ஆன்லைன் கல்வி அவசியமா ???

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களாக மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத சூழல் நிலவுகிறது. இதனால் சில மாநில அரசுகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்த தொடங்கிவிட்டன. ஊரடங்கில் இணையவழி வகுப்புகள் தேவையா என்பது முதல், இணைய வழி வகுப்புகளுக்கான கூடுதல் கட்டணம் வரை தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு திங்கள் முதல் ஆரம்பம் என்ற அறிவிப்பு கிராமப்புற மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஊரடங்கில் மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என எடுக்கும் முயற்சியாக இருந்தாலும், இணையத்தையும் மொபைலையும் மட்டுமே சார்ந்த இணைய கல்விமுறை என்பது 100% பெருநகரங்களுக்கானது என்பதை அனைவரும் அறிந்ததே.பெரும்பாலான குடும்பங்களில் ஸ்மார்ட்போன் வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் ஆன்லைன் வகுப்புகளை எப்படி கவனிக்க முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது. இன்னும் மின்வசதியோ,டிவியே இல்லாத வீடுகள் கொண்ட கிராமங்களும் உள்ளன,கேபிள் டிவி இணைப்பு இல்லாத வீடுகளில் உள்ள மாணவர்களுக்கான அரசின் அறிவுரை என்ன ? 7 மணி நேரம் தொடந்து தொலைப்பேசியை பார்த்தால் மாணவர்களின் பார்வை திறன் பாதிக்கபடாது என்பதை ஆட்சியாளர்கள் அறிய வில்லையா ?? கற்றல் என்பது ஒவ்வொரு மாணவரின் திறன் சார்ந்தது. கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்கள் பாடத்தை புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து அரசு திட்டமிட்டுள்ளதா ?

கொரோனா வைரஸ் பொது முடக்கநிலை காலத்தில், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 23 மாநிலங்களில் நடத்தபட்ட ஆய்வில் சுமார் 56 சதவீத மாணவர்களிடம் இணைய வழி கற்றலுக்குத் தேவைப்படும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப அணுகல் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் வெவ்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் 43.99 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் தொழில் நுட்பத்தை அணுகுவதாகவும், 43.99 சதவீத மாணவர்கள் சாதாரண தொலைபேசிகள் அல்லது சாதாரண கைபேசிகள் அணுகுவதாகவும்,12.02 % மாணவர்கள் எந்தவித தொலைபேசியையும் பயன்படுத்தவில்லை என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. “தொலைக்காட்சியைப் பொறுத்தவரை, தொலைக்காட்சியை அணுகும் மாணவர்களின் எண்ணிக்கை 68.99 சதவிகிதமாக உள்ளது, ​​31.01 சதவிகித என்ற அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சி அணுகல் இல்லை. எனவே கற்றல் விளைவுகளை மேம்படுத்த ஸ்மார்ட்போன் தலையீடுகளைப் பயன்படுத்துவது ஒரே தீர்வாகாது,”என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி படிக்கும் ஒரு சகோதரியின் குமுறலானது : 
அப்பெண் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஏழைப்பெண், தாய்,தந்தை இல்லாமல் தினமும் பகுதிநேர வேலைசெய்து தானும் படித்து தன் உடன்பிறப்புகளையும் படிக்க வைக்கிறாள். அப்பெண்ணால் எப்படி இணைய வழி கற்றலை ஏற்றுக்கொள்ள முடியும். இந்த வகுப்புகள் காலை 9.30 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதற்கு ஒருநாளைக்கு குறைந்தது 3 Gp யாவது வேண்டும். இந்த இணையதளம் கல்வி பெற குறைந்தது 700 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் மற்றும் இணைய வழி தொலைப்பேசியை பெற 8,000 ரூபாய் வேண்டும்.இந்த 8,000 ரூபாய் இருந்தால் அச்சகோதரி 3 வருட கல்லூரி படிப்பையே முடித்து விடுவேன் என்று கூறும் போது ஆட்சியாளர்களின் செயல் சரியில்லையோ என தோன்றுகிறது. இந்த இணையவழி கற்றலை அச்சகோதரி ஏற்று கொண்டால் கூட அப்பெண் அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வாள் என்பது சந்தேகமே ???அரசுக்கு ஆலோசனை கூறும் மிகப்பெரிய மருத்துவ வல்லுனர்களும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் இந்த மாதிரியான ஏழை, எளிய மக்களின் நிலை தெரிய வாய்ப்பில்லை.

கல்விச்சாலைகளுடனும், கற்றலுடனும் மாணவர்களுக்கு இருக்கும் தொடர்பு அறுந்து விடக்கூடாது என்பதற்காக நாட்டில் உள்ள 35 கோடிக்கும் மேலான மாணவர்களுக்கு இணையவழி கற்பித்தல் முயற்சிகள் நல்லதாக இருந்தாலும் கூட இதன் மூலம், தொழில் நுட்பத்தை மாணவர்கள் அணுகிப் பயன்படுவத்துவது என்பது ஒரே நிலையில் இல்லாமல் வேறுபட்டு இருக்கும் என்ற யதார்த்த நிலையும் அதனால் மாணவர்களுக்கு உருவாகும் மனஉளைச்சல், பார்வை திறன் கோளாறு, மற்றும் பொருளாதார குறைகளையும் களைந்து அரசு ஆய்வு செய்து பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இணையதள வழி கல்வி, மற்றும் தொலைக்காட்சி வழி கல்வி சாத்தியமா என மத்திய,மாநில அரசுகள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

ராஜேஷ் ராஜேந்திரன்
முதுநிலை ஆசிரியர்(வேதியியல்)