சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு பின்னர் ஒன்றும் தெரியாத நல்ல பிள்ளைகள்போல நடித்துக்கொண்டு காவல்துறையினர் மன அழுத்தம் பற்றி பேசுகிறார்கள்
சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு பின்னர் ஒன்றும் தெரியாத நல்ல பிள்ளைகள்போல நடித்துக்கொண்டு காவல்துறையினர் மன அழுத்தம் பற்றி பேசுகிறார்கள். தாங்கள் செய்யும் ஒவ்வொரு கொலைக்கு பின்னரும் இப்படி பேசி தப்பிப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் அவர்களை விட்டுவிடுவோம்.
சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், கட்சி தலைவர்கள், ஏன் வழக்கறிஞர்கள் சிலரும்கூட அவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கும் வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என்று பேசி வருகின்றனர்.
ஆனால் ஏற்கனவே காவல் துறையினருக்கு மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களுக்கும்கூட“வெல் பீயிங் ப்ரோகிராம்”, “ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர்”, “ஆனந்தம்” என்ற பெயர்களில் 2018-லிருந்தே அதற்கான வகுப்புகள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன.
இதை நடத்தி வருவது NIMHANS (National Institute of Mendal Health and Neuro Sciences) என்ற இந்தியாவில் பெயர்பெற்ற நிறுவனம் ஒன்று. “மென்டல் ஹெல்த் ப்ரோகிராம்”களில் புகழ்பெற்ற எம்.எஸ் செல்லமுத்து டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியம் என்பவர்தான் அந்த வகுப்புகளை ஒருங்கிணைத்து தொடர்ந்து நடத்தி வருபவர்களில் ஒருவர்.
இன்று இந்த இரட்டைக் கொலை விவகாரத்தில் முழுக்க முழுக்க போலிசின் மிருகத்தனமான செயல்களுக்கு ஆதரவு அளித்து கொண்டிருக்கும் இதே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்தான், 2018-ல் “first in India” என்றும், “இது காவல்துறையினருக்கு மன அமைதியை கொடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றும் பெருமை பொங்க பேசி இந்த திட்டத்தை தொடங்கி வைத்து ஆண்டுக்கு 10 கோடி நிதியும் வழங்கினார்.
காவல் துறையினருக்கு “அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி” ஆகியவற்றை வழங்கும் இந்த திட்டத்தில் டாப் லெவல் போலீஸ் அதிகாரிகள் முதற்கொண்டு “உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”னு சொன்ன மகாராஜன் போன்ற கான்ஸ்டபிள்கள் வரை அனைவரும் அடங்குவர். கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும்.
இதற்காக எல்லா மாவட்டங்களுக்கும் சேர்த்து தலைமை பயிற்சியாளர்கள் மட்டும் 358 பேர் அப்போது உடனடியாக நியமிக்கப்பட்டனர். இந்த திட்டத்தில் 1.2 லட்சம் காவலர்களும், 3.6 லட்ச காவலர் குடும்பங்களும் பயன்பெறுவார்கள் என்று புள்ளிவிபரங்கள் சொல்லப்பட்டது.
இந்தத் திட்டங்கள் காவல்துறையினருக்கு பிடித்ததோ இல்லையோ? வகுப்புகள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்ததோ இல்லையோ?
ஆனால் அதே அந்த தொடக்க விழாவில் “அம்மாவின் ஆசிபெற்ற இந்த அரசு காவல்துறையினருக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுத்துள்ளதோடு, அவர்களின் வேலைகளிலும், அதிகார வரம்பெல்லைகளிலும் எந்த தலையீடும் செய்யாது” என்று எடப்பாடி அவர்கள் பேசியதுதான் அவர்களை கவர்ந்திழுத்திருக்க வேண்டும்.
அவர்களை கவர்ந்த அந்தப் பேச்சின் அதிகார எல்லையைத்தான் இன்று நாம் பார்த்து வருகிறோம். அடிக்கிறார்கள். கொல்கிறார்கள். மிரட்டுகிறார்கள். தடயங்களை அழிக்கிறார்கள். இறுதியில் தப்பித்து மீண்டும் நம்மை தலைகீழாக தொங்கவிட ஆயத்தமாகிறார்கள்.
மட்டுமல்லாமல், காவல்துறையினர் குற்றம் செய்தால் 200க்கு அழையுங்கள், 201க்கு அழையுங்கள் என்று புதிது புதிதாக எண்களை வாரி வழங்குகிறார்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகளான, நேர்மையான போலீஸ் அதிகாரிகள் என்று சமூக வலைதளங்களால் நம்ப வைக்கப்பட்ட உயர் அதிகாரிகள் சிலர்.
ஆனால் 2006-லேயே உச்ச நீதிமன்றம் காவல்துறையினரின் குற்றங்கள் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்க Police Complaints Authority என்ற பெயரில் ஒரு தனி அமைப்பை உருவாக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அந்த அமைப்பு இன்று எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.
இதே மாதிரி நீங்கள் லட்சக்கணக்கான அமைப்புகளை உருவாக்கினாலோ, கோடிக்கணக்கான மன அழுத்த வகுப்புகளை நடத்தினாலோ, வார விடுமுறைகளை வாரி வாரி வழங்கினாலோ இல்லை ஆயிரக்கணக்கில் தூக்கு தண்டனைகளை கொடுத்தாலோகூட, உயர்நீதிமன்றம் சொன்னதுபோல ஆட்கொல்லி வைரஸ்களான இவர்களை இது ஒன்றுமே செய்யப்போவதில்லை.
காரணம் இவர்கள் உருவாக்கப்படும் விதம்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்து இன்று வரை துளியளவும் வேறுபாடு இல்லாத, ஒரே மாதிரியான மனித தன்மையற்ற பயிற்சி அவர்களுக்கு கொடுக்கப்படுவது நிறுத்தவேண்டும். பொதுமக்களில் ஒவ்வொருவரையும் ஏதோ தேசவிரோதிகள்போல நினைத்து, அவர்கள் மீது வெறுப்பை உமிழும் அதிகார வெறியும், திமிர்த்தனமும் புரையோடிப்போயிருக்கும் ஒட்டுமொத்த காவல்துறை அமைப்பையும் மாற்ற வேண்டும். அவர்களின் மிருகத்தனத்தை மிகக் கடுமையாக கட்டுப்படுத்த தனி சட்டம் இயற்றி, குற்றம் செய்பவர்களை தண்டிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
இந்த மூன்றுமே இதே அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு தற்காலிக தீர்வுகள்தான் என்றாலும், இதில் ஒன்றுகூட நடக்க கொஞ்சமும் இங்கே சாத்தியமில்லை என்று இதைப் படிக்கும் உங்களுக்கே புரிந்துவிடும்.
பின் என்னதான் தீர்வு என்கிறீர்களா?
வேறென்ன, எதிரி எந்த ஆயுதத்தை பயன்படுத்துகிறானோ அதே வழியில் “அடிச்சா திருப்பி அடி”க்குற உழைக்கும் மக்களுக்கான ஒரு உருப்படியான கட்சிதான்.
கருத்துரையிடுக