உலக நாடுகளை உலுக்கிய அம்மோனியம் நைட்ரேட் வெடிவிபத்து

 மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தின் ரசாயன கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4ம் தேதி வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், சுமார் 6000 பேர் காயமடைந்தனர். இந்த பயங்கர விபத்தால் 6 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. தற்போது இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் அம்மோனியம் நைட்ரேட் இருப்பு தொடர்பாக ஆராய்வதற்கான உத்தரவை மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தவின் மூலம் சென்னை மணலியில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ரசாயனத்தின் மதிப்பு ரூ 1.80 கோடியாகும். ஏற்கெனவே 43 டன் அம்மோனியம் நைட்ரேட்டுகள் கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் பாழாகிவிட்டன. மீதமுள்ள 697 டன் அம்மோனியம் நைட்ரேட் 37 கண்டெய்னர்களில் சென்னை மணலி சரக்கு பெட்டக மையத்தில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 2015-ஆம் ஆண்டு கொரியாவிடம் வாங்கி சென்னையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த அம்மோனியம் நைட்ரேட் உரிய ஆவணங்கள் இல்லாததால் சரக்கு பெட்டக மையத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இது கரூர் அம்மன் கெமிக்கல் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.


அம்மோனியம் நைட்ரேட் என்பது : வேதியியல் பெயரில் NH₄NO₃ என்று அழைக்கப்படும் அம்மோனியம் நைட்ரேட் இயற்கையாக கிடைக்கக் கூடியதாகும். இது ஒரு வெண்மை/சாம்பல் நிறப்படிகத் திண்மம் ஆகும். அம்மோனியம் நைட்ரேட் உரங்கள் தயாரிக்கவே அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய அமில பொருள் என இது கூறப்படுகிறது. இது நீரில் எளிதில் கரையக் கூடிய தன்மைக் கொண்டது. பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கையாகவும் அம்மோனியம் நைட்ரேட் உருவாக்கப்படுகிறது. இது மிக முக்கியமாக விவசாயத்துறையில் அதிக அளவில் நைட்ரஜனைத் தரக்கூடிய உரமாகப் பயன்படுகிறது. இந்தச் சேர்மமானது கடந்த காலத்தில், சுரங்கத் தொழிலின் மூலமாகப் பெறப்பட்டது. நடைமுறையில் தற்போது பயன்படுத்தப்படும் அம்மோனியம் நைட்ரேட்டானது 100 % தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டதாகும். அம்மோனியம் நைட்ரேட்டு உடல் நலத்திற்கு எத்தகைய கேட்டையும் விளைவிக்காது என்பதால் உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய உயிர் கொல்லும் அளவு 2.217 மி.கி./கி.கி. ஆகும். இது மேசை உப்பின் உயிர் கொல்லும் அளவில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமேயாகும்.


பயன்பாடுகள் : பயிர்கள் செழித்து வளர அம்மோனியம் நைட்ரேட் உரப்பொருளாக பயன்படுத்தப்படும் அதே வேளையில் பாறைகளை உடைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு எரிபொருளும் வெடிக்க குறிப்பிட்ட சில காரணங்கள் தேவை. அதே விதிதான் அம்மோனியம் நைட்ரேட்டுக்கும் பொருந்தும். அம்மோனியம் நைட்ரேட் மிகவும் ஆற்றல் கொண்டது. இது அதிக அளவு வெப்பத்தை வெளியிடுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அம்மோனியம் நைட்ரேட் இருந்தால் அது தீப்பிழம்பு போன்று வெளிப்புற வினைகள் பயன்படாமல் நெருப்பை வெளியிடுகிறது.அம்மோனியம் நைட்ரேட்டில் இருந்து ஆக்ஸிஜன் வெளியாகும் வாய்ப்பு உள்ளதால், கொழுந்து விட்டு எரிவதற்கு வசதியாக உள்ளது. பயங்கரவாதிகளும் தங்கள் தாக்குதல்களுக்கு அம்மோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தும் போக்கு தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 


சேமிக்கும் முறைகள் : அம்மோனியம் நைட்ரேட்டை சேமிப்பதற்கும் பராமரிப்பதற்கும் பல பாதுகாப்பு வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தீப்பற்றும் பொருட்களுக்கு அருகில் இதைச் சேமிக்கக்கூடாது. அம்மோனியம் நைட்ரேட்டின் அதிக அளவு கையிருப்பு, ஆக்சிசனேற்றத்தின் காரணமாக, ஒரு பெரிய தீ விபத்தாக முடியலாம்.


இதற்கு முன்பு நடந்த அம்மோனியம் நைட்ரேட் விபத்துகள் :  1921 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் அமோனியம் நைட்ரேட் வெடி பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 500 பேர் பலியாகினர். அமெரிக்காவில் 1947 ஆம் ஆண்டு டெக்ஸாஸ் மாகணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அம்மோனியம் நைட்ரேட் வெடித்தது. இதில் 581 பேர் பலியாகினர். கடந்த 2015- ஆம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் நகரில்  நடைபெற்ற விபத்தில் அம்மோனியம் நைட்ரேட் உள்பட வேதிப்பொருள் வெடித்தது. இதில் 173 பேர் பலியாகினர்.


கடந்த 9 மாதங்களாக ஏல நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது லெபனானில் நடந்த  சம்பவத்தை அடுத்து கடந்த 4 நாட்களாக சென்னை அடுத்த மணலியில் உள்ள சத்வா கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் மீதமுள்ள 697 டன் அம்மோனியம் நைட்ரேட்டை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதன் பாதுகாப்பை ஆய்வு செய்த நிலையில், நேற்று ஏலம் விடப்பட்டு அப்புறப்படுத்தும் பணியில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


ராஜேஷ் ராஜேந்திரன்

முதுநிலை ஆசிரியர் (வேதியியல்)