RCEP இந்தியாவை அடிமைப்படுத்தும் இன்னொரு W.T.O. -வசந்தன்
நன்றி : சமரன்
RCEP இந்தியாவை அடிமைப்படுத்தும் இன்னொரு W.T.O. -வசந்தன்
(March 7, 2020 samaran)
நவம்பர்,4-2019 ல் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பொருளாதார பிராந்திய கூட்டமைவு (Regional Comprehensive Economic Partnership) இல் பங்கேற்கவுள்ள நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட அதேவேளையில், இந்தக் கூட்டமைவில் இந்தியா பங்கேற்கப் போவதில்லை என்ற முடிவையும் அறிவித்தார்.அதனால் அந்தக் கூட்டமைவின் உருவாக்கம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் வியட்நாமில் கூடி இந்தியா இல்லாமலே மீதமுள்ள 15 நாடுகள் இணையும் முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியத் தொழிற்துறையினர், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் ஆட்சேபனைகளைக் கணக்கில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக மோடி அறிவித்தார். உண்மையில் மோடி அரசின் இந்த முடிவு இந்தியமக்களின் கவலையை எதிரொலிக்கவில்லை. அமெரிக்காவின் உறவு மற்றும் நிர்ப்பந்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்திய அரசின் நகர்வானது அமெரிக்காவின் புதியகாலனிய சேவையில் மேலும் நெருங்கிச் செல்கிறது என்பதை உறுதிசெய்யும் அடிப்படையே இந்த முடிவில் அடங்கியிருக்கிறது.
W.T.O வின் தாராளமயக் கொள்கையினால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம்
அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் நலனில் இருந்து 1991 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட உலகவர்த்தகக் கழகம் (WTO) தொழிற்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை, வர்த்தகத்துறை, அறிவுத்துறை, கல்வித்துறை என அனைத்துத் துறைகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, புதியகாலனிய நாடுகளான வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளை ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் சந்தைக்கும், கனிமவளங்களின் கொள்ளைக்கும் வழிவகுத்துக் கொடுத்தது. 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகவர்த்தகக் கழகத்தில் சேர்ந்த சீனாவானது, பன்னாட்டு நிறுவனங்கள் தனது நாட்டில் தொழிற்சாலைகளை நிறுவ அனுமதி அளித்தது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் வழியாக சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டதனால் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சீனாவில் உற்பத்தி செய்து தங்கள் நாடுகளுக்கு குறைந்த விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்தன. இதன் காரணமாக ஏற்றுமதி பல்கிப் பெருகி ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் சீனாவுடனான வர்த்தகத்தில் பற்றாக்குறை நாடுகளாக மாறிப்போயின. குறிப்பாக அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை பன்மடங்கு பெருகிப் போனது.
பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குச் சாதகமாக அவர்களின் வியாபாரம் மற்றும் கொள்ளை இலாபத்தை மட்டுமே பிரதானமாக்கி அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கேந்திரங்களை கடல்கடந்து (off shore) கொண்டுசெல்ல அந்த அரசுகள் வழிவகுத்ததின் விளைவாக உள்நாட்டில் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஏற்கனவே கடன் அட்டைப் பொருளாதாரமாக வளர்ந்திருந்த நிலையில் வேலையிழப்பு காரணமாக கடன்கள் திருப்பிச் செலுத்தமுடியாத நிலையில் வங்கிகள் திவாலாகி பொருளாதாரம் ஸ்தம்பித்துப்போனது.
அதுவே 2008 ம் ஆண்டில் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்ததுடன் உலகம் முழுவதற்குமான ஒரு பொது நெருக்கடியாக மாறி இன்றளவும் நீடிக்கிறது. இதன் விளைவாக அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் மக்களின் போராட்டங்கள் வெடித்தன. ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. இதன்பொருட்டு உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்றபெயரில் தாராளமயக் கொள்கைகளுக்குப் பதிலாக தத்தம் நாடுகளுக்கான தற்காப்புக் கொள்கைகளை முன்வைத்துச் செயல்படுத்த முனைகின்றன.
(இதே நாடுகள்தான் இந்தியா தனது சந்தையை முழுவதுமாகத் திறந்துவிடவேண்டும் என்று இப்போதும் கூறிவருகின்றன. மோடி அரசும் அதையே தனது இலட்சியமாகக் கொண்டு தொழிலாளர் சட்டங்கள், வரிச்சீர்திருத்தங்கள், விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளை அனுமதிக்கின்ற பண்ணை விவசாய முறைகளை அமல்படுத்துகிறது.)
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறத் துடிப்பதும், உலக வர்த்தகக் கழகம், பசிபிக் பிராந்திய கூட்டமைப்பு போன்ற பலதரப்பு ஒப்பந்தங்களை நிராகரித்து, அமெரிக்காவை முதன்மைப்படுத்தும் இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு டிரம்ப் அரசாங்கம் முயற்சி எடுப்பதும் இதன் விளைவே ஆகும்.
சீனாவுடன் வர்த்தகப்போர்
அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது என்றபெயரில் வர்த்தகப் பற்றாக்குறை உள்ள நாடுகளுடன் ஒரு கடும்போக்கை டிரம்ப் அரசாங்கம் கடைபிடித்து வருகிறது. உலக மேலாதிக்கப் போட்டியில் சீனாவின் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளதாலும், 2018 ஆம் ஆண்டுக் கணக்குப்படி 42000 கோடி டாலர் அளவிற்கு மிக அதிகமான பற்றாக்குறை சீனாவுடன் இருப்பதாலும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது பன்மடங்கு வரியை டிரம்ப் அரசாங்கம் விதித்தது. அதற்குப் பதிலடியாக சீனாவும் அமெரிக்கப் பொருட்களின் மீது வரியை விதித்தது.
அது சீன நிறுவனமான ஹூவாயின் 5ஜி தொழில்நுட்பத்தை தடைசெய்வது என்பதுவரை சென்றது. ஏற்கனவே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தம் மற்றும் இந்த வர்த்தகப்போரின் காரணமாக சீனாவின் ஏற்றுமதியானது குறைந்துபோனது. அதன் விளைவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் இரட்டை இலக்கத்தில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு சரிந்து போனது. இத்தகைய சூழலில்தான் ஸிசிணிறி யிற்கான பேச்சுவார்த்தை 2012 ல் துவங்கப்பட்டிருந்தாலும் சமீப ஆண்டுகளில் வேகம் பெற்றது. அது 2019 இல் உச்சநிலை அடைந்து நவம்பர் 4இல் நடந்த தலைவர்களின் மாநாட்டில் முடிவுக்குக் கொண்டுவர சீனா முயற்சித்தது.
ஒருங்கிணைந்த பொருளாதார பிராந்திய கூட்டமைவு (RCEP)என்றால் என்ன?
தென்கிழக்கு ஆசியநாடுகள் கூட்டமைப்பில் (ASEAN) உள்ள நாடுகளான 1.புருனை, 2.கம்போடியா, 3.இந்தோனேஷியா, 4.லாவோஸ், 5.மலேசியா, 6.மியான்மர், 7.பிலிப்பைன்ஸ், 8.சிங்கப்பூர், 9.தாய்லாந்து, 10.வியட்நாம் ஆகிய 10 நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு (FTA) கொண்டுள்ள 1.ஆஸ்திரேலியா, 2.சீனா, 3.இந்தியா 4.ஜப்பான், 5.தென்கொரியா, 6.நியுசிலாந்து போன்ற ஆறு நாடுகளும் சேர்ந்து மொத்தம் 16 நாடுகள் தங்களுக்கிடையிலான சுங்கவரியில்லாத வர்த்தக மண்டலத்தை உருவாக்கிக் கொள்வது என்ற அடிப்படையில் இருந்து, இந்த அமைப்பு உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டமைப்பு முழுமையடையும் பட்சத்தில் உலகப் பொருளாதாரத்தின் 34%அளவிலான GDPயைக் கையாள்வதாகவும் உலகவர்த்தகத்தில் 40% த்தினை மேற்கொள்வதாகவும், உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி அளவிலான 340 கோடிப் பேரை உள்ளடக்கியதுமான மிகப்பெரிய பொருளாதார மையமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
24 சுற்றுப் பேச்சுவார்த்தைகள், அமைச்சர்கள் மட்டத்திலான 13 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. நவம்பர் 2019ல் இறுதி வடிவம் கொடுத்து அடுத்த ஆண்டுமுதல் அதாவது 2020 பிப்ரவரியில் அமல்படுத்த முடிவுசெய்யப்பட்டது. இந்த அமைப்பின் பிரம்மாண்டமான தன்மை என்பது இந்தியாவும் அதில் பங்கேற்றால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்ததின் விளைவாகவும், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தினை அறிந்ததின் விளைவாகவும் சீன அதிபர் ஜி.ஜின்பிங் இந்தியப் பிரதமர் மோடியை சந்திக்க இந்தியாவிற்கு (தமிழகத்தின் சிற்பக் கலையின் அடையாளமான மாமல்லபுரத்திற்கு) அக்டோபர் 11-12 தேதிகளில் வந்துசென்றார்.
இந்தியாவின் பங்கேற்பு சீனாவிற்கு அவசியம்
ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் உற்ற நண்பனாக இந்தியா மாறியுள்ள நிலையில், இட்லருக்கும், முசோலினிக்கும் இடையிலான உறவைப்போல் டிரம்ப்புக்கும், மோடிக்குமான வலதுசாரி பிணைப்பு உருவாகியுள்ள சூழலில், சீனாவை எதிர்ப்பதற்காகவே பசிபிக் பிராந்திய கூட்டமைப்பில் இந்தியா சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கும், சீனாவுக்குமிடையிலான உறவுக்கு சவால் விடுக்கும் நிகழ்வாக காஷ்மீரில் இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு அமெரிக்காவின் பின்புலம் இருக்கிறது என்பதை அறிந்தும், சீன அதிபர் இந்தியாவிற்கு வந்துபோனது என்பதானது திட்டவட்டமான அரசியல்,பொருளாதார வர்த்தக அடிப்படையைக் கொண்டது என்பதை பின்பு நடந்த நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
சீனாவிற்கு புதிய சந்தைகளின் தேவை அதிகரித்திருக்கிறது. அந்தவகையில் இந்தியச் சந்தை என்பது சீனாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியதாகும். செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றம் என்பதின் மீது அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் தடைவிதித்துள்ள வேளையில் இந்தியாவில் அதற்கான சந்தையைப் பெறுவதில் சீனா முனைப்பு காட்டுகிறது. செல்போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஹுவாய் நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை(5G) தகவல் தொடர்புகள் ஆகியவற்றிற்கு சாதகமான சந்தையாக இந்தியா இருக்கிறது. இதுவல்லாமல் மின்போக்குவரத்திற்கு அடிப்படையான லித்தியம் அயன்பேட்டரிகள் தயாரிப்பில் சீனா முக்கியப் பங்காற்றி வருகிறது. இதன்மூலமாக இந்திய வாகனத்துறையிலும் சீனா கால்பதிக்க முயற்சிக்கிறது. எனவேதான் எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் இந்தக் கூட்டமைவில் இந்தியாவை இடம்பெறச் செய்ய சீனா மிகுந்த முனைப்புக் காட்டுகிறது.
அதேவேளையில் இந்தியாவும் இந்த எல்லா முரண்பாடுகளையும் அறிந்தாலும் சீனாவுடனான தனது வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைத்துக்கொள்ளவும், இந்திய முதலாளிகளுக்கு சீனாவில் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் முயற்சி செய்தது.தற்போதய நிலையில் இந்திய மருந்துகளை சீனாவில் விற்க முடியாது. மருந்துகளுக்கான பரிசோதனையை அந்த நாட்டில் நடத்த வேண்டும் என்கிறது சீனா. சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க ஏதுவாக இதில் தளர்வுகள் செய்ய சீனா முன்வந்ததாகவும் கூறப்படுகிறது .
RCEP யில் சேர்வதால் இந்தியா சந்திக்கும் பிரச்சினைகள்
இந்த ஒப்பந்தத்தில் சேரும்பட்சத்தில் 20 ஆண்டுகளில் 80% முதல் 90% வரையிலானவற்றின் இறக்குமதி வரிகள் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும், அதன் காரணமாக இந்தியாவின் வரிவருவாய் சுமார் ரூ.60,000 கோடி வரை குறையும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஏற்கனவே ஏசியான் நாடுகளுடன் இந்தியாவுக்கு சுதந்திர வர்த்தக உடன்பாடு உள்ள நிலையில் இந்த ஒப்பந்தமானது நேரடியாக சீனாவுடனான ஒப்பந்தமாகவே மாறும் என்றும், சீனப்பொருட்கள் இந்தியச் சந்தையில் குவிவதற்கே வழிவகுக்கும் என்றும், நியூசிலாந்தில் இருந்து பால்பொருட்கள் இந்தியாவில் குவிவதற்கு வழிவகுக்கும் என்றும் ஆட்சேபங்கள் உள்நாட்டில் இருந்து எழுப்பப்பட்டன. குறிப்பாக ஸ்டீல் துறையினர், விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்தனர்.
ஏற்கனவே அனைத்து RCEP நாடுகளுடனான வர்த்தகத்தில் வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டுள்ள இந்தியா மேலும் அதிகமான வர்த்தகப் பற்றாக்குறையை சந்திக்க வேண்டிவரும் என்றும் ஆட்சேபங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்தியாவிற்கும் ஸிசிணிறி யிற்கும் உள்ள வர்த்தகப் பற்றாக்குறை பின்வருமாறு உள்ளது.
RCEP நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகமானது ஏசியான் நாடுகளிலிருந்து மூலதனப் பொருட்கள் இறக்குமதியில் பற்றாக்குறையும்,நுகர்வுப் பொருட்கள் ஏற்றுமதியில் கூடுதல் நிலையையும் கொண்டுள்ளது. குறிப்பாக இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் இந்தப் பற்றாக்குறை நிலவுகிறது. தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு கச்சாப்பொருட்கள் ஏற்றுமதியும், அவற்றில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான இறக்குமதியும் என்ற அளவில் பற்றாக்குறை நிலவுகிறது. சீனாவுடனான வர்த்தகத்தில் கச்சாப் பொருட்கள் ஏற்றுமதியும், மூலதனப் பொருட்கள், நுகர்வுப் பொருட்களின் இறக்குமதி அதிக அளவில் உள்ளது. உலகம் முழுவதற்குமான மலிவான மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா அதற்கான மூலப்பொருட்களில் 3ல் 2 பங்கை சீனாவில் இருந்தே இறக்குமதி செய்கிறது.
அதேவேளையில் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் சேருவதின் மூலம் ‘கிழக்கைப்பார்’ என்ற கொள்கையின் தொடர்ச்சியாக கிழக்கில் செயல்படும் கொள்கையாகப் பரிணமிக்கும் என்றும், நம்முடைய வர்த்தக நடவடிக்கையானது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை மட்டும் சார்ந்ததாக இல்லாமல் தென்கிழக்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பால் ஒரு புவியியல் அடிப்படையை நோக்கியதாக இருக்கும் என்று மற்றொரு தரப்பு வாதிடுகிறது. இன்றைய உற்பத்தியின் மையமாக சீனா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஏசியான் நாடுகளே உள்ளன என்றும் RCEP யிற்குப் பிறகு ஏற்றுமதி பெருகுமானால் புதிய சந்தை வாய்ப்பின் காரணமாக புதிய பொருளாதார நடவடிக்கையைத் தூண்டிவிடும். அது கூடுதல் வேலைவாய்ப்புக்கான தேவையை உருவாக்கும் என்றும் வாதிடப்படுகிறது.
RCEP யில் சேர்வதில்லை என்ற முடிவு வரவேற்கக்கூடியதே
உண்மையில் ஏற்கனவே உலக வர்த்தகக் கழகத்தின் (WTO) கட்டளைகளுக்கு இணங்கி உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கான அளவுக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதின் விளைவாக இந்திய விவசாயத்துறையும், விவசாயிகளும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் RCEPயின் கொள்கையான வரியில்லாப் பிரதேசம் என்பது நிலச்சீர்திருத்தங்கள் இல்லாத, நிலவுடமைக்கான உற்பத்தி உறவுகள் இன்னமும் நீடிக்கின்ற, முதலாளித்துவ உற்பத்திமுறைகள் பகுதியளவே பயன்படுத்தப்படுகின்ற இந்திய விவசாயத்துறையை முற்றிலும் மரணக்குழிக்குள் தள்ளுவதாகவே இருக்கும்.
பெருகிவரும் மக்கட்தொகை பெருக்கம் என்பது குறிப்பிடத்தக்க நுகர்வுச் சந்தையை உருவாக்கி நுகர்வுப்பொருட்களை கொட்டிக்குவிக்கும் களமாக இந்தியா மாற்றப்படும். மேலும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு முழுமையான சட்டப்பாதுகாப்பு வழங்கவேண்டும் என்ற RCEPயின் விதிமுறையானது இந்தியாவை அந்நிய நிறுவனங்களின் ஆதிக்கக் களமாக மாற்றும். எனவே இந்த கூட்டமைவில் சேர்வதில்லை என்ற முடிவு வரவேற்கக் கூடியதே. ஆனால், இந்திய நாட்டின், மக்களின் நலனில் இருந்து மோடி அரசு இந்த ஒப்பந்தத்தில் சேரமுடியாது என்று சொல்லிவிட்டதாகவும்,
முந்தைய மன்மோகன் அரசு போட்ட ஏசியான் நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவிற்கு பெரிய அளவிற்கு வருவாய் குறைந்துவிட்டதாகவும் வர்த்தக அமைச்சர் பியுஷ்கோயல் கூறுகிறார். இதையெல்லாம் கணக்கில்கொண்டே இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது என்ற துணிச்சலான முடிவை நமது பிரதமர் மோடி எடுத்துள்ளார் என்றும் அமைச்சர் கூறி தங்கள் முதுகில் தாங்களே தட்டிக்கொள்கின்றனர்.
மக்கள் நலன் என்பது மேல்பூச்சே; அமெரிக்க நலனே பிரதானம்
உண்மையில் இந்தியா RCEP யில் இருந்து வெளியேறியது மக்கள் நலன் சார்ந்ததுதானா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழவே செய்கிறது. இதே காலகட்டத்தில் அக்டோபர் 2019ல் இந்திய வர்த்தக அமைச்சர் பியுஷ்கோயல் அமெரிக்க-இந்திய யுத்ததந்திரக் கூட்டமைப்பில் பேசுகையில் இந்தியாவும், அமெரிக்காவும் பரந்த அளவிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும் என்றும் கூறினார்.
ஏற்கனவே பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோதே குறிப்பிட்ட வர்த்தக ஒப்பந்த அறிவிப்புகளை வெளியிடுவதாக இருந்ததாகவும், இருதரப்பிலும் சில சிறிய பிரச்சினைகள் காரணமாக ஒத்திப்போனதாகவும் கூறப்படுகிறது. ஒப்பந்தம் முடியாததற்கு அடிப்படைப் பிரச்சினைகள் ஏதும் இல்லை என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் கூறினார். அமெரிக்காவின் விவசாயப் பொருட்கள், ஸ்டென்ட் போன்ற மருத்துவ உபகரணங்களின் விலைநிர்ணயிப்பு போன்றவற்றிற்கான வரிச்சலுகை பற்றியும், ஹேர்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கான இறக்குமதி வரிக்குறைப்பு பற்றியுமான இடைக்கால அறிவிப்பு வரக்கூடும் என்றும், அதற்குப் பிரதிபலனாக இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வரிவிலக்களித்து ஆதாயம் வழங்கும் முறையில் ஒரு பகுதியை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது. ஒரு விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற சில ஆதாரமான விஷயங்களை இருதரப்புமே தீர்க்கவேண்டியிருப்பதாக கோயல் கூறுகிறார். விரைவில் முதற்கட்ட ஒப்பந்தத்திற்கு வருவோம் என்றும், RCEP யை பொருத்தவரை இந்தியாவின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாவிடில் நாங்கள் கையெழுத்திடமாட்டோம் என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் 10/12/2019 ல் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் RCEPயில் இருந்து விலகுவது என்பது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், இறுதிவரை பேச்சுவார்த்தை நடத்தி வெளியேறினோம் என்றும் கோயல் கூறியுள்ளார். அமெரிக்காவின் டிரம்ப் அரசாங்கம் உலக வர்த்தகக் கழகத்திற்கு எதிராகப் பேசிவருவதும், நாடுகளுக்கு இடையிலான வர்த்தக விதிமீறல்களை விசாரிக்கும் உச்சபட்ச விசாரணை மன்றத்துக்கான நீதிபதிகளை நியமிக்கவும்கூட ஆட்சேபனை தெரிவித்து, இன்று அந்த அமைப்பே செயல்படாது என்று அறிவிக்கும் அளவிற்கு அமெரிக்காவின் நிர்ப்பந்தங்கள் வெளிப்படையாக நடைபெறுவதும், பசிபிக் பிராந்திய கூட்டமைப்பில்(TPP) இருந்து 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா திடீரென விலகிக்கொண்டதும், பலதரப்பு ஒப்பந்தங்களைக் கைவிட்டு அமெரிக்காவின் நலனை முதன்மைப்படுத்தி இருதரப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளப்போவதாகவும் டிரம்ப் வெளிப்படையாகவே கூறிவிட்ட நிலையில் இந்திய அரசாங்கமானது அமெரிக்காவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளித்தும் சீனா தலைமையிலான RCEP யை நிராகரித்திருப்பதும் தற்செயலானதல்ல. இது மோடி அரசாங்கமானது டிரம்ப் அரசாங்கத்தின் கொள்கைகளோடு முற்றிலும் ஒத்துப்போகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.
உலகில் மிக அதிக அளவில் விவசாயத்திற்கு மானியம் அளிக்கும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா தனிநபர் ஒருவருக்கு 7860 டாலர் அளவிற்கு தங்கள்நாட்டு விவசாயிகளுக்கு மானியம் அளிக்கின்றது. அந்த நாட்டின் விவசாயப் பொருட்களுக்கு மேலும் வரிக்குறைப்பு செய்யும் ஒப்பந்தம் எப்படி இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க முடியும்? அமெரிக்காவின் நலனை முதன்மைப்படுத்தியே இருதரப்பு ஒப்பந்தங்கள் என்று வெளிப்படையாகவே டிரம்ப் அரசாங்கம் கூறிய பிறகு இந்தியாவின் நலன் என்பது ஏமாற்று வேலையே. அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு இந்தியா பணிந்து போகிறது என்பதே உண்மை.
விரிந்த முன்னேற்ற பசிபிக் பிராந்திய கூட்டமைவும் (CPTPP), ஒருங்கிணைந்த பொருளாதார பிராந்திய கூட்டமைவும் (RCEP)
ஒபாமா தலைமையில் இருந்த அமெரிக்க அரசாங்கம் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, மெக்சிகோ, கனடா மற்றும் பெருவுடன் புருனை, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் சிலி போன்ற நாடுகளை உள்ளடக்கி 2016 ம் ஆண்டு பசிபிக் பிராந்திய கூட்டமைவை(TPP) உருவாக்கியது. இதன் நோக்கமானது பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதும் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமையை நிறுவுவதும் ஆகும்.
டிரம்ப் அரசாங்கம் 2017ம் ஆண்டு திடீரென இந்தக் கூட்டமைப்பிலிருந்து விலகிக்கொண்டது. அதன் பிறகு ஜப்பானின் முயற்சியில் அமெரிக்கா தவிர்த்த 11 நாடுகளும் CPTPP என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி 2018 டிசம்பர் முதல் செயல்படுத்தி வருகின்றன. அமெரிக்காவோ இந்தியாவை தனது கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் இந்துமகா சமுத்திரம் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் என்ற கருத்தாக்கத்தில் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பு பற்றி பேசிவருகிறது. இதன் நோக்கம் இந்தியாவை அமெரிக்கக் கூட்டமைப்பில் கொண்டு வருவதும்,சீனாவிற்கு எதிராக நிறுத்துவதுதான்.
இத்தகு சூழலில்தான் ஆசிய பிராந்தியத்தில் உள்ள விரிந்த முன்னேற்ற பசிபிக் பிராந்தியக் கூட்டமைப்பைச்(CPTPP) சேர்ந்த 7 நாடுகளும், இந்தோ-பசிபிக் திட்டத்தில் இணைக்க நினைக்கும் இந்தியாவும் RCEP என்ற பெயரில் சீனாவுடன் இணைவதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்த ஒப்பந்தம் நிறைவேறுமானால் தென்கிழக்காசிய பிராந்தியத்தில், அமெரிக்காவின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும், சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. எனவேதான் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் சீனாவிற்கும், அமெரிக்காவிற்குமான மேலாதிக்கப் போட்டியில் அமெரிக்கா மாற்று வழிமுறைகளை திட்டமிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சீனா தனது தலைமையை நிறுவுவதற்கான ஒரு வாய்ப்பாகவே RCEPயை பயன்படுத்த விரும்புகிறது. இதைத் தடுப்பதற்கு இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்துகிறது.
RCEPயில் சேராததற்கு இந்தியா வெளிப்படையாகக் கூறிய காரணங்கள் விவசாயிகளின் நலனையும், நாட்டுநலனையும் பிரதிபலிப்பதாக இருந்தாலும் உண்மையான காரணம் என்பது அமெரிக்காவின் பிராந்திய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவதும், அமெரிக்காவுடனான தனது புதியகாலனிய விசுவாசத்தை நிலைநாட்டிக் கொள்வதுமே ஆகும்.
சுதேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து உள்நாட்டில் விவசாயம், தொழிற்துறை, சேவைத்துறை ஆகியவற்றினை வளர்த்தெடுப்பதும், அதன்வழியில் வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவது என்ற உண்மையான மக்கள் நலன்சார்ந்த அரசின் செயல்பாடாக இருக்கும்போது RCEPயில் இணையாதது வரவேற்கக்கூடியதே. ஆனால், மோடி அரசின் செயல்பாடு என்பது நாட்டு நலனையோ, மக்கள் நலனையோ முன்னிறுத்தியல்ல. மாறாக, தனது ஏகாதிபத்திய எஜமானனான அமெரிக்காவின் கண்ணசைவிற்கு ஏற்ப செயல்படும் அடிமைச் சேவகமாகவே உள்ளது என்பதை மக்களிடம் உணர்த்த வேண்டியுள்ளது.
மோடி அரசிற்கு இந்திய விவசாயிகள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், சிறுதொழில் செய்வோரின் நலன்தான் பிரதானம் என்பது உண்மையானால் RCEPயில் இடம்பெற முடியாது என்று கூறிவிட்டது போலவே உலக வர்த்தகக் கழகத்தில் இருந்தும் உடனடியாக வெளியேற வேண்டும். உலக வர்த்தகக் கழகத்தின் நிர்ப்பந்தத்தின் பேரில் நிறைவேற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் இரத்து செய்யவேண்டும் என்று கோருவோம். மோடி அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் உலக வர்த்தகக் கழகத்தின் நிலைப்பாடுகளை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி எதிர்த்திசையில் செல்வதாகவே உள்ளது. இத்தகைய புதியகாலனிய தாசர்களின் ஆட்சிக்கு முடிவுகட்டி உழைக்கும் மக்களுக்கான ஒரு மக்கள் ஜனநாயக அரசை நிர்மாணிக்க புதிய ஜனநாயகப் புரட்சிக்காக மக்களை அணிதிரட்ட வேண்டியதே இன்றைய நமது பணியாகிறது.
நன்றி : சமரன்
கருத்துரையிடுக