தன்னந்தனியாளாக நின்று வென்று காட்டிய ஒரு மாவீரரின் கதை.
ஒற்றை மனிதராக, 80 கி.மீ. தூரம் கடந்து நகரத்துக்குப் போன மக்களுக்கு 13கி.மீ. தூரமாக அதைக் குறைக்க 22 ஆண்டுகள் மலையைக் குடைந்து பாதையை அமைத்துத் தந்த மாமனிதர்...
இது ஒரு மாமனிதரின் கதை. ஒரு மலையையும், அதனைக் கண்டு மலைத்து நின்ற மக்களின் மனத்தையும் தன்னந்தனியாளாக நின்று வென்று காட்டிய ஒரு மாவீரரின் கதை.
பீகாரின் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாயக் கூலி. தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஆகக் கடைநிலைச் சாதியான முசாகர் சாதியில் பிறந்தவர். அறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள எலி வளைகளைத் தோண்டி அதில் மிச்சமிருக்கும் தானியங்களைத் துழாவி எடுத்து வயிறு கழுவுவது அந்தச் சாதிக்கு விதிக்கப்பட்ட தொழில். அந்தத் தானியமும் கிடைக்காத காலங்களில் எலியும் பெருச்சாளியும் தான் அவர்களுடைய உணவு.
1959ஆம் ஆண்டில் ஒரு நாள். அப்போது தசரத்திற்கு வயது 24. கூலி வேலை செய்து கொண்டிருந்த அவருக்கு மலையின் மறுபுறத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்த அவர் மனைவி பாகுனி தேவி மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தார். மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது. ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால்….?
கோடிக்கணக்கான இந்தியக் கிராம மக்கள் நாள்தோறும் அனுபவித்து வரும் இந்தத் துயரம் தசரத் மான்ஜியின் நெஞ்சில் ஒரு தீக்கனலாய் உருமாறியது. அந்த மலைக்குன்றைப் பிளந்து, 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் வரை அந்தக் கனல் அவியவில்லை.
தனி ஒருவனாக நின்று இத்தகைய சாதனையை நிகழ்த்திய வீரனை மனித குல வரலாறு இதுவரை கண்டதில்லை. “மலையை உடைக்கப் போகிறேன்” என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை ‘வரலாறு படைக்க வந்த மாவீரன்’ என்று மக்கள் கொண்டாடவில்லை. ‘பைத்தியம்’ என்று அவரை அலட்சியப்படுத்தினார்கள் கிராமத்து மக்கள். கேலி செய்தார்கள் விடலைகள்.
அந்த மக்களுடைய கண்களைப் பாறை மறைத்தது. தசரத்தின் கண்ணிலோ பாறை தெரியவில்லை. அவர் உருவாக்க விரும்பிய பாதை மட்டும்தான் தெரிந்திருக்கிறது. மலை கரையத் தொடங்குவதைப் பார்க்கப் பார்க்க மக்களின் மனமும் மெல்லக் கரையத் தொடங்கியது. மக்கள் சோறு கொடுத்தார்கள், உளியும் சுத்தியலும் செய்து கொடுத்தார்கள். அந்தக் கிராமத்தின் பெண்களோ, மனைவி மீது கொண்ட காதலுக்காக மலையுடன் மோதத்துணிந்த இந்த ஆண்மகன் மீது மரியாதை கொண்டார்கள்.
22 ஆண்டுகள் தவமிருந்து செதுக்கி, அந்தப் பாறைக்குள் இருந்து பாதையை வடித்தான் தசரத் என்ற அந்த மாபெரும் சிற்பி. இது ஒரு மன்னன் தன் காதலுக்காக ஆள் வைத்துக் கட்டி எழுப்பிய தாஜ்மகால் அல்ல. ஒரு அடிமை தன் சொந்தக் கரத்தால் வடித்த காதல் சின்னம்.
ஆனால் “இது என் மனைவிக்கான காதல் சின்னமில்லை” என்று மறுக்கிறார் மான்ஜி. “அன்று அவள் மீது கொண்ட காதல்தான் இந்தப் பணியில் என்னை இறக்கியது. இருப்பினும், ஆயிரக்கணக்கான என் மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைக் காணவேண்டும் என்ற ஆசை தான் அந்த 22 ஆண்டு காலமும் என்னை இயக்கியது” என்கிறார் மான்ஜி.
அன்று 80 கி.மீ தூரம் சுற்றிக் கொண்டு நகரத்துக்குச் சென்று கொண்டிருந்த 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கி.மீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் மூன்றே கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள்.
தேவதைகளின் கருணையையோ அரசின் தயவையோ எதிர்பார்க்காத அந்த மூடக்கிழவர் 1981 இலேயே மலையைக் குடைந்து பாதையை அமைத்து விட்டார். எனினும் இப்படி ஒரு அதிசயத்தை அறிந்த பின்னரும், அந்தப் பாதை அமைக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதன்மீது ஒரு சாலை போடுவதற்கு அரசால் முடியவில்லை. பின் காலம் தாழ்த்தி சாலை போடப்பட்டுள்ளது
தங்களிடம் அனுமதி பெறாமல் மலையைப் பிளந்திருப்பதால் அதில் சாலை அமைக்கக் கூடாதென்று அனுமதி மறுத்திருக்கிறது முதலில் வனத்துறை. தசரத் மான்ஜியின் பெயர் பத்ம பூஷண் விருதுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட போது, “அவர் தனி ஆளாகத் தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை” என்று கூறி முட்டுக்கட்டை போட்டிருக்கிறது பீகார் அரசு.
1981இல் இத்தகையதொரு மாபெரும் சாதனையை நிகழ்த்திய பின்னரும் கடந்த 26 ஆண்டுகளாகக் கூலி வேலை செய்துதான் வயிற்றைக் கழுவியிருக்கிறார் மான்ஜி. “இரவு பகலாக சாமி வந்தவரைப் போல அவர் இந்த மலையைக் கொத்திக் கொண்டிருப்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். 22 ஆண்டுகளாக எங்கே போயிருந்தது இந்த வனத்துறை?” என்று குமுறி வெடிக்கிறார்கள் கிராமத்து இளைஞர்கள்.
தசரத் மான்ஜியோ இவையெதையும் பொருட்படுத்தவில்லை. “நான் என்ன செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும்.. இந்த அரசாங்கம் என்னை தண்டிக்க நினைத்தால் அதற்கு நான் அஞ்சவும் இல்லை. அவர்கள் விருது கொடுப்பார்கள் என்று நான் ஏங்கவும் இல்லை. என் உயிர் இருக்கும் வரை இந்தக் கிராமத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவேன், அவ்வளவுதான்.”
அவரது உளியில் பட்டுத் தெறித்த பாறைத் துகள்களைப் போலவே, மிகவும் அலட்சியமாகத் தெறித்து விழுந்தன சொற்கள்.
அவரது உளியில் பட்டுத் தெறித்த பாறைத் துகள்களைப் போலவே, மிகவும் அலட்சியமாகத் தெறித்து விழுந்தன சொற்கள்.
பீகார் அரசு இவருக்குக் காலம் தாழ்த்தி 5 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது. அதையும் கிராமத்தில் மருத்துவமனை கட்ட இலவசமாக வழங்கி விட்டார் தசரத்.
கடைசி காலத்தில் பித்தப்பை புற்றுநோய் வந்து அவதிப்பட்டார் தசரத்.அவருக்கு இலவசமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை அரசு சார்பில் தரப்பட்டது.போராடி கஷ்டப்பட்டு உயிர் நீத்த தசரத் உடலை அவரது பெருமையை காலம் கடந்து உணர்ந்த அரசு, அரசு மரியாதையோடு அடக்கம் செய்தது.
18-8-2017-இல் சுற்று வட்டார கிராமங்களே கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரோடு அவரை அனுப்பி வைத்தது.அந்த சாலை இப்போது அவரது
பெயரால் 'மான்ஜி சாலை' என்று மக்களால் அழைக்கப்படுகிறது.
18-8-2017-இல் சுற்று வட்டார கிராமங்களே கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரோடு அவரை அனுப்பி வைத்தது.அந்த சாலை இப்போது அவரது
பெயரால் 'மான்ஜி சாலை' என்று மக்களால் அழைக்கப்படுகிறது.
இந்தியில் இவரது வரலாறு கேட்டன் மேத்தா என்பவரால் 'மவுன்டன் மேன்' எனப் படமாக எடுக்கப்பட்டு வெளியானது!
வரலாறு மறக்க முடியாத மாமனிதர் இவர்.!
வரலாறு மறக்க முடியாத மாமனிதர் இவர்.!
Thanks Maghbool Post
கருத்துரையிடுக