கல்வட்டம் ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னம் ஆகும்.- தோழர் பழநி


இறந்தவர்களின் உடல் பகுதிகளை வைத்து அல்லது அவர்களின் நினைவாக எடுக்கப்படும் ஈமச்சின்னங்களின் மேற்பரப்பில். கற்பாறைகளைக் கொண்டு ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது. இது தரையின் மேற்பரப்பில் காணப்படும். ஈமச்சின்னங்களைப் பாதுகாக்கும், அடையாளப்படுத்தும் அமைப்பாக இது திகழ்கிறது. இது அமைவதனால் பிற்காலத்தில் இறந்தவர்களைப் புதைப்பவர்கள், இதைத் தோண்டுவதில்லை.
பெருங்கற்காலக் கல்வட்டங்களின் புதைந்த பகுதியில் தாழிகள், குழிகள், கற்பதுக்கைகள் போன்றவை காணப்படும். கற்திட்டையைச் சுற்றிலும் இத்தகைய கல்வட்டங்கள் காணப்படுகின்றன. மலைப்பகுதியில்/பாறையின் மேற்பரப்பில் இத்தகைய கல்வட்டங்கள் கற்திட்டைகள் வீழாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கின்றன.
சில இடங்களில், கரடுமுரடான கற்களால் கல் வட்டங்கள் செய்யப்படுகின்றன.
இவற்றின் உள்ளே சிறு சிறு கற்கள் இட்டு நிரப்பப்படுகின்றன. சில இடங்களில் கற்பலகைகள் வட்டமாக புதைக்கப்படுகின்றன.
இவ்வாறு அமைந்த கல்வட்டங்களில், சில கற்கள் நெடுங்கற்களாக (Menhir) அமைவதும் உண்டு.
காணப்படும் இடங்கள்
இவை தமிழகத்தில், கற்கள் கிடைக்காத ஆற்றுப் படுகைகள் தவிர, பிற பகுதிகளில் ஆயிரக்கணக்காண எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
சானூர், சித்தன்னவாசல் கொடுமணல் ஆகிய இடங்களில் இருக்கின்றன..
இங்கு புகைப்படத்தில் இருப்பவை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் தெள்ளார் ஒன்றியம் கீழ்நமண்டி கிராமம்...
இங்கு ஓரே இடத்தில் கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட கல்வட்டம் உள்ளது அதில் ஒரு இடத்தில் நாங்கள் தோண்டியபோது கிடைத்தவை பானைகள் எலும்புகள் மற்றும் மிகவும் வித்தியாசமான முறையில் நான்கு கால்தூண்களுக்கு மேலே ஒரு பெரிய தாழி இருந்தது ஆனால் சிதிலமாகவிட்டது ...
கல்வட்டங்களின் காலம்
உலகம் முழுவதும் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படும் மெகாலித்திக் காலத்தில் ஆப்பிரிக்கா , ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே மாதிரியான பண்பாடு இருந்துள்ளது இதனை பெருங்கற்கால பண்பாடு என தொல்லியலாளர்கள் அழைக்கின்றனர்.
குறிப்பாக கல்வட்டம், கல் திட்டை, கல் பதுக்கை, நெடுங்கல், கற்குவை உள்ளிட்ட அமைப்புகள் பரவலாக காணப்படுகின்றன.
இந்த அமைப்புகளில் இறந்த முக்கியத்துவம் வாய்ந்த வீரர்கள் , வேட்டை, போர் உள்ளிட்ட பொதுவான காரணங்களால் இறந்தவர்களுக்கும், வயது மூப்படைந்தவர்கள் நினைவாக பெரிய கற்களை கொண்டு அமைக்கப்பட்டமையால் பெருங்கற்கால சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன.
இது இரும்பு உளி உள்ளிட்டகருவிகளின் துணையோடு பாறைகளை உடைத்து பயன்படுத்தியமையால் இது இரும்புக்காலத்தில் இருந்த மற்றொரு பண்பாடு என்றும் நோக்கப்படுகிறது .
பெருங்கற்கால சின்னங்களின் காலம்
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திலுள்ள கல் வட்டங்களின் வயது கி.மு 2500 லிருந்து 1500 வரையிலும் இது வடகிழக்கு பிரான்ஸ் பகுதியில் கி.மு 5000 எனவும், கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பேராசிரியர் கே.ராஜன் தலைமையில் நடந்த கொடுமணல் ஆய்வு முடிவுகளின் படி கி.மு 540 லிருந்து காலக்கணிப்பு முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும் இவைகளில் எழுத்து பொறிப்புகளுடன் கிடைத்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எழுத்துவடிவம் இருந்துள்ளதை இந்த அகழ்வாய்வு வெளிப்படுத்தியது. இந்தியாவில் இரும்புக்காலம் என்பது கி.மு 1100 லிருந்து கி.மு 350 என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் கே.பி.ராவ் தலைமையில் நடந்த அகழ்வாய்வின் போது கிடைத்த கத்தி , மட்பாண்டங்கள் உள்ளிட்டவற்றை காலக்கணிப்பு செய்தததில் கிடைத்த முடிவுகளின் படி இரும்புக்காலம் கி.மு. 2400 முதல் அதாவது இன்றிலிருந்து 3400 வருடங்களுக்கு முன்னதாக தொடங்குவதாக செய்தி வெளிவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா சத்திரம் , ஆரணிப்பட்டி, ராஜகுளத்தூர், செங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்வட்டத்துடன் கூடிய கல்லறைகள், கல் பதுக்கைகள், கல் திட்டைகள் அடையாளம் காணப்பட்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு செங்களூர் கல்வட்டதிலுள்ள கல் பதுக்கையை ஆய்வு செய்ததில் கிடைத்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் மணிகளும் கிடைத்துள்ளன. அவற்றை காலக்கணிப்பு செய்ததது பற்றிய எவ்வித குறிப்புகளும் கிடைக்கவில்லை ஆனாலும் இவற்றின் காலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரை பழமையானது என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட அறிவியல் பூர்வ காலக்கணிப்பு முறைகளின் படி தற்போது நம்மால் அடையாளம் காணப்பட்ட கல்வட்டத்தின் 3000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதலாம் .
இந்த கண்டுபிடிப்பு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் கரு.ராஜேந்திரன் கூறியதாவது, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இதே போன்று பல வரலாற்று தடயங்கள் அடையாளம் காணப்படாமல் அழிந்து கொண்டிருக்கிறது. அவற்றை ஆவணப்படுத்துவதும், பாதுகாப்பதுமே நமது முக்கிய கடமையாகும் அதே நேரத்தில் தொல்லியல் தடயங்களை முறையாக பராமரிக்கவும் தொடர் பாதுக்காப்பை உறுதி செய்யவும் இவற்றை தொல்லியல் சின்னங்களாக அறிவிப்பது அவசியமாக உள்ளது. ஒரு சில இடங்களில் வனத்துறை இத்தகைய பெருங்கற்கால சின்னங்களை அழித்துவிட்டு யூகலிப்டஸ் கன்றுகளை நட்டு வருகிறது, இது குறித்து வனத்துறை பணியாளர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அதிகமான தொல்லியல் முக்கியத்துவம் பகுதியாக புதுக்கோட்டை இருப்பதால் திருமயம் துணை தொல்லியல் வட்டத்தை, தொல்லியல் வட்டமாக தரம் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு மாநில அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலம் புதிய இடங்களை தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பாதுகாக்க வாய்ப்பு ஏற்படும் என்றார்.
இவற்றை போல திருவண்ணாமலைமாவட்டம் வரலாற்று சிறப்புகள் புதைந்து கிடக்கிறது. அந்த வரலாற்றை ஆவணப்படுத்துவதுடன் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்ந பதிவுனை இடுகிறேன் . அப்படி ஆய்வுகள் செய்து பாதுகாக்கவில்லை என்றால் கல்குவாரி ஆட்களின் பிடியிலும் ஆக்கிரமிப்பிலும் உள்ள வரலாற்று சான்றுகள் அழிக்கப்பட்டு தமிழர்களின் வரலாறும் அழிக்கப்படலாம்.