நிஜ ஹீரோ - ஜெய்சங்கர்
நிஜ ஹீரோ - ஜெய்சங்கர்
====
எதிரிகளையே சம்பாதிக்காத ஒரு ஆத்மா இருந்தது என்றால் அது சாட்சாத் நம் ஜெய்சங்கர்தான்.. இன்று அவரது நினைவுநாள்.
கள்ளங்கபடம் இல்லாதவர் என்று சக நடிகர், நடிகைகளாலேயே வாய் நிறைய புகழப்பட்டவர்.. முகம் தெரியாத எத்தனையோ பேருக்கு சோறும் போட்டவர், வாழ்வும் தந்தவர்.
சம காலத்தில் ஜாம்பவான்கள் இருந்தபோதும், தனக்கென ஒரு பாணியை நடிப்பில் வகுத்து கொண்டவர்.. இந்த "வெள்ளிக்கிழமை நாயகன்" கடைசிவரை கிசுகிசுவில் சிக்காத ராமனும்கூட!
இவர் பழகும் முறையே அலாதிதான்.. "அண்ணே" என்று யாரை பார்த்தாலும் எல்லோரும் சொல்லி கொண்டிருந்த காலத்தில் "ஹாய்" என்று கூப்பிட்டு வர்க்க பேதத்தை சுக்குநூறாக உடைத்து நொறுக்கியது ஜெய்சங்கர்தான்.. அந்த ஒத்தை வார்த்தையில் நெருக்கத்தையும், இணக்கத்தையும் சக மனிதரிடம் இழைய விட்டவர்!!
புரொடக்ஷன் மேனேஜர் முதல் மேக்கப்மேன் வரை பெரும்பாலானோரை தயாரிப்பாளர் ஆக்கியவர்! உச்ச நடிகர்களே அப்போது ஊதிய விஷயத்தில் கறார்தன்மை காட்டியபோது, சம்பள பாக்கியே தராவிட்டாலும் வாய் திறந்து கேட்காத பண்பாளர்.. பண நெருக்கடியால் படம் ரிலீஸ் ஆகாமல் சிக்கி கிடந்தாலும், தன் பணத்தை தந்து உதவிய அசாத்திய பிறவி!!
இவருக்கு தரப்பட்ட ஏராளமான செக்குகள் பேங்கில் பணமில்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்தன. இவர் மறைந்த பிறகு ரூமில் இருந்து கத்தை கத்தையாக ரிட்டர்ன் செக்குகளை எடுத்து கொண்டு போனார்கள்.. "நிலுவை"களுக்கு மத்தியிலும் "நம்பிக்கைதான் வாழ்க்கை" என்பதை ஆழபுதைத்து வாழ்ந்து மறைந்தவர் ஜெய்சங்கர்!!
ஏற்ற இறக்கத்துடனே வாழ்வு பயணித்தபோதும், வறியவர்கள் மீது இவருக்கு விழுந்த கரிசன பார்வை மட்டும் விலகாமல் நிலையானதாகவே இருந்தது.. தேர்வுக்கு பணம் கட்ட முடியாமல் எத்தனையோ மாணவர்கள் ஜெய்சங்கரை தேடி ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு வந்தபோதெல்லாம் பணத்தை அள்ளி வழங்கியவர்.. ஏழை பெண்களுக்கு தாலி வாங்க முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருந்தவர்.. தன் வீட்டு விசேஷங்கள் அனைத்தையும் ஆதரவற்ற இல்லங்களிலேயே கொண்டாடி மகிழ்ந்தவர்... ஆனால் இவை எதையுமே ஒருபோதும் விளம்பரப்படுத்தி கொள்ளாத நிறைகுடம்!!
என்னை பொறுத்தவரை, "மக்கள் திலகம்" எம்ஜிஆருக்கு இணையாகவே "மக்கள் கலைஞர்" ஜெய்சங்கரின் வள்ளல் குணத்தையும் உசத்தியே சொல்வேன்.. அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெறுவதற்கான வாய்ப்பு இவருக்கு ஏனோ தவறிவிட்டது என்றாலும், செய்த அனைத்து மலைபோன்ற உதவிகளும் காலத்துக்கும் போற்றத்தக்கவை!!
இரக்கத்தையும், கருணையையும் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து கொண்ட ஜெய்சங்கரின் சினிமா வாழ்வும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையும் அதிக வேறுபாடுகள் இல்லை.. இவரது இதயத்திற்கும், இயக்கத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை! இவர் மூடி மறைக்கப்பட்ட ஒரு அற்புதம்.. சுயத்தை வெளிப்படுத்தி கொள்ள விரும்பாத அதிசயம்!!
எந்நேரமும் சிரித்த முகமும்.. பண்பும்.. அன்பும்.. கனிவும்.. கருணையும்தான் இவரை நிஜ ஹீரோவாக்கி கொண்டிருந்தது.. ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைத்ததா, கிடைக்கவில்லையா என்பதை எனக்கு முழுமையாக சொல்ல தெரியவில்லை!! பலர் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே மரித்து விடுகின்றனர்.. ஒரு சிலரே மரித்த பிறகும் நிறைந்து வாழ்கின்றனர்.. அதில் புண்ணியவான் ஜெய்சங்கரும் ஒருவர்!!

கருத்துரையிடுக