தோழர் பாலன் படுகொலை.
சாத்தான் குளத்தில் போலீஸ் சித்ரவதையில் இருவர் கொல்லப்பட்ட இந்த நேரத்தில் மக்களுக்காக போராடிய புரட்சியாளர்கள் எப்படியெல்லாம் காவல்துறையினரால் தமிழகத்தில் கொல்லப்பட்டனர் என்பதற்கு பல நிகழ்வுகளை கூற முடியும். அதில் முக்கியமானது தோழர் பாலன் படுகொலை.
யார் இந்த பாலன்? சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்.ஸி படித்தப் பட்டதாரி. தருமபுரி குமாரசாமிப் பேட்டையைச் சேர்ந்த ஒரு நெசவாளரின் மகன்.
வசந்தத்தின் இடி முழக்கமென எழுந்த நக்சல்பாரி இயக்கத்தின் முதல் வெகுசன களநாயகன். 1980 களில் தருமபுரியில் ஆர்த்தெழுந்து ஆதிக்கப் பண்ணைகளை அழித்தொழித்த முன்னோடி அவர் செய்த போராட்டங்கள் பல. உதாரணமாய் சொல்ல வேண்டுமானால், செவத்தாக்கவுண்டன் என்கிற கந்து வட்டிக்காரன் மிக கொடியவன். இவனது மகன் அரங்கநாதன் அன்றைய ஆளும் கட்சி எம்.எல்.ஏ.
இதை வைத்து செவத்தான் எளிய மக்களை கந்து வட்டிக் கொடுமைகள் செய்து வாட்டி வதைத்தான். ஒருமுறை எளிய கூலி தொழிலாளியை செவத்தான் அடித்து விட்டான் அந்த தொழிலாளி சமீபத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர். அடிபட்ட வேகத்தில் மயக்கமாகி விட்டார். விசயத்தை கேள்விப்பட்ட தோழர் பாலன் தனது வாலிபர் சங்கத் தோழர்களோடு களத்துக்கு வந்தார் சற்றும் யோசிக்காமல் கந்து வட்டிக்காரன் செவத்தானை மரத்தில் கட்டி வைத்து உதைத்தார்
களத்துக்கு அரங்கநாதன் தூண்டுதலால் போலீஸ் வந்தது இன்ஸ்பெக்டர் சிவகுரு செவத்தானை விடுவிக்கச் சொன்னான். தோழர் பாலன் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உரிய நட்ட ஈடு கேட்டார். அன்றைய மதிப்பில் நானூறு தர முடிவாகியது. செவத்தானிடம் அப்போது முன்னூறு மதிப்புள்ள சைக்கிள் இருந்தது. மீதி நூறு ரூபாய்க்கு இன்ஸ்பெக்டர் சிவகுரு தன் கையால் புரோநோட்டு எழுதிக் கொடுத்தான்.
இதைத்தான் தோழர் பாலன் தன் கையில் வைத்துக் கொண்டு மேடைதோறும் ஒரு பணக்காரனுக்கு புரோநோட்டு எழுதித் தரும் போலீஸ் ஏழைக்காக எழுதி தருமா? என வினா எழுப்பினார். இதை வைத்து ஏழைப்பங்காளன் என பீலா விட்ட எம்.ஜி.ஆர் ஆணையின் படி வால்டர் தேவாரம் என்ற இரத்த வெறி பிடித்த போலீஸ் உயரதிகாரி தோழர் பாலனை சீரியம்பட்டி என்ற கிராமத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் கைது செய்தான்.
பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் பாலனின் காலை முறித்தான். பிறகு, பாலன் இறந்து விடுவார் என்று நினைத்து தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் தூக்கி கடாசினான். ஆனால், அன்புள்ளம் கொண்ட மருத்துவர்கள் அவரை காப்பாற்றி விட தேவாரம் வெறி கொண்டு பாலனை சென்னை மருத்துவமனைக்கு மாற்றினான். வழியெங்கும் சித்ரவதைகள் தொடர்ந்தன.
இதன் காரணமாய் சென்னை மருத்துவமனையில் தோழர் பாலன் வீர மரணமடைந்தார். இறக்கும் தருணத்தில் தோழர் சொன்ன வார்த்தைகள் இதுதான் 'என்னைக் கொன்று விடலாம். என் கொள்கையை கொல்ல முடியாது. என்னைப் போல எண்ணற்ற இளைஞர்கள் போராட்டக் களத்துக்கு வருவார்கள். இந்த நாடு விடுதலை பெறும். மார்க்சிய லெனினியம் நீடூழி வாழ்க!'
பகத்சிங்கை கூட எதிரிகள் இந்த அளவுக்கு சித்ரவதை செய்யவில்லை. ஏனெனில், தோழர் பாலன் நக்சல்பாரி என்பதே. எனது 'தறியுடன்...' நாவலை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்துள்ளேன்.
பதிவு
தோழர் bharathi nathan
பதிவு
தோழர் bharathi nathan
கருத்துரையிடுக