தோழர் சஜித்திற்கு செவ்வணக்கம்!!! போய் வாருங்கள் தோழரே..
அவரைப் பற்றி எழுத இத்தகைய ஒரு நிலை வரும் என்று அவரோடு பயணித்த நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. கனத்த இதயத்துடன் இதை பகிர்கிறோம்!
முழு மூச்சாய் சமூகத்திற்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும் அனுதினமும் அயராது ஓடிக்கொண்டிருந்த ஆசானின் வழி நடத்தலில் பல்வேறு கனவுகளோடும், இலட்சியங்களோடும் அவர் கைபிடித்து நடந்த எங்களுக்கு ஈடுசெய்ய முடியா இழப்பாய் போனது அவரது மரணம்.
லண்டனில் பல் மருத்துவராக பணியாற்றி அதனோடு இடதுசாரி இயங்கங்களோடும் மிக தீவிரமாக செயல்பட்டு, 2016 ஆம் ஆண்டு சர்வதேச அரசியல் தெளிவோடும், உறுதியான முனைப்போடும், முழு அர்ப்பணிப்போடும் தமிழகத்தில் பாட்டாளி வர்க்க அரசியல் களத்திற்கு வந்தவர் தோழர் சஜித். New Socialist Alternative என்று தமிழகத்தில் இயங்கி பின் சரிவர இயங்காமல் உதிரிகளாக இருந்த தோழர்களை ஒவ்வொருவராக ஒருங்கிணைத்து புதிய பொதுவுடைமை இயக்கம் துவங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சீரிய வளர்ச்சியில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, அதன் பின் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் சுமூகமாக பிரிந்து பொதுவுடைமை இயக்கத்தை துவங்கி ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்தார்.
நல்ல வருமான வாய்ப்பு இருந்தும் ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு என்றே முழு நேரம் தன்னை அர்ப்பணித்து ஊதியமாக வெறும் ரூபாய் 3,500 மட்டுமே பெற்று ஒரு அமைப்பை ஆரம்பநிலையில் இருந்து ஒருங்கிணைத்தவர். அமைப்பு வேலைகளுக்காக எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்தவர். ஒரு நபர் வந்தாலும் எக்காரணம் கொண்டும் அமைப்பின் வாராந்திர கூட்டங்களை நிற்காமல் பார்த்துக் கொண்டவர்.
கருத்தியல் தளங்களில் விவாதிப்பது, மக்களின் தன்னெழுச்சி போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்களில் ஆதரவு தருவது மட்டும் இல்லாமல் மக்களிடம் அவர்கள் போராட்டங்களுக்கு துண்டறிக்கைகள் விநியோகிப்பது, சமூக ஊடகங்கள் என்று அனைத்து விதத்திலும் அவர்கள் போராட்டங்கள் வெற்றிபெற களத்தில் இறங்கி போராடும் போராளியாகவும் அமைப்பையும் அதே வழியில் நடத்தியவர்.
இடதுசாரிகளுடன் விமர்சனங்கள் தாண்டி இடதுசாரிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பது இவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு திரட்டுவது மற்றும் ஆளும் வர்க்க அரசு கூட்டணிகளை தவிர்த்து பரந்துபட்ட இடதுசாரிய அணி அமைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர். சிறுபான்மையினர், தலித் மக்கள் மீது நடக்கும் குண்டர் தாக்குதலுக்கும் இடதுசாரிகள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள் பாதுகாப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என்று முன்வைத்தவர், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய காலவரையற்ற பொதுவேலை நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று இடதுசாரிய மாற்றுத் திட்டங்களை முன்வைத்தவர். தோழருக்கு எல்லாமே அரசியல் தான். திரையிடல், புத்தக வாசிப்பு கூட்டம் , அரங்கு விவாதம் என்று எங்கு சென்றாலும் தவறாது அமைப்பின் நிலைப்பாட்டை எடுத்து வைப்பது அதைத் தொடர்ந்து துண்டறிக்கைகள் விநியோகிப்பதை தவறாமல் செய்யும் நடைமுறையை அமைப்பில் உருவாக்கினர். தோழர்களை அரசியல் படுத்த பம்பரமாக சுழன்று இயங்கிவர் கடந்த 9 ஆம் தேதி எல்லாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி மரணம் அடைந்தார். அவரது மறைவு இன்று வரை நம்ப முடியாததாகவே உள்ளது.
மிகவும் சுறுசுறுப்பானவர் Hepatitis C எனும் பிறவியில் ரத்தத்தில் மஞ்சள்காமாலை மட்டும் இருந்தது அதற்கு லண்டனில் இருக்கும் போது ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பதை கடந்து உடலளவில் வேறு ஏதும் பிரச்சனைகள் இல்லாதவர். கடந்த 4 ஆண்டுகளில் ஓரிரு முறை சளி இருமல் மட்டும் வந்ததாக எங்களுக்கு நினைவு.
சொந்த வாகனம் இல்லை கால் கடுக்க சளைக்காமல் நடப்பார், ஒவ்வொரு ரூபாயும் கணக்கு பார்த்து தான் செலவு செய்வார். பல நேரங்களில் தேநீர் தான் உணவாக இருக்கும் அவருக்கு. கொரோனா தொற்றின் காரணமாக நடைமுறையில் இருக்கும் தொடர் பொதுமுடக்கம் காரணமாக அனைவரும் வெளி வரமுடியாமல் போனது. அதன் காரணமாக இயக்க வேலைகள் அனைத்தும் தொலைத்தொடர்பு வாயிலாகவே நடந்தது.
தோழர் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி மற்ற தோழர்களிடம், 10 நாட்களாக உடல் சோர்வு மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக முதன் முதலில் கூறினார். அவர் எப்போதும் இரவு நேரங்களில் தான் எழுதுவது, படிப்பது என நேரம் ஒதுக்குவார். அதுவும் கணினி கிடையாது மொபைல் போன் வழி தான் அனைத்தும் செய்வார்.
பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே அடைபட்டு இருப்பதால் தோழருக்கு இத்தகைய சோர்வு இருப்பதாகவே நாங்கள் நினைத்து "ஓய்வு எடுங்கள் தோழர்" என்று கூறினோம். என்ன உடல் சோர்வு இருப்பினும் அமைப்பு வேலைகளில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். வாரத்தில் நான்கு நாட்கள் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைப்புகுழு கூட்டங்களை நடத்துவது, பதாகைகள் தாங்கிய பிரச்சாரங்களை முன்னெடுப்பது, தோழர்களோடு தனிப்பட்ட முறையில் உரையாடுவது என எந்த சோர்வும் நாங்கள் உணராத வகையிலேயே அவரின் செயல்பாடுகள் இருந்தன.
மே மாத இறுதியிலும் தோழர் தனது பலவீனம் தொடர்வதாக கூறியதால் கொரோனாவாக இருக்குமோ என்று என்று எண்ணி மருத்துவரை அணுக கூறினோம். அமைப்பு தோழர்கள் சிறிது காலம் அவரின் வேலைகளை பங்கிட்டு செய்வது என்று முடிவெடுத்து அவரை முழுமையாக ஓய்வில் இருக்க சொன்னோம். இந்த நிலையில் ஜூன் 1ஆம் தேதி திங்கள் கிழமை மதியம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தோழரின் மைத்துனர் அழைத்து சென்றுள்ளார். காய்ச்சல் 103 டிகிரி இருப்பதாக கூறி சிகிச்சை அளிக்க முடியாது என மறுத்துள்ளனர். உடனே கொரோனா வந்து குணமான ஒரு தோழரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் அருகில் உள்ள "பொது மருத்துவமனையில் தான் பரிசோதனை செய்வார்கள் என்றும். இன்றைக்கு நேரம் கடந்து விட்டது நாளை காலையில் செல்லுங்கள்" என்று கூறி முன்னெச்சரிக்கை அறிவுரைகளையும் கூறியுள்ளார். தனது அறிகுறிகளை விளக்கியபோது, அதுபோன்ற அறிகுறிகள் எதுவும் தனக்கு இல்லை எனவும் தோழர் கூறினார்.
அன்று மாலையே அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள், அந்த மருத்துவர் ஆண்டிபயாடிக் கொடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார், காய்ச்சல் தொடர்ந்தால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இது நடந்த அன்று மாலை கூட கிளைக்குழு தோழர்கள் ஒருங்கிணைத்த அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதுவே கடைசியாக சஜித் தோழர் கலந்து கொண்ட கூட்டம். நாங்கள் எல்லோரும் தோழர் காய்ச்சல் நேரத்திலும் இயல்பாக இருக்கிறார் என்று எண்ணினோம். தொடர்ந்து தோழரின் உடல் நிலை குறித்து விசாரித்தும் வந்தோம். தோழரும் இப்பொழுது பரவாயில்லை என்றே கூறி வந்தார். ஊரடங்கு நேரம் என்பதால் யாரும் நேரில் சென்று பார்க்க இயலவில்லை, அடுத்து 3 ஆம் தேதி புதன்கிழமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது காய்ச்சல் குறைந்துள்ளது என்று மேலும் இரு தினங்களுக்கான மருந்து கொடுத்துள்ளனர்.
ஜூன் 4 ஆம் தேதி வியாழக்கிழமை 12 மணி அளவில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்தோம் அப்பொழுது காய்ச்சல் சரியாகி விட்டது, ஆனால் உடல் சோர்வு இருக்கிறது என்று கூறினார். நாங்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டுமாறு கொட்டுக் கொண்டோம். இதுவே தோழரோடு, நாங்கள் பேசிய கடைசி உரையாடல் என்று அப்போது உணரவே இல்லை.
அன்று மாலை இடதுசாரிய அமைப்புகள் ஜூன் 9 ஒருங்கிணைக்க உள்ள போராட்டத்திற்கு நாம் ஆதரவு பதாகைப் பிரச்சாரம் செய்யலாமா என்று ஆலோசனை கேட்பதற்காக தோழருக்கு தொடர்பு கொண்டோம் ஆனால் தோழர் எடுக்கவில்லை. தோழர் ஓய்வில் உள்ளார் என்று எண்ணினோம். மறுநாள் காலை தோழரின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள அழைத்தபோதும் தோழர் இணைப்பில் வரவில்லை. அன்று மதியம் 12 மணி போல் சஜித் தோழரின் தங்கை பொதுவுடைமை இயக்க whatsapp குழுவில் "சஜித் தோழர் மிகக் கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் சிகிச்சைக்கு உடனடியாக 12 யூனிட் 'O +ve' ரத்தம் தேவை" என்றும் அனைவரும் அதிர்ந்து போகும் செய்தியை பகிர்ந்திருந்தார்.
அனைவரும் பதட்டத்தோடு தோழரின் தங்கைக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் "நேற்று மதியம் காய்ச்சல் சரியாகி விட்டது என்று முடிதிருத்தம் செய்து விட்டு வீட்டுக்கு வந்தவர் திடீரென்று மயங்கி விழுந்து சுயநினைவு இழந்த நிலையிலேயே வலிப்பு ஏற்பட்டது என்றும், உடனே நாங்கள் அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தோம் மருத்துவர்கள் அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து கொண்டு வருகிறது, செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளது, டயாலிசிஸ் செய்யப்படுகிறது, ரத்தம் மாற்று செய்யப் படுகிறது சுயநினைவற்ற நிலையிலேயே இருக்கிறார்" என்று அனைவரையும் உலுக்கி எடுக்கும் தகவலைக் கூறினார்.
உடனே ரத்த தேவைகளை பூர்த்தி செய்ய முகநூலில் கோரிக்கைகள் பகிரப்பட்டது. பல தோழர்கள் மருத்துவமனைக்கு சென்று ரத்தம் கொடுத்தனர். எப்படியும் மீண்டு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இந்த நேரத்தில் தோழரின் உடல்நிலை குறித்து பொதுவெளியில் தெரிவித்து பதட்டத்தை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். முழுவதுமாக தன் உழைப்பை இந்த சமூகத்திற்கென்றே கொடுத்த தோழரின் மருத்துவ செலவுகளை அவர் குடும்பம் மட்டுமே தாங்கக் கூடாது அதனால் பொருளாதார ரீதியில் தோழரின் குடும்பத்திற்கு எப்படியும் உதவுவது என்று செயல்பட்டு கொண்டிருந்தோம். ஆனால் தோழரின் குடும்பத்தினர் வெளியில் பண உதவி பெறுவதை விரும்பவில்லை நாங்களே சமாளித்துவிடுவோம் என்று மறுத்துவிட்டார்கள்.
அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தோழரை எப்படியும் மீட்டுக் கொண்டு வந்துவிடுவோம் என்றே செயலாற்றினோம். தோழர் ஒருபோதும் அமைப்பு வேலைகள் தடைபடுவதை விரும்ப மாட்டார் அதனால் அனைத்து வலிகளையும் மனதில் புதைத்து அமைப்பு வேலைகள் எதுவும் நின்றுவிடாதவாறு செய்து கொண்டிருந்தோம்.
நாம் செய்யும் இயக்க பணிகள் மரணப்படுக்கையில் இருக்கும் அவரை உயிர்பித்திடாதா என்று நப்பாசையில் இயங்கினோம். இந்த நிலையில் தோழரின் உடல்நிலை முன்னேற்றங்கள் ஏதும் இன்றியே தொடர்ந்தது, முழுக்க கருவிகளின் உதவியிலேயே உடல் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
நாம் செய்யும் இயக்க பணிகள் மரணப்படுக்கையில் இருக்கும் அவரை உயிர்பித்திடாதா என்று நப்பாசையில் இயங்கினோம். இந்த நிலையில் தோழரின் உடல்நிலை முன்னேற்றங்கள் ஏதும் இன்றியே தொடர்ந்தது, முழுக்க கருவிகளின் உதவியிலேயே உடல் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
தோழரின் இந்த திடீர் உடல் நலிவுற்றலுக்கு காரணமான தொற்று (Sepsis) இரத்தத்தில் சில நாட்கள் இருந்துள்ளது அதனால் ரத்தம் கெட்டு போய் ஒவ்வொரு உறுப்புகளாக பாதித்துவந்துள்ளது என்றும், அதனால் ரத்தத்தில் பிராணவாயு குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலும் செயலற்று போகச் செய்துள்ளது (Septic Shock) என்றும் கூறினார்கள். ஆனால் தொற்றுக்கான காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்கள் டெங்கு, கொரோனா இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிந்தது.
மருத்துவ செலவுகள் மிகவும் அதிகம் என்பதை கணக்கில் கொண்டு நாங்கள் குடும்பத்தினரை வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். தோழர் உடல்நிலை குறித்து தெரிந்த மருத்துவர்களிடம் விசாரிப்பதற்கும் தோழருக்கு தெரிந்த நட்புகளிடமும்,பொது நிதி கோரிக்கைக்காகவும் மருத்துவமனை நிர்வாகத்திடம் சஜித் தோழரின் சிகிச்சை அறிக்கையை ஜூன் 8 ஆம் தேதி கேட்டு வாங்கினோம். தெரிந்த பிற மருத்துவர்களும் தோழர் பிழைப்பது கடினம் என்றும் ஒரே நம்பிக்கை தோழரின் வயது மட்டுமே என்று தெரிவித்தனர். இதனிடையில் பொருளாதார உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டு ஓரிரவில் மட்டும் தோழரின் சிகிச்சைக்காக 3 இலட்சம் நிதி திரண்டது. ஆனால் பெரும் சோகமாக ஜூன் 9 ஆம் தேதி காலை 8 மணி அளவில் எல்லோருடைய நம்பிக்கையையும் பொய்யாக்கி தோழர் மறைந்தார். சிகிச்சைக்காக திரட்டப்பட்ட நிதி கடைசியில் தோழரின் உடலை பெறுவதற்கு பயன்பட்டது.
மருத்துவ செலவுகள் மிகவும் அதிகம் என்பதை கணக்கில் கொண்டு நாங்கள் குடும்பத்தினரை வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். தோழர் உடல்நிலை குறித்து தெரிந்த மருத்துவர்களிடம் விசாரிப்பதற்கும் தோழருக்கு தெரிந்த நட்புகளிடமும்,பொது நிதி கோரிக்கைக்காகவும் மருத்துவமனை நிர்வாகத்திடம் சஜித் தோழரின் சிகிச்சை அறிக்கையை ஜூன் 8 ஆம் தேதி கேட்டு வாங்கினோம். தெரிந்த பிற மருத்துவர்களும் தோழர் பிழைப்பது கடினம் என்றும் ஒரே நம்பிக்கை தோழரின் வயது மட்டுமே என்று தெரிவித்தனர். இதனிடையில் பொருளாதார உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டு ஓரிரவில் மட்டும் தோழரின் சிகிச்சைக்காக 3 இலட்சம் நிதி திரண்டது. ஆனால் பெரும் சோகமாக ஜூன் 9 ஆம் தேதி காலை 8 மணி அளவில் எல்லோருடைய நம்பிக்கையையும் பொய்யாக்கி தோழர் மறைந்தார். சிகிச்சைக்காக திரட்டப்பட்ட நிதி கடைசியில் தோழரின் உடலை பெறுவதற்கு பயன்பட்டது.
தோழர் நினைத்திருந்தால் நல்ல வேலையில் இருந்து கொண்டு இயக்கத்தை நடத்தியிருக்கலாம். வெளிநாட்டில் இருந்துகொண்டு Live ல் வீடியோ வெளியிட்டு புரட்சியாளர், சித்தாந்தவாதி என்று காட்டிக் கொண்டிருக்கலாம். கருத்தியல் தளங்களில் மட்டும் தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கலாம். அரசியல் வகுப்புகள் எடுத்திருந்திருக்கலாம்.
ஆனால், தோழர் பாட்டாளி வர்க்க அரசியலுக்கு அவரின் அனைத்து விதமான பங்களிப்பையும் அளித்தார். பல அரசியல் தெளிவுகளையும், உத்வேகத்தையும் அளித்தவர். சமூகத்திற்காக ஒருவர் தன்னை தியாகம் செய்ய நினைக்கும் தோழரின் தோள்களிலேயே அனைத்து பாரங்களையும் ஏற்றிவிட்டோமோ என்கிற குற்ற உணர்வை எங்களுக்கும், இந்த பொது சமூகத்திற்கும் அளித்து விட்டு சென்றிருக்கிறார். ஒவ்வொரு போராளிக்கும் இந்த சமூகம் அவர்களின் அடிப்படை ஆதாரத்தையும் உடல்நலத்தையும் அளிப்பது நம் கடமையே.
இயக்கத்தில் குழுத்தன்மையையும், ஜனநாயகக் கட்டமைப்பையும் வலுவாக அமைக்கப் பாடுபட்டவர். தோழர் இன்னும் ஓர் 30 வருடங்கள் வாழந்திருந்தால் பாட்டாளி வர்க்க அரசியலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பதில் ஐயமில்லை. தோழர் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடர்ந்து எவ்வித தொய்வும் இல்லாமல் நிச்சயம் செய்வோம் என்பதை, விதைகளான எங்கள் மீது உள்ள நம்பிக்கையைத் தாண்டி எங்களை விதைத்தவரின் மேல் உள்ள நம்பிக்கையில் உறுதி ஏற்கிறோம்
எங்கள் உணர்விலும் , உயிரிலும், அத்தனை பயணங்களிலும் உங்கள் வழி நடத்தல் இருக்கும் என்ற நம்பிக்கையில் நீங்கள் வகுத்த பாதையில் எங்கள் பணிகளை தொடருவோம் எங்கள் ஆசானே!!!!
தோழர் சஜித்திற்கு செவ்வணக்கம்!!!
போய் வாருங்கள் தோழரே...
போய் வாருங்கள் தோழரே...
-பொதுவுடைமை இயக்கம்
கருத்துரையிடுக