காவிரி கடைமடை கண்டெத்த காசிராமன்
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், திருவெண்காடு ஊராட்சி பகுதியை சார்ந்தவர் திரு.காசிராமன் அவர்கள் இவர் தினமும் 10 கிராம மக்களுக்கு இலவசக் குடிநீர் வழங்குவது, கிணறுகளை இலவசமாகத் தூர்வாரித் தருவது என சீர்காழி வட்டாரம் மற்றும் அதனை சார்ந்த கிராம பகுதிகளுக்கு இயற்கை சூழல் சார்ந்து நம்மாழ்வரின் வழியில் பயணித்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சியில் சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் திரு.காசிராமன் அவர்கள் கோ.நம்மாழ்வரின் அதித பற்றாளர், இயற்கை காவலர் , தனது வீட்டில் மழைநீர் சேகரிப்பு மூலம் சேமிக்கபட்ட கிணற்று நீரை சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் சுத்திகரிப்பு செய்து சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு தினமும் இலவசமாகக் தனிமனிதனாக இரண்டு வருடமாக குடிநீர் வழங்கி வருகிறார். அங்கு யார் வேண்டுமானாலும் வந்து எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் உள்ள பல கிணறுகளைத் தனது சொந்த செலவில் பல ஆண்டுகளாக தூர் வாரித் தந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், திருவெண்காடு அரசுப் பொது மருத்துவமனையில் பல வருடங்களாக இருந்த தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திர மோட்டார் பழுதாகி குழாய்களும் உடைந்து சேதமாகி இயங்காமல் இருந்தன.
தற்போது இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பொதுமக்களின் வசதிக்காகத் தனது சொந்த செலவில் தற்போது பழுது நீக்கித் தந்திருக்கிறார். இப்போது மருத்துவமனைக்கு நல்ல ஆரோக்கியமான குடிநீர் கிடைக்கிறது என மருத்துவமனை ஊழியர்களும்,மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் நன்றி தெரிவிக்கின்றனர். இனிமேல் அந்த சுத்திகரிப்பு இயந்திரத்தை நானே எனது பொறுப்பில் பராமரிப்பது என்றும் முடிவெடுத்திருக்கிறேன் என கூறுகிறார்.
மேலும் இவரது வயலில் அழிந்துவரும் பாரம்பரிய நெல்வகையை மீட்டெடுத்து நம்மாழ்வார் வழியில் இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறார்.சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயம் செய்வது பற்றியும் அதன் நன்மைகளையும் பற்றியும் தொடர்ந்து எடுத்துக் கூறி ஊக்கமளித்து வருகிறார்.தினமும் பல பேருக்கு கப சுர குடிநீரும் இலவசமாக வழங்கி வருகிறார். இவரது வீட்டில் LPG சிலிண்டர்களுக்கு பதிலாக கால்நடை கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் சாண எரிவாயு கலன் (கோபர் கேஸ்) அமைத்து இயற்கைக்கு தீங்கு இல்லாமல் பயன்படுத்தி வருகிறார்.அதை பயன்படுத்துவதின் நன்மை பற்றியும் அனைவரும் எடுத்துரைக்கிறார்.
அழிந்து வரும் காளை இனங்களையும் மீட்டெடுத்து தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் பல வகையான மரங்கள், மூலிகைகள் என இயற்கை எழில் கொஞ்சுகிறது என அவ்வழியாக சென்றவர்கள் காணலாம்.
இவருக்கு "நீர் வள்ளல்" என்ற பட்டமும் அவர் படித்த பள்ளியே வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
இவரது பணியினை கண்டு நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் திரு.சுரேஷ்குமார் IAS அவர்கள் அவரது வீட்டிற்கே நேரில் வந்து பாராட்டியது மட்டுமல்லாமல் அவரது பணியினை பாராட்டி குடியரசு தின விழாவில் விருது அளித்தும் கெளரவித்துள்ளார்.இவரது பணிகளுக்கு செம்பனார் கோவில் லயன்ஸ் சங்கமும் விருது அளித்து பெருமைபடுத்தி உள்ளது
லட்சம் இளைஞர்களை இயற்கை வேளாண்மையில் இறக்கினால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிடலாம் எனும் நம்மாழ்வார் வார்த்தைகளுக்கு ஏற்ப தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி” என்கிறார் நீர் வள்ளல் காசிராமன்.
-ராஜேஷ் ராஜேந்திரன்
ஆசிரியர்

கருத்துரையிடுக