை ஏடு வெளியிட்டுள்ள செய்தி இது:
---- விடுதலை 22.02.72 – இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் அவர்கள் இன்று தந்தை பெரியார் அவர்களைச் சென்னையில் பெரியார் திடலில் சந்தித்து உரையாடினார். அவருடன் இலங்கைத் தமிழரசுக் கழகப் பொதுச் செயலாளர் திரு அமிர்தலிங்கம், மாதர் அமைப்புச் செயலாளர் திருமதி மங்கையர்கரசி அமிர்தலிங்கம், முன்னாள் இலங்கை திமுக பொதுச் செயலாளர் திரு மணவை தம்பி ஆகியோரும் இன்று காலை 11 மணியளவில் தந்தை பெரியார அவர்களைச் சந்தித்து வணக்கம் தெரிவித்துச் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இலங்கையில் உள்ள நிலை குறித்து விவரமாகக் கேட்டறிந்த பின் அவர்களது உரிமைபூர்வமான கோரிக்கைக்குத் தமது இயக்கத்தின் அனுதாபமும் ஆதரவும் எப்போதும் உண்டு என்பதைத் தந்தை பெரியார் அவர்கள் தெரிவித்தார்கள் ---
போதுங்களா? நடந்தது இவ்வளவுதான்! செல்வாவும் பெரியாரும் இரகசியமாகச் சந்தித்திருப்பார்களோ? அந்த இரகசியச் சந்திப்பின் விவரத்தைத்தான் தோழர் பெ, மணியரசன் வேறு சான்றுகளோடு சொல்கிறாரோ? அவர்தான் விளக்கமளிக்க வேண்டும்.
1948-49 மலையகத் தமிழர் குடியுரிமை-வாக்குரிமைப் பறிப்பு, 1956 தனிச் சிங்களச் சட்டம், 1958 இனவதை (இனக்கொலை என்றே அண்ணா சொன்னார்) அடுக்கடுக்கான ஒப்பந்தங்களும் ஒப்பந்த மீறல்களும், எல்லாவற்றுக்கும் உச்சமாக புதிய சிங்கள இனநாயக அரசமைப்பு (1972) – இத்தனைக்குப் பிறகும் விடுதலை, தனிநாடு என்ற எண்ணம் வரமலா போயிருக்கும்? இலங்கைக் கூட்டாட்சியில் தமிழர் சுயாட்சிக்கான போராட்டம் 1949ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. தந்தை செல்வாவுக்கு முன்பே தமிழீழத் தனியரசு கேட்க வேண்டும் என வலியுறுத்தியவர் மூத்த தலைவர் நவரத்தினம். ஆனால் செல்வா அதை ஏற்கவில்லை. காலம் கனியட்டும் என்று காத்திருந்தார். பெரியாரை சந்திக்கும் காலம் வரை செல்வாவின் கோரிக்கை சுயாட்சியாகத்தான் இருந்தது. ஆனால் தனிநாடு நோக்கிக் காலம் தமிழர்களை நகர்த்திச் செல்வதை அவர் அறிந்தே இருந்தார். பெரியாரைச் சந்தித்த மறுநாள் விடுதலை ஏட்டுக்குப் பேட்டியளிக்கிறார்.
--- விடுதலை 23.02.72
கே - மாநில சுயாட்சி கிடைக்கவில்லை என்றால், வங்க தேசம் போல தனி நாடு கோரிக்கையை வற்புறுத்துவீர்களா?
செல்வா - தனி நாடு கேட்க வேண்டும் என்று சிந்திக்கும் கட்டத்துக்குத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ---
மாநில சுயாட்சிதான் அதுவரைக்குமான கோரிக்கை. தனிநாடு என்பது சிந்தனை.
உண்மையில் நீங்களும் அடிமை நானும் அடிமை என்று பெரியார் சொல்லியிருந்தால் என்ன பிழை? அப்படிச் சொன்னால் விடுதலைக்கு ஆதரவில்லை என்று பொருளாகி விடுமா? இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் தமிழர்கள் அடிமைகளாகத்தான் இருக்கிறோம் என்று நாம் சொல்வதில்லையா? நாம் இப்போது சொல்வதைக் காட்டிலும் அப்போதே பெரியார் சொன்னார் என்பது பெருமையல்லவா?
தமிழீழப் போராட்டம் பற்றிய பார்வைக் குறை என்று தோழர் சுபவீ தொடர்பாகச் சொன்னேன் அல்லவா? தோழர் பெ. மணியரசனிடமும் இதே குறை காணப்படுகிறது. சொல்கிறேன்.
+++++++++++++++++++++++++++++(தொடரும்) ++++++++++தியாகு++++++++