ஜெ.வின் மரணத்திற்கு பின்பான ஒப்பாரிகளில் பிரதானமானது யாதெனில்,


"இத்தனை ஆண்டு காலம் நம்மை 'ஜெ' வடிவில் ஆண்டது இந்த 'சசி'தான் என்றும் இவரின் ஆதிக்கப்பிடியில் சிக்கிய வயோதிக கொலுபொம்மைதான் 'ஜெ' என்றும் இந்த வாத தொடர்ச்சியில் மேலெழும் கற்பனை சித்திரக்காட்சியில் 'ஜெ' வை மர்மமான முறையில் கொலை செய்தவர் 'சசி' என்றும் தமிழக மக்கள், ஊடகத்தினர் மற்றும் சில அதிமுகவினரும் முக்கித்திணறி ஒப்பாரியிட்டதுதான்..,"
அடுத்த கவனிக்கத்தக்க செய்தி என்னவென்றால்,
ஒரு வழக்கின் A1 குற்றவாளி என 'ஜெ' நிரூபிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியிலிருந்த போதே கைதாகி தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்ட போதிலும் அந்த வழக்கில் A1 என்பவரை விட அதற்கடுத்த நிலையில் இருக்கும் சசிகலாவே குற்றவாளி என்று மீண்டும் அதிமுகவினர், ஊடகத்தினர் என அத்தனை பேரும் ஓங்காரமாய் ஓலமிட்டனர்.,
A1 இறந்த நிலையில் மற்ற குற்றவாளிகள் சிறை தண்டனை அனுபவிக்க செல்கையில் வெடி வெடித்து கொண்டாடவும் செய்தனர். இப்படி செய்வது A1 ஐயும் குற்றவாளியாக ஒப்புதல் தெரிவிப்பதாகும் என்பது புரியாமல் புல்லாங்குழல் வாசித்தவர்கள் யாரென்றால் பழைய வாத்தியாரின் வாத்தியக்கருவியை வாயார வாசிக்கத்தெரிந்தவர்கள்தாம்.!, ஒலி கிளம்பியதாவென நடுமை செய்யும் 'நம்நாடு' நாயகன்தான் நல்வாய்ப்பாக நம்மிடையே இல்லை.. நல்லது..!,
நல்லதற்கடுத்து,
இதன் பின் நடந்த கூத்துப்படலங்கள் சசிகலா நடத்திய கூவத்தூர் குத்தாட்டங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது என்றாலும் A1ன் சடலத்தை படிமமாக்கி கை, வாய் கட்டு போட்டு மகிழுந்தின் முன்கிடத்தி வாக்குசேகரித்த வரலாற்று சம்பவம் மட்டும் மாஃபாய் பாண்டித்துவம் பெற்று முதலிடத்தை பெற்றிருக்கிறது.,
இங்க இருந்தவன் 'அங்க தாவ' அங்க பொங்கின வளர்மதி காணொளிக்காட்சியில் குரலொலி மாற்றம் செய்வது எப்படி என்று புத்தகமெழுதி பரபரப்பாக்கவென மீடியாவும் நாமும் நன்றாகவே நாட்களை நகர்த்தினோம்.,
சசிகலா 'ஜெ' மரணத்திற்கு பின்பான வெளிப்படுதல் பாகங்களில் 'வேலைக்காரி நாட்டை ஆள்வதா?' எனும் எச்சாஸ்திரம் ஏவப்பட்டதுதான் தமிழ் கூறும் நல்லுலகின் பல்லை ஊழைப்பூசி பேசியது. என்ன கொடுமையென்றால் முற்போக்காளர்களும் இந்த பதத்தை பயன்படுத்தியதுதான்.முற்போக்கு பேசினாலும் தமிழர்களாக அவர்களை நிரூபித்த சமயம் அது.ஜல்லிக்கட்டில் சசிகலா மீது வீசப்பட்ட வசைகளில் இதுவும் ஒன்று.,
குனிவதில் அல்ல குனிபவனை குத்துவதில் மட்டுமே உயரமடைய முடியும் என்ற தாமோதரதாசனின் அத்வானிய பயிற்சி வகுப்பில் வென்று காட்டி நம்மையெல்லாம் சமூகமாக்கினால் பரவல் வந்துவிடும் என்ற ஒரே நோக்கில் சாதிப்படுகொலையிலும் காவல்துறை கொட்டடி மரணத்திலும் பிரித்து வைத்தே அழகு பார்க்கும் கொரோனா பாதுகாப்பாளர் பழனிசாமி முதல்வரானதும் அப்போதுதான்.,
இட்டிலி ரசீதுகளை பார்த்தபின் ஏற்பட்ட வயிற்றுக்கழிச்சல் போல இலகுவாக இந்த ஆட்சியின் நாட்களை மக்கள் கழித்தாலும் கிடுக்கிப்பிடி போட்டு "அதிமுகவை யாரு வச்சிருக்கா?" எனும் கேள்வியை எழுப்பும் அடி மட்ட தொண்டனின் நெஞ்சில்
'மோடி எங்க டாடி' என்று பச்சை குத்திவிட்டு 'பாஜக' காவடி தூக்க துவங்கி கோமளவல்லியின் ஆஸ்தான பச்சை நிறத்தை வெற்றிலை தாம்பூலம் துப்பியதுபோல் காவிபூசி கடந்து சென்றனர் அம்மாவின் அரிமாக்கள்.,
ஓபிஸ், டிடிவி, தீபாம்மா, மாதவன் சார் என பரவிக்கிடந்த பிரிவினையை பாமக துணையோடு குருமூர்த்தி தூக்கி நிறுத்த 'இம்போட்டேன்ட்' பட்டம் மட்டும் யாருக்கோ கிடைத்தது.பேசிய புரட்சிகளும் சமூகநீதிகளும் விடுதலை வேட்கைகளும் காவிபுழுதியில் மங்கத்துவங்குகையில் கைகோர்த்து
காவியானவர்களை எதிர்த்து களமாட தமிழகமே ஓரணியில் நிற்கும் போது கூட வெற்றி சற்று தொலைவில்தான் உள்ளது.
(இந்த இடத்தில் ஒரு 'ஜம்ப் கட்')
இச்சமயத்தில் சசிகலா விடுதலை என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் வழிகாட்டலில் ஒன்று எனவும் அது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் முயற்சி என்றும் புரிந்து கொள்வதே இப்போது நம்முன் உள்ள வாய்ப்பாகும்.
ஒருவேளை வேறு வழியில்லாமல் சசிகலா விடுதலை செய்யப்படுவாராயின் அவர் வெளிவந்து தன் சொத்துகளை காப்பதற்கு ஆர்.எஸ்.ஸிடம் தான் அடைக்கலமாக வேண்டும்.அதனால் கணிக்க வேண்டியது என்னவென்று சொன்னால் சசிகலா விரும்பினாலும் விட்டாலும் அவரை ஆர்.எஸ்.எஸ் ஆட்டுவிக்கும் அதற்கு சசிகலாவின் சொத்துக்கள் அசைந்து கொடுக்கும் ஒரு வேளை முரண்டுபிடித்தால் 'வாத்தி ரெய்டு' நிச்சயம் என்பதை அறியாதவரல்லர் சசிகலா..,
இந்த பொறுத்துதல் சசிகலாவுக்கு மட்டுமானதல்ல சொத்துக்களை அல்லது நிதிமூலதனத்தை குவித்து அல்லது பாதுகாத்து குடைபிடித்து நிற்கும் அத்தனை ஓட்டு கட்சி அரசியல்வாதிகளுக்குமான ஒப்பிடுதலும் தான்.
அதனால்,
பன்னாட்டு நிதி மூலதனத்தை பாதுகாத்து சாதி மத கேடயம் கொண்டு மக்களை தாக்கும் குருபீட சேனைகளான அத்தனை சொத்துக்குவிப்பாளர்களிடத்தும் எச்சரிக்கையாக இருப்போம். அவர்களை ஆதரிக்கவோ அல்லது இரக்கப்படவோ ஏதுமில்லை.அதற்காக தனிப்பட்ட இழிவு செய்வதும் நம் வேலையல்ல அவர்களின் அரசியலை மட்டும் அம்பலப்படுத்துவோம்.
ப.பிரபாகரன்