அனாதையாக்கப்பட்டவர்களின் ஏக்கம்கேட்பாரற்றுக் கிடப்போரின் வேகம்
ஆனா... ஆவன்னா...
என தொண்டை வலிக்கக் கத்தினோம், கல்லையும் கடவுளாக்கினோம், மண்ணையும் பொன்னாக்கினோம், மனிதத்தை மட்டுமே மார்க்கமாக விதைத்தோம், வகுப்பறை ஒன்றையே சரணாகதியென்று நினைத்தோம்,ஆயிரமோ பதினாயிரமோ கிடைத்ததைக் கொண்டு திருப்தியானோம்... ஆனால் இன்று... இது ஏதோ தெருப்போக்கனின் புலம்பலென்று நினைக்காதீர்கள். அறப்பணியாம் ஆசிரியர்ப் பணியின் ஆதங்கம். மாதம் மூவாயிரத்திலிருந்து அதிக பட்சமாக எட்டாயிரம், பத்தாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு வறுமையை வெளியே காட்டாமல் நாணயத்துடன் வாழ்க்கைய நகர்த்திக் கொண்டிருந்த லட்சோப லட்சம் ஆசிரியர்களின் ஆவேசக் குரல் தான் இது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசு பள்ளியில் பணிபுரியும் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் மற்றும் & தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலரும் தற்போது வீதிக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின் காரணமாக அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொருளாதார நெருக்கடி காரணமாகவும் மக்களால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. ஊரடங்கு காரணமாக பல துறைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களும் தற்போது கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.
மார்ச் மாதம் பள்ளியின் இறுதியாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் போது, யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்காமல், நம் நாட்டில் குடியேறியது கொரோனா. நாளை பொழுது விடிவதற்குள் வந்து நின்றது லாக்டவுன். முதலில் ஒரு நாள்... அடுத்தது ஒரு வாரம்... தொடந்து இரண்டு வாரம்... இப்படி லாக்டவுன் மூன்று மாதங்கள் தொடர்ந்தது. ஆனாலும் மூன்று மாதங்கள் கடந்து எல்லா வேலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கப்பட்டன. அவரவர்களின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் மாதங்கள் மூன்று கடந்த பிறகும் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை. அரசு பள்ளி பெ.ஆ.க ஆசிரியர்கள் , தனியார் பள்ளிக் கல்லூரிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சம்பளமும் இல்லை.
ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி அதில் வரும் வருமானம் மூலம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாம் என்று பள்ளிகள் கருதினாலும், வீட்டில் ஸ்மார்ட் போன் இல்லாதது, டவர் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் மாணவர்களால் ஆன்லைன் வழியாக பாடங்களை சரிவர கற்க முடிவதில்லை. அப்படியே ஒருவேளை மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்றாலும் அதற்கு உண்டான கட்டணத்தை அவர்களது பெற்றோர்களால் தற்போதையை சூழ்நிலையில் கட்ட முடிவதில்லை. இதனால் பல ஆசிரியர்கள் வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், வாழ்க்கையை நகர்த்துவதற்கு வேறு வழியின்றி, எவ்விதப் படிப்புச் சான்றிதழும் தேவையில்லாத வேலையாட்கள் செய்கின்ற 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து ரோட்டில் மண் அள்ளும் வேலைச் செய்யும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சில ஆசிரியர்கள் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஸ்டோர்களிலும் சேல்ஸ் மேன் ஆகவும் பணியாற்றுகின்றார்கள். சிலர் இட்லி கடைகள் நடத்துகின்றார்கள். தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பிரபலமானப் பள்ளியில் நல்ல செல்வாக்குடன் முதல்வர் பணியாற்றி வந்த ஒருவர், தனது சொந்த ஊரில் மனைவியுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் ஊர் ஊராகச் சென்று இட்லி,தோசை, வடை விற்று குடும்பத்தை நடத்தி வருகின்றார். இன்னும் சிலர் தங்களின் வீடுகளில் வைத்து காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்த வரை அரசு பள்ளி பெ.க.ஆ மற்றும் தனியார் பள்ளிகளில் பல லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் செய்யும் வேலையோ மிக அதிகம். கிடைக்கும் சம்பளமோ மிகக் குறைவு. லாக்டவுன் தொடங்கியதிலிருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு காசு கூட சேதாரமின்றி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மாதங்கள் மூன்று தாண்டியப் பிறகும் ஒரு காசு கூட சம்பளம் இல்லாமல் அரசு பள்ளி பெ.க.ஆ மற்றும் தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, என்ன செய்வது? எப்படிக் குடும்பத்தை நடத்துவது? என அறியாமல் திகைத்து உள்ளனர்.
பள்ளி நிர்வாகத்திடம், சம்பளம் கேட்டால் ‘மாணவர்கள் பீஸ் கட்டாமல் நாங்கள் எப்படிச் சம்பளம் தரமுடியும் எனக் கேட்கின்றார்கள்.’ அவர்களின் அந்தக் கேள்வியிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஏனேன்றால் அரசு, ‘மாணவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் பள்ளிகள் திறக்கும் வரை கல்விக் கட்டணம் எதுவும் கேட்கவோ, வாங்கவோ கூடாது’ எனக் கராறாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், பள்ளிகள், மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும், பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் கேட்கவும் தயக்கம் காட்டுகின்றனர். அப்படிக் கேட்டாலும் பெற்றோர்கள் அரசின் அறிவிப்பைக் சுட்டிக்காட்டி, பள்ளி நிர்வாகத்தைப் பயமுறுத்துகின்றனர்.ஆனால் அரசு, தனியார்ப் பள்ளியாசிரியர்களைக் குறித்துக் கடுகளவிற்கும் கவலைப்படவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை.
எனவே மத்திய,மாநில அரசுகள் அரசு பள்ளி பெ.ஆ.க ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றுபவர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கபடும் வரை அன்றாட வாழ்வாதரத்தை வழிநடத்தி செல்ல ஏதுவாக நிவாரண நிதி வழங்க வேண்டும்.
ராஜேஷ் ராஜேந்திரன்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
கருத்துரையிடுக