அகந்தை அகல வேண்டும்

நூறாண்டு ஆச்சு. கம்யூனிஸ்ட் இயக்கம் ஏன் வளரவில்லை? என்பதைப் பற்றிய அக்கறையில் இருந்து யாராவது எழுதினால் உடனே உதிரி, சுதந்தர எழுத்தாளர் என்று முத்திரை குத்துவதில் சிலர் முனைப்பாக உள்ளனர்.
இது என்ன அணுகுமுறை . கட்சி என்ற அமைப்பு வடிவத்தை யாரும் மறுக்கவில்லை. அவரவர் ஏதோ ஒரு அமைப்பில் செயல்பட்டுக் கொண்டு தானிருக்கிறார்கள். இதில் சிறிய அமைப்பு, பெரிய அமைப்பு என்ற அகம்பாவம் வேறு. இந்த பெரியண்ண மனோபாவம் எதற்கு?
சரி! இன்றைய புரட்சிகர கட்சிகளின் அமைப்பு வலிமை தெரியாதா? 4 பேர் சேர்ந்தால் தலைமைக் குழு . 40 பேர் சேர்ந்தால் ஆர்ப்பாட்டம். 400 பேர் சேர்ந்தால் மாநாடு . இது தானே இன்றைய புரட்சிகர இயக்கங்களின் நிலை. இதிலென்ன ஒருவர் A கிரேடு, மற்றவர் B கிரேடு.
அகந்தை கொண்டு, மாற்று அணிகளை நேசிக்கக் கூட தெரியாதவர்கள் எப்படி கம்யூனிஸ்டாக இருக்க முடியும்? மாற்று அணிகளை விடுங்கள், நேற்று வரை ஒரே அமைப்பில் இருந்து கொண்டு, கொள்கைக்காக போராடி ஒன்றாக மடிவோம் என்று களமாடியவர்கள், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டால், இவர்களின் ஏச்சும் பேச்சும் வசவும் இருக்கிறதே, சொல்லி மாளாது. சகிக்க முடியவில்லை. வார்த்தைகளை வாளாக்கி, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள். ஒரு வேளை இவர்களிடம் அதிகாரம் கிடைத்து இருந்திருந்தால், மாற்று சிந்தனையாளர்களைச் சுட்டுப் பொசுக்கித் தள்ளியிருப்பார்கள்.
இவ்வளவு அதிகார மனோபாவத்தை தன்னகத்தில் இருத்திக் கொண்டு தான், இவர்கள் முதலாளிய அதிகாரத்தை விமர்சிக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு மாவோ சொல்கிறார்,
"மக்களை நேசி!
அணிகளை நேசி! அகந்தையை அழி!
அன்புடன் ஊழியம் செய்!"
இது கம்யூனிஸ்டுகள் கொள்ள வேண்டிய பண்புகள். இன்று ஏதாவது ஒரு அமைப்புத் தோழரிடம் மற்ற அமைப்பு குறித்தோ அல்லது மாற்றுக் கருத்து உள்ள தோழர் குறித்தோ உரையாடிப் பாருங்கள். நமது தோழர்களின் மனோநிலை புரியும். "அவனுக்கென்ன மயிரா தெரியும், நாங்களெல்லாம் புரியாதா தியாகங்களா?" என்று தான் பேசவே தொடங்குவார்கள்.
மாற்றுக்கருத்து இருந்து விட்டாலே போதும். உடனே, "திரிபுவாதி, சந்தர்ப்பவாதி, பிழைப்புவாதி" என்ற முத்திரைகள் வேறு. ஒருவரை இடதுசாரி வட்டதிலிருந்து வெளியேற்ற வேண்டுமா? வேறு ஒன்றும் செய்ய வேண்டாம், "அவன்
பின்நவீனத்துவவாதி, டிராட்ஸ்கியவாதி, சாதியவாதி" என்று கிளப்பி விடுங்கள் போதும். இவை ஒரு சுற்று சுற்றி உலகை வலம் வந்து விடும்.
இன்றைய அமைப்புத் தோழர்களின் அவல நிலை இது. இதைக் கடக்காமல் கம்யூனிஸ்டு இயக்கத்தை வளர்க்க முடியாது. சக அணிகளை நேசிக்க முடியாதவர்கள், சக தோழர்களை ஏற்க இயலாதவர்கள், மக்களை எப்படி நேசிக்க முடியும். பல்வேறு முரண்பட்ட சிந்தனைப் போக்குகளைக் கொண்ட மக்களை எப்படி அணிதிரட்டுவது? மிகச் சிறந்த வேலைத் திட்டமும், அர்ப்பணிப்பு உணர்வும் மட்டுமே ஒரு இயக்கத்தை மக்களிடம் கொண்டு சென்று விடுமா? முரண்பாடுகளைச் சரியாக கையாள வேண்டாமா? முகநூலைப் பார்த்தாலே ஒரே வெட்டுக் குத்துமாகத்தான் இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் பாசக மற்றும் சங்பரிவார அமைப்புகள் ஒன்றையொன்று இப்படி சாடுகிறதா? எவ்வளவு முரண்கள் இருந்த போதிலும், ஒரு பொதுத் திட்டத்தின் கீழ், இந்துத்துவாவின் கீழ் ஒன்றிணைய முடிகிறதே? இடதுசாரிகளால் ஏன் முடிவதில்லை?
மார்க்சியம் உலகு பற்றிய புரிதலை, சமூக வளர்ச்சிப் போக்குகளை புரிந்து கொள்ளும் அறிவியலை வழங்குகிறது. இதைக் கற்றுக் கொண்ட உடனே, பலருக்கு ஒளி வட்டம் சுழல ஆரம்பித்து விடுகிறது. சமூகத்தில் தன்னை ஒரு தனித்த பிறவியாகவே கற்பிதம் செய்து கொள்கிறார்கள். அகந்தை பெருகி, தலைக்கனம் வந்து விடுகிறது. சுயவிமர்சனப்பாங்கு மறைந்து விடுகிறது. சனநாயகப் பண்பு குறைந்து விடுகிறது. குறுங் குழுவாத போக்குகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இயக்கங்கள் தடுமாறுகின்றன. மக்களைச் சென்றடைய முடியவில்லை. கம்யூனிஸ்டுகள் சுருங்கிப் போனார்கள்.
உலக முதலாளியம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இந்தச் சூழலில் கூட, மக்களியக்கங்களை கட்ட முடியவில்லை. தன்னெழுச்சியாக எழும் போராட்டங்களுக்குக் கூட தலைமை கொடுத்து வழிநடத்தும் வலிமை இல்லை. முல்லைப் பெரியாறு போராட்டங்களும், சல்லிக்கட்டுப் பேரெழுச்சியும், தூத்துக்குடி மக்கள் போராட்டங்களும் நமக்குப் படிப்பினைகள். மக்கள் சிக்கல்களைப் புரிந்து கொள்கிறார்கள். எதிர்வினையாற்றுகிறார்கள். இயக்கங்கள் இவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இயக்கங்கள் தடுமாறுகின்றன.
ஒருபுறம் தமிழ்த்தேசியப் போர்வையில் பேரினவாதிகள். மறுபுறம் சாதிய இனவெறியர்கள். தேசியம் படும்பாடு சொல்லி மாளவில்லை. வர்க்கக் கண்ணோட்டமில்லாத தேசியம், இறுதியில் பாசிசத்திற்கு தான் இட்டுச் செல்லும். தமிழ்ப் பாசிசம் மெதுவாகத் தலைதூக்குகிறது. இராசராச மகாத்மியத்தில் தொடங்கி இந்துத்துவத்தை, இந்தியத்தை ஏற்கும் கழிசடை அரசியல் வரை தமிழ்த் தேசியமாக இங்கு காண்பிக்கப்படுகிறது. பெருமித அரசியலும், அதிகார அரசியலும், அடையாள அரசியலும் மக்களைச் சீரழித்து வருகின்றன. பாசிச இந்துத்துவ சக்திகள் கார்ப்பரேட்களின் அடியாட்களாக, ஏகபோக நிதி மூலதனக் குழுமங்களின் கங்காணிகளாக வேலை செய்கின்றனர். வளங்கள் சுரண்டப்படுகின்றன. வாழ்வாதாரங்கள் சூறையாடப்படுகின்றன. பேரிடர் காலங்களில் கூட, மக்களைத் திரட்ட முடியாமல் இயக்கங்கள் தடுமாறி நிற்கின்றன. வரலாற்று அவலம் இது.
என்ன செய்யப் போகிறோம்?
காலந்தோறும் வரலாறு நமக்குப் படிப்பினைகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது.
வரலாற்றின் திசைவழியைத் தீர்மானிக்கப் போவது யார்? வலதுசாரிகளா? இடதுசாரிகளா? உலகப் போக்குகளை உற்று நோக்கினால் உண்மை புரியும். வரலாறு இடதுசாரிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த நீரோட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்வோம். பேருழியாய், பேரலையாய் ஆர்ப்பரித்து எழுவோம்! மானுட விடுதலையை பறைசாற்றுவோம்!
தோழமையுடன்
மருது பாண்டியன்
சோசலிச மையம்
7550256060