இது 2020 ன் இன்று

ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட பார்ப்பனக்கோயிலானது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலான கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்திருக்கிறது.,
தெருப்புழுதிகளில் உடைந்த சிதறுகற்கள் சிதிலம் பெயர்ந்து நிற்கும் காலனி வீடுகளென ஒண்டிக்குடித்தனம் செய்யும் சேரிகள் இந்த சோழப்பாரம்பரிய பெருநகரில் தற்போதைய அமைப்புமுறைக்குட்பட்டு ஒரு ஊராட்சி மன்ற தலைவரை அதிலும் பெண்ணை தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.,
இந்திய இறையாண்மைக்கு மானபங்கம் ஏற்படாத வகையில் பஞ்சாயத்திற்குட்பட்ட சில ஆதிக்க சாதி வாக்காளர்களும் வாக்களித்து ஆண்ட பரம்பரைகளின் ஆசியை ஆசியாவை கட்டியாண்ட பூர்வீகத்திலிருந்து பாராளுமன்றம் நோக்கி வீசியெறிந்துள்ளனர்.,
சிறப்பம்சமிக்க மண்ணில் வாழ்வது புனிதமெனப்பட்டால் பட்டியலினப்பெண் ஆள்வது புனிதத்தை கெடுக்கும் அவநிகழ்வேயென கருதி தாக்குதல் நடத்துவதும் போராட்டம் அறிவித்தால் மூலைக்கு மூலை உழைப்பை உறிஞ்சி வீங்கி பெருத்து வெடிக்கக்காத்திருக்கும் மண்முண்டங்களிடமிருந்து நைச்சிய பேச்சுவார்த்தை அழைப்பு கிடைப்பதும் யார் கழுத்தை அறுத்து நாளங்களில் வடியும் சுடு ரத்தத்தைக் குடிப்பதற்கு..??.,
கல்லெறிகிறீர்கள்..!!
இருபத்து மூன்றின் இரட்டை மடிப்பில் க்ரோமோசோம் பிரித்த பாலினத்தின் முன்னுயிர் பதிப்பை பிரதியெடுத்துக் காட்டிய போதும்.,
"பறத்தேவிடியா வெளிய வாடி என்றழைக்கிறீர்கள்??"
வந்து ஒழுகும் அறங்களெல்லாம் சேரிகளின் சிரம் தெரிவதை நொந்து புண்பட்டு பி.சி.ஆர் சட்டபிரிவால் தான் இந்த தலைகள் முளைக்கிறது அதனை ஆமைகளை போல அல்லது ஆன்மீகவாதிகளை போல மறைத்துக்கொண்டு வாழுங்கள் என்று கூழ்மங்களை காரித்துப்பியதாய் எண்ணி உங்களின் உள்விழுங்கிச்செல்கிறீர்கள்..!!
எங்களின் எந்த ஒரு உரிமைக்குரலையும் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறீர்கள்.ஓங்கி ஒலிக்க முற்படும்போதெல்லாம் குரல்வளையை கோடாரி கொண்டு வெட்டிப்பிளக்கிறீர்கள்.,
எங்களை சுற்றி நீங்கள் விதைக்கிறீர்கள் அறுக்குறீர்கள் ஆள்கிறீர்கள் இன்னும் சொல்லப்போனால் வஞ்ச முகத்திலிருந்து _ள்கிறீர்கள்
ஆகட்டும்,
உங்களை நோக்கி நான் கேட்கிறேன் எனதருமை பாட்டாளி சொந்தங்களே நீங்கள் உண்மையில் வாழ்கிறீர்களா??
உங்கள் சந்ததியினர் இம்மண்ணில் எங்கேனும் சமத்துவம் பெற்றிருக்கிறார்களா??
உங்களின் வாழ்க்கைத்தரம் என்னவென்று உங்களுக்கு என்றேனும் தெரிந்து வைத்திருக்கிறீர்களா??
உங்களின் கல்வி உங்கள் சாதி கல்வி வியாபாரிகளால் விலை பேசப்பட்டிருக்கிறது..!!
உங்களின் உயர்கல்வி படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு வாய்ப்புகள் உங்கள் சாதி கட்சிகளின் ஒப்புதலோடு பறிகொடுக்கப்பட்டிருக்கிறது..!!
உங்கள் நிலங்களின் மீத்தேன் வாயுக்கள் உங்கள் ஊரை சுற்றிலும் மேலெழும்பி பெருமுதலாளிகளின் வங்கிக்கணக்கை நிறைக்க சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறது..,
உங்களுக்கும் எனக்குமான சாவு வாழ்வு எதுவாகிலும் சளி காய்ச்சல் வாந்தி பேதி கக்குவான் காசநோய் கோரோனா என அரசு மருத்துவமனையை நம்பியே காலம் ஓடுகிறது.,
ஊரடங்கு காலத்திலும் உங்களையும் என்னையும் மின்கட்டனம் கூட பொதுவாக பாதிக்கிறது..,
உங்களுக்கும் எனக்கும் ஒரே இடத்து 'டாஸ்மாக்' சாராயம்தான் உடலுறுப்புகளை அரித்துக்கொண்டிருக்கிறது
உங்களுக்கும் எனக்கும் ஒரே அளவிலான வட்டிதான் வசூலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
உங்களுக்கும் எனக்கும் ஒரே புழுத்துப்போன கொட்டை ரேஷன் அரிசிதான் உலையில் வெந்து கொண்டிருக்கிறது.,
சிந்தித்துப்பாருங்கள்.,
கங்கை கொண்ட சோழபுரத்தின் பிரதான சாலை ஓரத்தில் குடியிருக்கும் மண்ணின் பூர்விக மக்களாகிய உங்களின் முன்னோர் கட்டிய வீடுகளில் இன்று உங்களால் அதை புதுப்பித்து குடியிருக்க முடிகிறதா??
அரசின் உத்தரவின் பேரில் உங்கள் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி பிள்ளை பெற்ற பொக்கிஷ புவியை எதிர்க்க பயந்து விட்டுச்செல்கிறீர்கள்.,
மேற்கண்டவற்றிற்காக உங்களை சாதியப்படுத்தும் அரசியல் கட்சிகளோ அல்லது வெறியூட்டும் சாதிவெறியர்களோ என்றைக்காவது மீட்கும் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா??
உங்களது இடம் வாழ்வியல் சார்ந்த உரிமைக்கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்க சொல்லி பேசியிருக்கிறார்களா??
சேரிகளை புறக்கணிக்கவும் கோவில் தேர் திருவிழா குடமுழுக்குகளில் பரம்பரை வீரதீரங்களை சொல்லி சேரிகளை மிரட்டவும் கற்றுத்தந்த அவர்கள் என்றைக்காவது உங்களை கங்கை கொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் ஆலயத்திலுள்ள லிங்கத்தை தொட்டு வழிபாடு செய்ய அறைகூவல் விடுத்திருக்கிறார்களா??
மாட்டார்கள்.,
ஏனெனில், சேரிகள் உங்களுக்கு கீழ்சாதி எனில் பார்ப்பனர்களுக்கு நீங்கள் கீழ்சாதி நீங்கள் என்றைக்கும் ஒரு ஆயுதம் ஏந்திய அடியாள் அவர்களுக்கு ..,அவ்வளவுதான். நீங்கள் சேரிகளை அடித்த பின்னர் பார்ப்பனியமும் அரசு அதிகாரமும் உங்கள் தலையில் ஏறி மிதிக்கும். உங்களுக்கென்று எவ்வித சிறப்பு சலுகையும் அவர்கள் அளிக்கப்போவதில்லை. இதுதான் உங்களுக்கும் சேரிகளுக்குமான முரணின் பின்னணி.,
பழந்தமிழர் பெருமை பேசுவதும் நாமெல்லாம் இந்து என்று பேசுவதும் மட்டுமல்ல., நாமெல்லாம் ஒரே சாதி நமக்கு கீழ் இன்னொரு சாதி என்று பேசுவதும் நமைச்சலெடுத்த புழுமூளைக்காரர்களின் வழியும் சீழ்., அதை நக்கிப்பார்த்து வெறியேற்ற உங்களை அழைப்பவர்களிடம் பின்செல்லாதீர்கள்., அது உங்கள் அன்றாட பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்காது அப்படி அழைப்பவர்கள் என்றைக்கும் உங்கள் சொந்த பிரச்சினைக்காக தோள் சேர்ந்து நிற்க மாட்டார்கள்
சாதிவெறி பிடித்த மிருகங்களிடமிருந்து விலகி எதிர்த்து நிற்க வேண்டியது உழைக்கும் சேரிகள் மட்டுமல்ல உழைக்கும் பாட்டாளிகளாகிய நீங்களும்தான்
பாட்டாளிகளே பாழ்படாதீர்கள்