வைல்ட் என்கவுன்டர்

வைல்ட் என்கவுன்டர்
உங்களில் யாருக்காவது காட்டு யானையுடன் நேருக்கு நேர் சந்தித்த அனுபவம் இருக்கிறதா ?
எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது. ஒரு யானை அல்ல மொத்தம் எட்டு யானைகளை நான் நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறேன். அதுவும் ஒரு பத்து மீட்டர் இடைவெளியில். இப்போது நினைத்தாலும் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்து விடுகிறது.
அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தில் எனது நண்பர் ஒருவருக்கு ஒரு விளைநிலம் இருக்கிறது. அங்கே பூசணிக்காய் அரசாணிக்காய் போன்றவற்றை பயிரிடுவார்கள். நண்பர் அடிக்கடி சொல்வார் அங்கே யானை தொந்தரவு அதிகம் என்று. யானைகளிடம் இருந்து விளைநிலத்தை பாதுகாக்க மெர்கர் அமைத்து இருந்தார்கள்.
மெர்கர் என்பது மின் வேலி வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்குமே ஒழிய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. ஆனால் புத்திசாலி யானைகளுக்கு இந்த மெர்கர் எல்லாம் தூசு. கையில் ஒரு காய்ந்த மூங்கிலை எடுத்து வந்து ஒரு அடி அடித்து செயல் இழக்க செய்து விடும். யானைகள் அவ்வளவு புத்தி சாலிகள்.
அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை நண்பர் அந்தோணிசாமியிடம் இருந்து திடீரெண்டு போன் வந்தது. மலை மேல ஒரு பெரிய கூட்டம் இருக்கு வாங்க போலாம்னு. உற்சாகம் பீறிட்டது. கிளம்பி சென்று பார்த்தால் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் மலைப்பாதையை கடந்து கிழக்கு நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன அந்த சிறிய யானை கூட்ட குடும்பம்.
ஒரு தாய் யானை பிறகு ஒரு நான்கைந்து மகள் யானைகள் ஒரு ரெண்டு தங்கச்சி யானைகள் ஒரே ஒரு குட்டி யானை பிறந்து ஒரு ஆறுமாதங்கள் இருக்கலாம். யானை குடும்பம் மேட்ரியாக் எனப்படும் தாய்வழி சமூகம். நாம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலத்தில் அம்மா சொல்தான் வீட்டை வழிநடத்திச் செல்லும். அதே போன்று மேட்ரியாக் ஒரு பாட்டி யானை என்று வைத்துக் கொள்ளலாம். அது என்ன சொல்கிறதோ அந்த சொல்லுக்கு மற்ற யானைகள் கீழ்படியும். எல்லா யானைகளும் சேர்ந்து குட்டிகளை பராமரிக்கும்.
மாலை சூரியன் மலை இடுக்கில் இறங்க ஆரம்பித்திருந்தது. யானைகள் கீழே இறங்க ஆரம்பித்தன. இங்கே அரசாணிக்காய்கள் இருப்பதை மோப்பம் பிடித்து விட்டன. யானைக் கூட்டம் மலையின் பாதி உயரத்தில் இருந்தது. நண்பர் என்னைப் பார்த்து “அது எவ்வளவு தூரத்தில் இருக்கு பாருங்க ஆனால் இன்னும் பத்து நிமிடத்தில் நம் தோட்டத்துக்கு வந்துரும்” னு சொன்னார். ஏற்கனவே நிறைய அனுபவப்பட்டிருக்கிறார்.
அவர் சொன்ன மாதிரியே மலையை விட்டு இறங்கி கீழே காட்டாறு ஒன்று இருக்கிறது காட்டாற்றை கடந்து ஓட்டமும் நடையுமாக பத்தே நிமிடத்தில் அவருடைய தோட்டத்துக்கு ஒரு நூறு மீட்டர் தொலைவுக்கு வந்து விட்டது. இவர் தோட்டத்து காவலாளியிடம் சத்தமாக “மெர்கரை ஆன் பண்ணு” என்று சொன்னவுடன் தயாராக நின்று கொண்டிருந்த காவலாளி உடனடியாக மின் வேலிக்கு மின்சாரம் பாய்ச்சும் வேலையை செய்து விட்டார்.
நாங்கள் வேலியின் உள்ளே ஒரு பத்து மீட்டர் தொலைவில் நின்று கொண்டு அந்த யானைக் கூட்டத்தின் வரவுக்காக காத்திருந்தோம். அவருடைய தோட்டத்து பக்கவாட்டில் ஒரு இட்டேரி பாதை இருக்கிறது அந்த மொத்த யானைக்கூட்டமும் அந்த பாதை வழியாக வந்து பக்கவாட்டில் எங்களை பார்த்து வரிசையாக நின்று விட்டன. இரண்டு படைகள் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி.
யானைகளுக்கும் எங்களுக்கும் பத்து மீட்டர் இடைவெளி தான் இருக்கும். உடம்பெல்லாம் செவ்வாளை மண்ணை பூசி கொண்டிருக்கிறது. மூக்கை துளைக்கும் உணவு சிறுநீர் எல்லாமான அந்த வாடை நாசிக்குள் ஏறியது.
எனக்கு இதையம் படபடக்க ஆரம்பித்து விட்டது. மின்சாரத்தை பற்றி கவலைப்படாமல் திடீரென்று சார்ஜ் செய்து விட்டால் என்ன செய்வது ? அதனுடைய வேகத்துக்கு நிச்சயம் நம்மால் ஈடுகொடுக்க முடியாது. கை கால்கள் எல்லாம் பயத்தில் வியர்க்க ஆரம்பித்து விட்டது. நண்பரிடம் கேட்டேன் “திடீர்னு சார்ஜ் பண்ணிடுச்சின்னா என்ன பண்ணறதுங்க எதுக்கும் கொஞ்சம் தள்ளி போகலாமான்னு கேட்டேன். அவர் “அதுக்கு மின்சாரம் இருப்பது தெரியும் பயப்படாதீங்க நிச்சயம் வராது” ன்னு சொல்லிட்டார்.
மற்ற யானைகள் வழிவிட மேட்ரியாக் முன்னே வந்தது. தனது தும்பிக்கையால் மின்சார கம்பிகளை மோப்பம் பிடித்தது. மொத்த கூட்டத்திடமும் கிர் கிர் என்று சப்தம். நமக்கு அந்த மொழி புரியவில்லை என்று தான் நினைக்கிறேன். அவைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று நிச்சயம் பேசிகொள்ளத்தான் செய்யும் என்பது எனது திடமான நம்பிக்கை.
அதற்குப் புரிந்து விட்டது அந்த கம்பிகளில் இருக்கும் மின்சாரம் தன் குடும்பத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று. அந்த இடத்தை விட்டு நகரலாம் என்றால் எனக்கு கை கால்கள் செயலிழந்து விட்டன. அந்த குட்டி யானை மேட்ரியாக்கின் பேரனோ அல்லது பேத்தியாகவோ இருக்க வேண்டும் துரு துருவென்று அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது.
வேலிக்கு உள்ளே இருக்கும் அரசாணிக் காய்களை சாப்பிட வேண்டும் என்ற ஆசை அந்த குட்டி யானைக்கு வந்து விட்டது. அது தோட்டத்துக்குள் நுழைய எத்தனித்து அம்மாவின் கால் இடுக்குகளுக்குள் நுழைந்து வெளியே வந்தது. “ஐயோ இந்த குட்டி மீது மின்சாரம் பாய்ந்தால் என்ன ஆவது என்ற அச்ச உணர்வு என்னை தொற்றிக் கொண்டது. குட்டி வேகமாக ஓடி வரவும் மேட்ரியாக் தனது தும்பிக்கையால் லாவகமாக அந்த குட்டியை சுற்றி வளைத்து தூக்கிக்கொண்டே போய் விட்டது. எல்லாம் ஒரு பத்து நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது.
அந்த வைல்ட் என்கவுன்டர் இப்போது நினைத்தாலும் ஒரு திகில் படம் பார்ப்பதை விடவும் பலமடங்கு பயத்தை மனதுக்குள் விதைகிறது. அந்த தாய் யானையின் புத்தி சாதுர்யத்தை இப்போது நினைத்தாலும் மனதுக்கு நெகிழ்வாக இருக்கிறது. எனது வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு இனிமையான நினைவலைகளை அந்த கூட்டம் விட்டு சென்று விட்டது.