இந்த அரசு மிகுந்த அச்சு முற்றிருக்கிறது - எழுத்தாளர். அருந்ததிராய்
(தோழர். சாய்பாபா அவர்கள் கைது செய்யபட்ட பொது Out Look பத்திரிக்கையில் கடந்த 18 மே 2015 ம் தேதி எழுத்தாளர். அருந்ததிராய் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு)
இந்த அரசு மிகுந்த அச்சு முற்றிருக்கிறது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கியுள்ள கல்வியாளரை மகாராஷ்டிரா காவல்துறை கடத்தி கைது செய்தனர். இந்த அரசு மிகுந்த அச்சமுற்றிருக்கிறது.
டில்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட, ராம்லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கிலதுறை விரிவுரையாளர் முனைவர். G.N. சாய்பாபா தன் வேலை முடித்து வீட்டிற்கு வரும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நிகழ்வு நடந்தேறி (மே 9, 2015) இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. G.N. சாய்பாபாவின் மனைவி, தன் கணவர் வீடு திருப்பாதது குறித்து கவலை கொண்டு அலைபேசியில் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போது அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது கண்டு சற்றே கலக்கத்துடன் அருகில் இருந்த காவல்நிலையத்தில் கணவர் வீடு திரும்பவில்லை என புகார் அளித்தார். சில நாட்கள் விசாரணைக்கு பின்பு தான் திரு. சாய்பாபாவை கடத்திய மர்ம நபர்கள் மகாராட்டிரா காவல்துறையை சேர்ந்த காவலர்கள் என தெரிய வந்தது மேலும் திரு. சாய்பாபாவை கடத்தப்படவில்லை மாறாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று சட்டமீறலாக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிய வந்தது.
வீல் சேரில் பிணைக்கப்பட்டுள்ளவரும்/ இருக்கவேண்டியவரும் 5 வயதிலிருந்தே, தனது இடுப்பிற்கு கீழ் பகுதியிலிருந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளவரை ஏன் இம்மாதிரியாக கடத்தியுள்ளனர். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, ஏற்கனவே சாய்பாபாவின் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறைக்கு டில்லி பல்கலைகழக வளாகத்தில் சாய்பாபா கைது செய்யப்பட்டால் அதை எதிர்த்து வரும், பொதுமக்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்திருக்கும். திரு. சாய்பாபா சிறந்த ஆசிரியர் என்பதை தாண்டி அவரின் தெளிந்த அரசியல் பார்வை அங்கிருந்த அனைவரையும் அவரின் மீது அளவு கடந்த மரியாதையை ஏற்படுத்தியிருந்தது. இரண்டாவதாக அளவற்ற துணிச்சலையும், தேர்ந்த நல்லறிவை மட்டுமே ஆயுதமாக கொண்டிருந்த திரு.சாய்பாபாவை திடீரென கடத்தி கைது செய்வதன் மூலம் தாங்கள் ஒரு அதிபயங்கர ஆயுதம் ஏந்திய தீவிரவாதியை கைது செய்திருப்பதாக ஊடகங்கள் மூலம் மக்களிடம் தவறான பரப்புரையை பரப்பியது. இவை இரண்டும் தான் கடத்தி கைது செய்வதற்கான காரணங்களாகும்.
திரு.சாய்பாபா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பது சமூக ஆர்வலர்களிடம் சில வருடங்களாகவே விவாதமாக இருந்து வந்தது. எது வந்தாலும் சரி, எப்படிப்பட்ட இக்கட்டான சூழல் வந்தாலும் அதை பக்குவமான முறையில் எதிர்கொள்ள அவர் தயாராக இருக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருந்தது. அதை மனதில் கொண்டு தான் தனது PH.D. (முனைவர் பட்ட படிப்பு) ஆராய்ச்சியை வெகு நேரம் ஒதுக்கி “இந்திய ஆங்கில படைப்புகளின் ஒழுங்கமைப்பில் உள்ள அரசியல்” என்ற தலைப்பில் தனது ஆராய்ச்சி கட்டுரையை விரைவாக முடித்து டாக்டர் பட்டம் பெற்றார்.
எது அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யபடலாம் என நினைக்க வைத்தது? அவர் செய்த குற்றம் என்ன? உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் கடந்த 2009, செப்டம்பர் மாதத்தில் “ஆப்ரேஷன் கிரீன் ஹண்ட்” (பச்சை வேட்டை) என்ற பெயரில் இந்தியாவில் சிவப்பு ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பழங்குடி மக்கள் மீதான போரை செயல்படுத்தினார். மத்திய இந்தியாவில் நிலை கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகளை பாரா மிலிட்டரி (துணை ராணுவம்) படைகளின் உதவியோடு முற்றிலுமாக அழித்தொழிப்பதே பச்சை வேட்டையின் முதனமை நோக்கமாக விளம்பரபடுத்தப்பட்டது.
ஆனால் நேரிடையாக பார்த்தால் அது உள்ளூர் கூலிப்படை மற்றும் குண்டர்கள் உதவியுடம் பழங்குடி மக்களின் மண்ணை முற்றிலும் அபகரிக்கும் திட்டமாகவே (பச்சை வேட்டை) செயல்பட்டது. (பஸ்தார் பகுதியில் செய்யப்பட்ட சல்வா ஜீடும்” அமைப்பு கூலிப்படையின் நேரடி சாட்சி. பிற பகுதிகளில் அரசின் நிதியுடன் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டார்கள். கார்பரேட் நிறுவனங்களிடம் செய்யபட்ட ஒப்பந்தத்தில் காரணமாக ஆதிவாசிகள் குடியிருப்பு, வாழ்வியல் நிலங்கள், பசுமை காடுகளை முற்றிலுமாக அழித்து விட்டு அந்த நிலங்களை கையகப்படுத்தி கார்பரேட் நிறுவனங்கள் கட்டுமானத்திற்கும், கனிம வள கொள்ளைக்கும் அளிப்பதே பச்சை வேட்டை என்ற பெயரில் நடந்தேறியது. பழங்குடி மக்களின் வாழ்வியல் பகுதிகளை தனியார் கார்பரேட் நிருவனங்களுக்கு தாரை வார்ப்பது என்ற அரசின் திட்டம் முற்றிலும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதை குறித்து அப்போதைய (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) கவலை கொள்ளவில்லை. (தற்போது புதிய சட்ட வடிவின் படி பழங்குடி மக்களின் நிலங்களை கூட நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் சட்டப்படி கையகப்படுத்த அரசிற்கு உரிமை உண்டு என்ற முரணான சட்டம் இயற்றப்பட்டு விட்டது).
ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவ படைகள் அரசின் ஆதரவு பெற்ற கிராம கூலிப்படை குண்டர்களின் கூட்டணியுடன் பசுமை காடுகளில் ஆரவாரத்துடன் நுழைந்தார்கள், காடுகளை அழித்தார்கள், பழங்குடிகள் கிராமங்களை எரித்தார்கள், மக்களை வயது, பாலின வரம்பின்றி படுகொலை செய்தார்கள். பெண்களை கொடூரமாக தாக்கியதுடன் பாலியல் வல்லுறுறவுகளை தொடர்ச்சியாக நிகழ்த்தினார்கள். பல்லாயிர பழங்குடி மக்கள் அவர்களில் தொன்றுதொட்ட வாழ்விடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டு எந்த விதமான உறைவிட வசதிகளும் இல்லாத அடர்ந்த காடுகளில் வெற்று வானகத்திற்கு கீழ் பல மாதங்கள் வாழ நேர்ந்தது.
தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி தங்களது வாழ்க்கையை இழந்த பழங்குடி மக்களின் கோபத்தின் எதிர்வினையாக தாங்களாகவே முன் வந்து CPI (மாவோயிஸ்ட்) யின் அமைப்பான PLGA (மக்கள் விடுதலை போர் படை)-யில் தங்களை இணைத்து கொண்டனர். முன்னாள் இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் தனது உரையில் “இந்தியாவின் ஒரே உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் மாவோயிஸ்டுகள் தான் என பலமாக நம்பினார். இப்போது கூட பச்சை வேட்டைக்கு உள்ளான பகுதிகள் அனைத்தும் “உள்நாட்டு போர்” பகுதிகள் என்றே அழைக்கப்படுகிறது.
2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகள் பச்சை வேட்டை தனது மிகக் கொடூரமான மனிதத்தன்மையற்ற நிலையை எட்டிய போது அதற்கு எதிர்வினையான சக்திகளின் காரணிகளின் ஒன்று கூடல் அதிவேகமாக பரப்புரையில் ஈடுபட நேர்ந்தது. பச்சை வேட்டைக்கு எதிரான மனோபலத்துடன் போர்க்குணமிக்க மக்கள் பேரணிகள், பொது கூட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்தியாவின் வனங்களில் நடைபெற்ற மக்கள் மீதான போர் குறித்த செய்தி வெகுவாக பொதுவெளியில் தெரிய ஆரம்பித்ததின் விளைவாக சர்வதேச ஊடகங்களின் கவனம் இதன் மீது குவியத் தொடங்கியது. பச்சை வேட்டைக்கு எதிரான பரப்புரையை மக்களுடன் இணைந்து பொது தளத்திற்கு நகர்த்திய சக்திகளின் முன்னிலையில் டாக்டர். சாய்பாபா வலுவாக நின்றிருந்தார். தொடர் பரப்புரைகளின் விளைவாக பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட தற்காலிகமாக சிறிய இடைவெளி ஏற்பட்டது. அரசு தரப்பில் சிறிது கூட வெட்கமே இல்லாமல் பச்சை வேட்டை என்ற எதுவும் நடைபெறவில்லை அது ஊடகங்களால் பரப்பபடும் கட்டுக்கதை என அதி வேகமாக பிரச்சாரம் செய்தது.
(சல்வாம் ஜீடுவின் செயல்பாடுகள் சட்ட விரோதமானவை எனவே சல்வாம் ஜீடு தடைசெய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சற்றே அதன் செயல்பாடுகள் குறைந்தது ஆனால் 2015 மே 5 அன்று சல்வா ஜீடு அமைப்பின் நிறுவனர் மகேந்திர கர்மாவின் மகன் சாவிந்தர் கர்மா மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியானதை அடுத்து சல்வாம் ஜீடு- 2 என்ற பெயரில் மீண்டும் வெறியாட்டத்தை தொடங்கியது).
அரசின் கூற்றுப்படி பெயரிடப்படாத இந்த அத்துமீறிய செயல்பாட்டை கண்டிக்கவோ, விமசிக்கவோ அல்லது எதிர்க்கவோ எவரேனும் துணிந்தால் அவர்கள் மாவோயிஸ்டுகள் என்பதே அரசின் நிலைபாடக இருக்கிறது. இதையெடுத்து ஆயிரக்கணக்கான தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் மாவோயிஸ்ட் என கூறி அரசுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டினார்கள் அரசிற்கு எதிராக போர் புரிந்தார்கள் என்று அபாண்டமான பொய் குற்றச்சாட்டை புகுத்தி அப்பாவி மக்களை நீண்டகால சிறையிலடைத்தனர். அவர்கள் அனைவர் மீதும் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பிணையில் வர இயலாத வண்ணம் சிறையில் அடைக்கப்பட்டார். ஊபா சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டதால் முறையான விசாரணையின்றி முறையான நீதி கிடைக்காமல் கிராமவாசிகள் சிறையிலிருந்த நிலையில் அரசு தனது பார்வையை கிராமவாசிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நகர்வாசிககளின் மீது திரும்பியது அதிலும் குறிப்பாக மக்களிடம் எந்தவிதமான ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக அரசின் சட்டமீறலை எடுத்து சொல்லி நியத்தை கோரி வந்த அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள், அரசின் இலக்காக இருந்தது.
பச்சை வேட்டை தொடங்கிய போது இருந்த மக்களின் எதிர்ப்பை வெறித்தனமாக அடக்கிய நிலையில் மீண்டும் எந்த வகையிலும் எதிர்ப்பு வந்து விடக்கூடாது என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதனை அடிப்படையாக கொண்டே 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பிராமண பத்திரத்தை தாக்கல் செய்தது. “ CPI (மாவோயிஸ்ட்) அமைப்பின் ஆதரவாளர்கள், அந்த கொள்கையின் அமைப்பின் மீது அபிமானம் கொண்டர்கள் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு அரசின் கொள்கை முடிவை எதிர்க்கும் விதமாக தொடர்ச்சியாக பிரச்சனை செய்து தீவிரமாக அரசின் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த கொள்கைவாதிகள் தான் “மாவோயிஸ்ட் இயக்கத்தையும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மக்கள் விடுதலை கொரில்லா படையை காட்டிலும் மிகவும் அபயகரமானவர்கள் என்று மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தது.
டாக்டர். சாய்பாபா குறித்து திட்டமிட்ட, மிகைபடுத்தப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்ததின் விளைவாக அவர் பற்றி தவறான பரப்புரை பொது வெளியில் வலம் வர ஆரம்பித்தது. (அவர் குறித்த முறையான ஆதாரங்கள் இல்லாத நிலையில் இட்டுக்கட்டப்பட்ட தவறான செய்திகள் மூலம் அவரின் மீதான குற்றசாட்டுகளை கூர்மைபடுத்த திட்டமிட்டு காய்களை நகர்த்தினர் இதன் மூலம் டாக்டர். சாய்பாபா மீது சந்தர்ப்ப சாட்சிங்கள் என்ற சொத்த வாதத்தினை கொண்டு நகர்த்தினர் என்பதே முதன்மை நோக்கமாக இருந்தது)
பச்சை வேட்டைக்கு எதிராக பரப்புரைகளை மக்களிடம் எடுத்து சென்றதில் டாக்டர். சாய்பாபா முன்னிலை செயல்பாட்டாளராக இருந்து வந்தார். அரசு பச்சை வேட்டை என்று எந்த ஒரு செயல்படும் இல்லை அது முற்றிலும் பொய் என்பதை கூறியது. எனவே பெயரில்லாத நடவடிக்கையாகவே அரசின் அடக்குமுறை தொடர்கிறது.
செப்டம்பர் 12, 2013 அன்று மஹாரஷ்டிராவில் உள்ள அஹேரி மாவட்ட நீதிபடியிடம் ஆணை பெற்று டாக்டர். சாய்பாபாவின் வீட்டை 50 க்கு மேற்பட்ட காவல் துறையினர் டாக்டர். சாய்பாபாவின் வீட்டை தேடுதலுக்கு உட்படுத்தினர். பொருட்கள் திருடப்பட்டதாக தேடுதலுக்கு உண்டான அவரின் வீட்டில் எந்த பொருளும் கிடைக்கவில்லை. மாறாக அவரிடம் இருந்து மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க், மற்றும் பென் டிரைவ், ஆகியவை காவல்துறையினர் எடுத்துச் சென்றனர். இரண்டு வாரங்களுக்கு பிறகு அந்த வழக்கின் புலனாய்வு அதிகாரி சுவாஸ் பவாச், டாக்டர். சாய்பாபாவை தொலைபேசியில் அழைத்து காவல்துறை எடுத்து சென்ற ஹார்ட் டிஸ்க், பென் டிரைவின் பாஸ் வோர்டை கேட்டார். சாய்பாபா எந்த விதமான ஒளிவு மறைவுமின்றி பாஸ் வோர்டை அளித்தார். 2014, ஜனவரி 9 ஆம் தேதி, காவல்துறையின் ஓர் குழு சாய்பாபாவை அவருடைய வீட்டில் சந்தித்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பிறகு 2014 மே 9, டாக்டர். சாய்பாபா திடீரென காவல்துறையால் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த இரவே அவர் விமானம் மூலம் நாக்பூர் அழைத்து செல்லப்பட்டார் பின்னர் அங்கிருந்து மஹாரஷ்டிராவில் உள்ள அஹேரிக்கு அழைத்து சென்றனர் பின்னர் மீண்டும் நாக்பூர் அழைத்து வரப்பட்டார். நாக்பூரில் பல நூறு காவல்துறையினர் குண்டு துளைக்காத, மதி வெடியால் கூட சிதைக்க முடியாத வாகனத்தில் உச்சகட்ட பாதுகாப்பு நடைமுறையுடன் நாக்பூர் சிறையிட்டனர். நாக்பூர் சிறையில் மிக மோசமான குற்றவாளிகள் அடைக்கப்படும் “அண்டா செல்லில்” அடைக்கப்பட்டார். விசாரணை என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் வாடும் 3 லட்சம் சிறைவாசிகளுடன் டாக்டர். சாய்பாபாவின் பெயரும் இணைக்கப்பட்டது.
90% சதவிகிதம் உடல் ஊனமுற்ற நிலையில் தள்ளு வண்டியின் உதவியால் மட்டுமே நடமாட முடியும் என்ற நிலையிலிருந்த சாய்பாபாவின் வீல் சேர் கூட காவல்துறையின் கடும் நெருக்கடியில் சிதைந்து போனது. உடல்நிலை மேலும் மோசமான மோசமகாமல் தடுக்கும் வண்ணம் அதித அக்கறை, தொடர் சிகிச்சை, மூட நீக்கவியல் மருத்துவ உதவி, மருந்து மாத்திரைகள் மூலம் சிறிதளவு இயங்கி வந்த டாக்டர். சாய்பாபாவை எந்தவித வசதிகளுமற்ற வெற்று சிறை அறையில், வலுக்கட்டாயமாக தள்ளினர். (அவர் அதே அறையில் தனியாக இன்றும் இருக்கிறார்). சிறுநீர் கழிக்க கூட மற்றவர்கள் உதவி தேவைப்படும் அவரை யாருமற்ற அறையில் தனிமை சிறையில் அடைத்தது காவல்துறை யாருமற்ற நிலையில் சிறை அறையின் நான்கு சுவர்களுக்கு இடையே அவரால் தவழ மட்டுமே முடியும். அரசின் சட்ட விதிமுறைகளின் படி சாய்பாபாவை கொடுமைபடுத்தவில்லை என்று எடுத்துக் கொண்டால் கூட முற்றிலும் உடல் இயக்கம் (90%) நின்று போன ஒருவர் தனிமையில் தவிக்க விட்டதே கடுங்கொடுமை. யாரின் உதவியும் இல்லாமல் தனிமையில் இருக்கும் ஒருவரை எந்தவித கொடூரத்திற்கு உட்படுத்தாமல் கூட எளிதாக கொண்டு விட முடியும்.
அடுத்த நாள் காலை நாக்பூரில் வெளிவந்த பத்திரிக்கைகளில் டாக்டர். சாய்பாபா காவல்துறையினரின் பிடியில் இருக்கும் புகைப்படமே தலைப்பு செய்தியாக இருந்தது. புகைபடத்தில் தீவிரவாதி என்ற முத்திரையுடன் உடைந்த வீல் சேர் இருக்கையில் காவலர்களின் நெருக்குதலுடன் அமர்ந்திருந்தார்.
அவர் UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரிவு 13 (சட்ட மீறல் நடவடிக்கையில் பங்கு பெறுதல், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருத்தல்), பிரிவு 18 (சதி ஆலோசனை/ தீவிரவாத நடவடிக்கையில் பங்கு பெறுதல்), பிரிவு 20 ( (தீவிரவாத குழு அல்லது இயக்கத்தில் உறுப்பினராக இருத்தல்), பிரிவு 38 (தீவிரவாத குழுக்களுடன் உறவாடுவதும் அதன் தீவிரவாத நோக்கங்களுக்கு ஆதரவாக இயங்குதல் மற்றும் பிரிவு 39 (தீவிரவாத குழுவிற்கு ஆதரவாக இருப்பதுடன் அதன் கூட்டங்களில் ஊக்குவிக்கும் விதமாக பங்களிப்பது) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. CPI (மாவோயிஸ்ட்) அமைப்பின் தோழர். நர்மதாவிற்கு “கம்ப்யூட்டர் சிப்” ஒன்றை ஜவகர்லால் நேரு பல்கலைகழக மாணவர் ஹேமா மிஸ்ரா மூலம் கொடுத்து அனுப்பியதாக குற்றசட்டப்பட்டார். ஆகஸ்ட் 2013 அன்று பல்லர்ஷஸ் தொடர்வண்டி நிலையத்தில் ஹேமா மிஸ்ரா கைது செய்யப்பட்டு நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதே வழக்கில் குற்றட்சாட்டப்பட்ட மேலும் மூவர் பிணை கிடைத்ததால் வெளியே உள்ளனர்.
டாக்டர். சாய்பாபா மீதான குற்றப்பத்திரிக்கையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள மற்றொரு குற்றம் அவர் புரட்சிகர ஜனநாயக முன்னணி (revolutionary democratic front)-யின் இணை செயலாளராக இருக்கிறார் என்பதாலும் இந்த அமைப்பு மாவோயிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்பு என்ற சந்தேகத்துடன் ஒரிசா மற்றும் ஆந்திரவில் தடைசெய்யப்பட்டு இருந்தது. ஆனால் டில்லியில் இதற்கு எந்த தடையும் இல்லை. புரட்சிகர ஜனநாயக முன்னணி அமைப்பின் தலைவர் கவிஞர் வரவரராவ் பொது தளத்தில் வெகுவாக அறியப்பட்டவர் இவர் ஐதராபாத்தில் உள்ளார்.
டாக்டர். சாய்பாபா மீதான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் இன்னும் தொடங்கவில்லை. அது எப்போது தொடங்கும் சில மாதங்களிலா? அல்லது சில வருடங்களிலா? 90 % உடல் இயக்கங்கள் நின்று போன ஒருவர் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத சிறையில், மோசமான சூழலில் இந்த வழக்கின் விசாரணை காலம் வரை உயிரோடிருப்பாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
சிறையில் ஒரு வருடத்திற்கு மேலாக அடைக்கப்பட்டிருக்கும் திரு.சாய்பாபாவின் உடல்நிலை வெகுவாக அச்சமுறக் கூடிய அளவிற்கு சிதைந்துள்ளது. மேலும் அவர் தாங்கவியலாத தொடர்ச்சியான வலியால் அவதியுகிறார். (போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறான வலி இயல்பான ஒன்று என சிறையாதிகரிகள் பதிலுரைக்கின்றனர்) அவரது தண்டுவடம் வெகுவாக செயல் இழந்து விட்டது. தண்டு வடம் முறுக்கி கொண்டு இருக்கத்துடன் நுரையீரலுக்கு எதிராக முட்டி வருகிறது. இடது கையில் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கி போனது. சிறைத்துறை அதிகாரிகள் டாக்டர். சாய்பாபாவை அருகில் உள்ள உள்ளூர் மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற போது அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ (இருதய ரத்த நாள அடைப்பை சரி செய்ய உதவும் சிகிச்சை) செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆஞ்சியோ சிகிக்சைக்கு அவரை உட்படுத்துவீர்களால் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு இருந்த உடல் நிலையும், சிறையில் இருந்த பொழுது இருந்த உடல்நிலையும் பற்றி சொல்ல முடியுமா? ஒருவேளை சிகிச்சைக்கு அனுமதிக்காவிட்டால் ஏற்படும் உடல்விளைவுகளை சொல்ல முடியுமா? சிறை அதிகாரிகள் டாக்டர். சாய்பாபா வெளியிலிருந்து சிகிச்சை பெற அவசியம் இல்லை என்று மறுத்து விட்டனர். இது அவரின் உடல் இயங்குதலுக்கான சவால் அல்ல மாறாக உயிர் இருப்புக்கான சவாலாக மாறியுள்ளது. மருத்துவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நேரத்தில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு உணவு கட்டுபாட்டிற்கும் மறுப்பு வந்து விட்டது.
மாற்றுத்தினாளிகளுக்கான உரிமைகளை வழங்கும் சர்வதேச உடன்படிக்கையில் இந்தியாவும் கையொப்பமிட்டுள்ளது. ஆனால் மாற்றுத்தினாளியான டாக்டர். சாய்பாபா கீழுமை நீதிமன்றத்தில் இரண்டுமுறை பிணை கேட்டும் நீதிமறுக்கப்பட்டு நீண்டகாலமாக சிறையில் இருந்து வருகிறார். அதிலும் இரண்டாம் முறை அவர் பிணை கேட்ட பொழுது சிறையாதிகரிகள் “நாங்கள் அவரை அதிதீவிர அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறோம்.” என்பதாக வாக்குமூலம் அளித்தது. இதை ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக் கொண்டு நீதிமன்றம் பிணை தர மறுத்து விட்டது. (அவரின் உடைந்த வீல் சேருக்கு பதிலாக புதிய வீர் சேர் தவிர குடும்பத்தினரை அனுமதித்தனர் தவிர வேறென்றும் இல்லை).
டாக்டர். சாய்பாபா சிறையில் இருந்து எழுதிய கடிதத்தில் இரண்டாம் முறை பிணை மறுக்கப்பட்ட செய்தி கிடைத்தவுடன் சிறை நிர்வாகம் ஏதோ பெயருக்கு வழங்கி வந்த சிற்சில சிறப்பு உதவிகளையும் முற்றிலுமாக விலக்கிக்கொண்டது. அடுத்த சில நாட்களில் தனக்கான சிறப்பு உதவிகளை கேட்டு பட்டினி போராட்டம் நடத்திய சாய்பாபா மயங்கிய, நினைவிழந்த நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நமது வாதங்களை சாய்பாபா நல்லவரா, கெட்டவரா ஏதும் அறியாதவரா என்பதை விலக்கி வைத்து விட்டு அரசு அவர் மீது சுமத்தி இருக்கின்ற குற்றச்சாட்டுகளை மட்டும் அடிப்படையாக கொண்டு நாம் “பிணை மறுக்கப்பட்ட விவாதப்படுத்துவோம்” ஏனென்றால்?, இது டாக்டர். சாய்பாபாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பார்த்தால் அவருக்கு “பிணை” என்பது வாழ்வா சாவா போராட்டம். அவர் மீது சுமதப்பட்ட குற்றசாட்டுக்களை தவிர்த்து விட்டு டாக்டர். சாய்பாபாவிற்கு பிணை கிடைக்குமா? கிடைக்காத? முன்னே நடந்து வரும் வழக்கு விசாரணைகளில் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்கள், அரசு ஊழியர்களுக்கு பிணை முழு மனதோடு வழங்கப்பட்ட விவரங்களை சற்றே பார்ப்போம் :-
2002- இல் நடத்தபட்ட நரோதா பாட்டியா படுகொலையில் பட்டபகலில் 97 மனிதர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதில் குற்றம் உறுதி செய்யபட்டு 2002-இல் பாபு பஜ்ரங்கி குற்றவாளி என அறிவிக்கபட்டு ஆயுள்தண்டனை குசராத் நீதிமன்றம் தீர்பளித்தது. பாபு பஜ்ரங்கி தனது குற்றத்தை குறித்து கூறிய வார்த்தைகள் “கண்ணெதிரில் பட்ட எல்லா முஸ்லிம் கடைகளும் அடித்து நொறுக்கினோம், தீ வைத்தோம், முஸ்லீம்களை கொன்றொழிதோம். அனைவரையும் தீயிட்டு கொன்றோம். இறந்த பிறகு தகனம் செய்வதை விரும்பாத அந்த முறை தவறிய மக்களை தீயிட்டு கொல்வதே எங்கள் நோக்கம். அவர்களை கொன்ற பிறகு நான் மகாராணா பிரதாப் மன்னரை போல் எனக்குள்ளவே கர்வபட்டேன். (செப்டம்பர் 1,2007, தெகல்கா) இப்படி ஒப்புதல் பத்திரம் வாசித்த பாபு பஜ்ரங்கி ஆயுள் தண்டனை பெற்ற பிறகு கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள பிணை கேட்ட பொழுது குசராத் உயர்நீதிமன்றம் 2015 ஏப்ரல் 23-இல் உடனடியாக பிணைக்கு ஒப்புதல் தந்தது. கண் அறுவை சிகிச்சைக்கு பிணை தந்த நீதிமன்றங்கள் சாய்பாபாவின் அதிதீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிணை தர மறுக்கிறது. பாபு பஜ்ரங்கிக்கு கண் அறுவை சிகிச்சை தேவையான ஒன்று தான் கொடூரங்களை கண்குளிர நடத்திய அந்த கண்களுக்கு மாற்றாக வேறு கண்கள் மூலமாவது பாதமில்லாத உலகை காணட்டும் என்று கூட இருக்கலாம்.
குசராத் நரோதா பாட்டியா படுகொலை வழக்கின் மூளையாக விளங்கிய குசராத் முதலமைச்சராக நரேந்திர மோடி தலைமையில் இயங்கிய அமைச்சரவையில் அங்கம் வகித்த மாயா கோட்னானிக்கு நீதிமன்றம் 28 வருட கடும் காவல் தண்டனையை வழங்கியது. மாயா கோட்னானி ஓர் மருத்துவரும் கூட தனக்கு குடல் காசநோய் உள்ளது, இதய நோய் நிலை, மருத்துவ சிகிச்சையின் மன அழுத்தம் மற்றும் தண்டு வட பிரச்சனை உள்ளது என்று மருத்துவ காரணங்களை பட்டியிலிட்டு பிணை கோரினார். குசராத் உயர்நீதிமன்றம் அவரின் பிணை கோரிக்கையை ஏற்று தண்டனையை ரத்து செய்தது.
வழக்கு விசாரணையில் உள்ள டாக்டர். சாய்பாபாவின் வீல் சேரை மட்டுமே மாற்ற அனுமதித்த நீதிமன்றம் அவருடைய பிணையை இரண்டாவது முறையும் தள்ளுபடி செய்தது. குற்றம் நிரூபிக்கபட்டு தண்டனை அனுபவித்து வந்த பஜ்ரங்கி, மாயா கோட்னானி ஆகியோருக்கு எளிதான மருத்துவ நிலைக்கே பிணை உடனடியாக வழங்கப்பட்டது.
நாட்டையே உலுக்கிய சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கௌசர் பி, துளசிராம் பிரஜாபத் போலி என்கவுண்டர் வழக்கில், அவர்களை போலி என்கவுண்டரில் கொல்வதற்கு ஆணையிட்ட அமித்ஷா அப்போது குசராத் முதலமைச்சர் மோடி அரசின் அமைச்சராக இருந்தது. 2010 ஜூலையில் காவல்துறை விசாரணை செய்து அமித்ஷாவை கைது செய்தது. சிபிஜ தரப்பு அமித்ஷா இந்த வழக்கில் நேரடி தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுடன் அமித்ஷா தொடர்ச்சியாக தொடர்பு வைத்திருந்ததை நிரூபிக்கும் தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்து சமர்பித்து மேலும் சொராபுதீன் மற்றும் இருவரை காவல்துறை என்கவுண்டர் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னே முறையற்ற வகையில் பிடித்து அடைத்து வைத்திருந்ததையும் அந்த சமயத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கும் அமித்ஷாவிற்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் சொராபுதீனை போலி என்கவுண்டர் செய்து படுகொலை செய்யும் வரை நீடித்த உரையாடல்களையும் சிபிஜ தரப்பு அம்பலத்திற்கு கொண்டு வந்தது. அதை கேட்கும் எவரும் அமித்ஷா தான் குற்றவாளி என எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் அமித்ஷா கைது செய்யபட்ட மூன்று மாதத்திற்குள் பிணை பெற்று வெளியே வந்து விட்டார். (அதன் பிறகு காட்சிகள் வெகுவாக மாறி சொரபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப் பட்டுவிட்டார்) தற்போது அமித்ஷா பாரதிய சனதா கட்சியின் தலைவர் மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரம் போல விளங்குகிறார்.
1987 ஆம் ஆண்டு மே 22 அன்று உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹஸிம் புராலில் மாகாண ஆயுதபடையினரால் 42 முஸ்லிம் ஆண்கள் சுற்றி வளைக்கப்பட்டு சற்றும் எதிர்பாராத விதமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்த 42 பேரின் உடல்களும் அருகில் இருந்த நீர் வழி வாய்க்காலில் புதைக்கப்பட்டது. இந்த வழக்கில் மாகாண ஆயுதப்படையை சார்ந்த 19 நபர்களின் மீது குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்களது பதவினை எந்த வித சிக்கலுமின்றி தொடர்ந்து வகித்து வந்ததுடன் அதில் உயர்பதவினையும், ஊதிய சன்மானங்களையும் இறுதி வரை அனுபவித்து வந்தனர். 13 வருடங்களுக்கு பிறகு 2000-ஆம் ஆண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 16 நபர்கள் சரணடைந்தனர் (3 நபர்கள் பணி நாட்களிலே இறந்து போயிருந்தனர்.) சரணடைந்த அனைவருக்கும் உடனடியாக எளிதில் பிணை கிடைத்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச்யில் ஹசிம்புரா வழக்கில் குற்றம்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தை காட்டி அனைவரும் விடுதலை செயப்பட்டனர்.
சமீபத்தில் சாய்பாபா வழக்கு தொடர்பாக பாதுகாப்பு மற்றும் விடுதலை குழுவின் உறுப்பினர் ஹேனி பாபு நீண்ட முயற்சிக்கு பின் டாக்டர். சாய்பாபாவை மருத்துவமனையில் சில நிமிடங்கள் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஏப்ரல் 23,2015 இல் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் (தக்க முறையில் பதிவு செய்யப்பட சந்திப்பு அல்ல) ஹேனி பாபு அவர்கள் தான் டாக்டர்.சாய்பாபாவை கண்டு பேசியிருப்பதை கீழுள்ளவாறு பதிவு செய்துள்ளார் :-
டாக்டர்.சாய்பாபாவிற்கு குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டியிருந்த கட்டிலுக்கு அருகில் நான் அமர்ந்து பேசினேன். அதன் அருகில் ஒரு காவலர் தனது AK47 ரக துப்பாக்கியின் முனையை டாக்டர். சாய்பாபாவின் தலையை குறி நோக்கி வைத்திருந்தார். இரு கால்களும் செயலிழந்து போன டாக்டர்.சாய்பாபா காவல் பாதுகாப்பில் இருந்து தப்பிக்க கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் வெளிபாடாக அது இருந்தது.
டாக்டர். சாய்பாபா நாக்பூர் மத்திய சிறையிருந்து உயிருடன் வெளியே வருவாரா? அவரின் காவல் நீடித்து இருக்க எதுவும் தேவை இருக்கிறதா? அப்படி எந்த தேவையும், காரணமும் இருப்பதாக தெரியவில்லை.
இது தான் நாம் ஏற்படுத்தியிருக்கும் நிலை, இதற்கு தான் நாம் வாக்களித்திருக்கிறோம், இதை தான் நாம் ஏற்றுக் கொண்டியிருக்கிறோம், இது தான் நாம்.
தமிழ் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் : இனியவன்
கருத்துரையிடுக