மீண்டும் சென்றோம்....

மீண்டும் சென்றோம்....
அரசு கட்டிக்கொடுத்த காலனி வீடு இடிந்து விழுந்து இருவர் பலி ஆன செய்தியை அரசல் பரசலாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.பின் எங்களது குழு சென்று சிறு முயற்சியாக ஆவண செய்தோம். அதோடு நில்லாமல் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்பாட்டுக்கு சென்று சரியான தகவலை திரட்டலாமென சென்றோம்.
மிகவும் பின்தங்கியே இருக்கிறார்கள் புளியங்குழி மக்கள். அந்த குடியிருப்பில் 3 நபர் மட்டுமே மேற்படிப்பு ஒருத்தர் B.sc இன்னொருத்தர் B.E இன்னொருத்தர் Diplamo Engineer இவர்கள்தான் 40 குடும்பத்தில் ஒரே படிப்பாளிகள். நாங்கள் செய்தியாக்கிய காணொளி ஓரளவு செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றிருக்கிறது. வழக்கம்போல் அதிகார மட்டம் பேசும் வார்த்தைகளை அம்மக்களிடம் உதிர்த்திருக்கிறது.
"சோத்துல மண்ணு வுழுது கிண்ணு வுழுதுன்னு ஏஞ் சொல்றீங்க"
"இந்த மாதிரி செய்திலாம் கொடுக்காதீங்க கெடக்கிறதும் கெடைக்காம போய்டும்"
இவைதான் அந்த முத்துக்கள்....
தேரிலிருந்து தவறி விழுந்த அர்ச்சகருக்கு ஈரங் காய்வதற்குள் நஷ்டஈடு அறிவிப்பதும்...சென்சிடிவ்வான செய்திகளான பிறகு நஷ்டஈடு தருவதும் அரசின் வாடிக்கை. எளிய மனிதர்களின் உயிரென்றால் அத்தனை இளக்காரம். புள்ளத்தாச்சி பொண்டாட்டிய சோறு போட்டுட்டு வரச்சொல்லி தின்னுக்கிட்டு இருந்த கணவனும் அவரின் அக்கா மகனும் சோத்துக் கையோடு மாண்டிருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த வீடுகளை கணக்கிலெடுத்து பராமரிக்கத் தவறியது அரசின் மெத்தனப்போக்கு.
ஒரு சாதி சான்று வங்க முடில தம்பி....எம்புள்ள எம்மோம் மெடலு வாங்கிருக்கு எம்மோம் சட்ரிகேட்டு வாங்கிருக்கு பாருங்க என எடுத்து வந்து காட்டினார். 8 சான்றிதழ்கள் கோ-கோ, ரிலே ஓட்டம்,நீளம் தாண்டுதல் எல்லாவற்றிலும் மாவட்ட, குறுவட்ட அளவில் வெற்றி பெயர் நித்யா (9 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு செல்கிறார்)...வேற பள்ளிக்கூடத்துல சேக்கப்போறோம்னு சொன்னாலும் இப்படி திறமையான பொண்ண எப்படி அனுப்புறதுன்னு பள்ளி நிர்வாகமே சொல்ற அளவுக்கு திறமையானவர்.இந்த சிறுமிக்கு நல்ல ஷூ மற்றும் விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கித் தந்திடனும். பலமுறை அந்த சிறுமியின் அப்பா சாதி சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார் வந்தபாடில்லை. இவ்வூரில் பலருக்கு சாதி சான்று வாங்குவதில் சிக்கல்.(கொஞ்ச கொஞ்சமாக சரிசெய்து தருகிறோம் என சொன்னோம்)
26 வயதில் ஒருவர் 17 வயதில் ஒருவர் ஒரே ஊரில் ஒரே வீட்டில் அதுவும் வீடு இடிந்து விழுந்து இறந்தது இதுவே முதல்முறை ஊரே துக்கமாக இருந்திருக்கிறது. ஊருக்கு ஒதுக்குபுறமாய் பேருந்து வசதியற்ற அந்தக் கிராமத்தை உப்புக்கும் கண்டுகொள்வதில்லை அரசின் எந்த துறையும்...ஈமச் சடங்கிற்காக 2,500 தந்ததோடு கடமை முடிந்ததாய் கேட்க யார் இருக்கிறார்கள் என்கிற திமிறில் இருக்கிறார்கள். இதே சம்பவம் நகரத்திலோ அல்லது ஒரு உயர்சாதியினர் தெருவிலோ நடந்திருந்தால் நிவாரணத் தொகை கிடைத்திருக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைத்திருக்கும்.
கொஞ்ச நாளு டைலரிங் கிளாசு போயி கத்துருக்கேன்...ஆனா மிசுனு இல்ல.சாக்கெட்டு தக்கினும்னா 2 கி.மீ போவுனும். ஒருநாளு கூலி 200 ரூவா சாக்கெட்டு தைக்க 150 ரூவா... ஒரு மிசுனு இருந்தா தேவலாம் என்றார் ஒரு அக்கா...மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்துவோம்னு சொன்னோம். அக்கிராமத்தை விட்டு வெளியேறும்போது தன்னார்வலர்கள் மூலமாக வாங்கித் தந்தாலென்ன என யோசனை வந்தது.
ஆடு மாடெல்லாம் வச்சுருக்கீங்கனான்னு கேட்டோம்.
எங்க தம்பி எடம் இருக்கு...மேச்சலுக்கு யாரு போறது. வூட்டுல ஆளுக்கு ஒரு வேலக்கி போனாதான் பொழப்பு...வூட்டுக்கு 3 குடும்பமா இருக்கோம். வெளிலதான் படுத்துக் கெடப்போம்.மழ நாள்ல உள்ள தூங்குவோம்.ஆனா மழ நாள்லதான் எப்ப இடிஞ்சி வுழும்னு பயத்துல கெடப்போம்.நாங்க வேலக்கி போயி கஞ்சி குடிப்பமா சட்ரிகெட்டு தா...வூட்ட கட்டிக்குடு...ன்னு எங்க அலயிறது. யாரும் எங்களுக்கு எல்ப்பு(help) எடுத்து செய்றதுல்ல.
ஒரு வழியாக சில ஆறுதலான வார்த்தைகளை சொல்லிவிட்டு சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தாருங்களென சுருக்கமாக முடித்துக் கிளம்பினோம்.
விரைவில் அந்தக் கிராமம் துயரிலிருந்து மீளவும் அதன் மூலம் தமிழகமெங்கிலும் பாழடைந்து கிடக்கும் பழங்காலணி காரை வீடுகளனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு தரமான புதிய வீடுகள் முளைக்க முயல்வோம் என்கிற நம்பிக்கையோடு உறங்க செல்கிறேன்.