காற்றில் கலந்த தேவதை
இன்னும் ஜீரணிக்கவே முடியவில்லை இந்த மரணத்தை... வயித்தெறிச்சல் தான் அதிகமாகிறது செளந்தர்யாவின் முகத்தை பார்க்க.. பார்க்க.. மனம் பதைபதைத்து விடுகிறது!
அமைதியான தோற்றம், லட்சணமாக முகம், பார்த்ததுமே மனசுக்குள் வந்து ஒட்டிக் கொள்ளும் உருவம்... இப்படிப்பட்ட நடிகையை தமிழில் அறிமுகம் செய்ததற்காக, எங்கள் குடும்பத்தின் பல வருட கால நண்பரும், இயக்குனருமான ஆர்வி உதயகுமார் அவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.. எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.
"பொன்னுமணி" - சௌந்தர்யாவின் முதல் படம்.. தமிழகமே அதுவரை அறிந்திராத ஒரு நடிகையின் திறமை மீது அபரிமிதமான நம்பிக்கையை வைத்து, கனமான கேரக்டரை தந்திருந்தார் டைரக்டர்.. சௌந்தர்யாவின் நடிப்பிலும், உதடு சுழிக்கும் சிரிப்பிலும் அந்த படத்திலேயே நம் மக்கள் விழுந்து விட்டனர்.
இவரது திறமைக்கும், நடன அசைவுகளுக்கும், சொக்கி போகும் அழகுக்கும் ஏராளமான படங்கள் அடுத்தடுத்து குவிந்தன.. அந்த பரிதாபமான முகம் "அம்மன்", "படையப்பா" படங்களுக்கு கனகச்சிதமாக பொருந்தியது.
பார்த்திபனின் தனித்துவமான படங்களில் கவித்துவமான படம் "இவன்".. கர்நாடக இசை பாடகி கேரக்டர் என்பதால், அவர்களை போலவே டிரெயினிங் எடுத்துக்கிட்டுதான் நடிக்கவே ஆரம்பித்துள்ளார். அதில் ஒரு பாட்டில் நிறைய ஸ்வரங்கள் வரும்.. "அந்த ஸ்வரங்களை பேப்பரில் எழுதி கேமிரா முன்பு வைக்கிறோம், அதை பார்த்து வாயசைத்து விடுங்கள்" என்று படக்குழுவினர் சொன்னார்களாம்.. ஆனால் செளந்தர்யா அதனை ஏற்றுக் கொள்ளாமல், அந்த பாடல் வரிகளை முழுசுமாக மனப்பாடம் செய்துவிட்டுதான் வாயசைத்து நடித்தாராம். ஸ்கிரீனில் இதை பார்த்த இளையராஜாவும் பாராட்டி உள்ளதாக பத்திரிகைகள் அப்போது குறிப்பிட்டன!
எத்தனையோ பேருக்கு, ஸ்வரங்கள் பாடும்போது, குறிப்பாக ஸ்வரங்கள் வரும்போது லாங் ஷாட் வைத்து அந்த சீனை எடுப்பதை பார்த்திருப்போம்.. ஆனால் சங்கீதம் முறைப்படி படிக்காமல், அதே சமயம் இயல்பாகவும், தத்ரூபமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, அத்தனை கஷ்டமான ஸ்வரங்களையும் மனப்பாடம் செய்து நடித்த அந்த டெடிகேஷன் தலைவணங்கக்கூடியது!
இயல்பாகவே அடக்கத்தனமும், எளிமையும் சௌந்தர்யாவிடம் குடிகொண்டிருந்தது.. கெத்து, திமிர், தலைக்கணம் போன்ற நெகட்டிவ் வார்த்தைகளுக்கு துளியும் சம்பந்தமில்லாதவராக இருந்திருக்கிறார்.
இதுவரை செளந்தர்யா பற்றி பேசியவர்கள் அனைவருமே சொல்லி சிலாகித்த விஷயம் அவரது பாசம்தான்.. ஏதோ நடிக்கிறோம், சம்பாதிக்கிறோம் என்ற சராசரிகளை தாண்டி சக நடிகர்களிடம் இவரது பாசம் இறுக்கி பிடித்துள்ளது.. சகோதரி பாசத்தில் இவரிடம் கட்டுண்டு கிடந்தவர்கள் ஏராளம்!
டைரக்டர் ஆர்வி உதயகுமாரை முதல் படத்திலேயே "அண்ணன்" என்று கூப்பிட ஆரம்பித்தவர் இறுதிவரை அப்படியேதான் கூப்பிட்டு வந்துள்ளார்.. அப்படியேதான் பாவித்தும் வந்துள்ளார்.. மிகசிறந்த ஆசானாக வாழ்நாள் முழுவதும் கருதி வந்துள்ளார்.. இவர் இறந்ததும் துக்கம் விசாரிக்க வீட்டுக்கு சென்றபோது, கிரகம்பிரவேசம் செய்த அந்த புதுவீட்டில் தன் படத்தை வைத்திருந்ததை கண்டு அங்கேயே நொறுங்கிபோய் அழுதிருக்கிறார் ஆர்வி உதயகுமார்... இதை பலமுறை, பல தருணங்களில் உருக்கமாக பதிவும் செய்துள்ளார்.. தனக்கு வாய்ப்பு தந்ததற்காக என்றில்லாமல் மானசீகமாகவே அண்ணனாக வரித்து கொண்டு வாழ்ந்த நன்றிக்குரிய பிறவி சௌந்தர்யா!
இவரது மென்மையான குணம், ஏழை, ஆதரவற்ற குழந்தைகள் படிப்பதற்காக 3 ஸ்கூல்களை நிறுவ காரணமாக இருந்திருக்கிறது.. தன்னுடைய அப்பாவின் பெயரில் பெங்களூருவில் இந்த ஸ்கூல்களை நடத்தி, அதில் ஏராளமான குழந்தைகளையும் படிக்க வைத்து வந்தார்.. இப்போதும் அந்த பள்ளிகளில் பல பிள்ளைகள் சௌந்தர்யாவின் புண்ணியத்தால் படித்து வருகின்றனர்.
இறுதிவரை துளியும் ஆபாசமோ, அருவெறுப்போ இன்றி, கண்ணியமாகவே நடித்து முடித்துள்ளார் சௌந்தர்யா.. இவரது மரணத்தை நினைத்தாலே மனசெல்லாம் கனமாகி விடுகிறது.. தென்றலென மிதந்து வந்த அந்த தேவதை திடீரென காற்றில் கரைந்துவிட்டது இதயத்தை பிசைந்தெடுத்து விடுகிறது! சொந்தமுமில்லை, பந்தமுமில்லை என்றாலும் ஏதோ ஒன்றில் நம்மை கட்டியிழுத்துவிட்டார் சௌந்தர்யா.. குறுகிய காலத்தில் வென்றும் விட்டார் நம் மனதையும்... மரணத்தையும்!

கருத்துரையிடுக