DRDOவின் பவுடர் வடிவ 2-deoxy-D-glucose (2-DG) கொரானோ மருந்து ஒர் அறிமுகம்

 


கொரோனா இரண்டாவது அலை இந்தியாவைத் திணறடித்து கொண்டு இருக்கிறது. அன்றாட பாதிப்பு 4 லட்சத்தை சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கிறது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. ஸ்புட்னிக் தடுப்பூசியும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போதைக்கு ரெம்டெசிவிர் மருந்து மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அதனால், அந்த மருந்துக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான (Defence Research and Development Organisation) தயாரித்துள்ள 2 டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) என்ற மருந்தின் பார்முலாவுடன் கோவிட் எதிர்ப்பு மருந்தினை டாக்டர். ரெடிஸ் லேப் (Dr.Reddy's Lab) நிறுவனத்துடன் இணைந்து DRDO தயாரித்து இருக்கிறது. இந்த மருந்துகளின் கட்டுப்பாட்டு மூலக்கூறுகள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுவதுடன் ஆக்சிஜன் சார்பு நிலையை குறைகிறது என்பதற்கான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவசர கால தேவைக்காக இந்த மருந்தினை பயன்படுத்த DCGA எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் மருந்தின் செயல்பாடுகள் குறித்து தற்போது வரை முழுமையான தரவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று தனியார் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். மனிதர்கள் மீதும் நடத்தப்பட்ட சோதனையில் மருந்தின் திறன் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்த மருந்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது 110 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது. மருந்தை உட்கொண்ட நோயாளிகள் தொற்றிலிருந்து வேகமாகக் குணமடைவதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடந்துவருகிறது.


மருந்து செயல்படும்விதம் :  வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களை இந்த மருந்து அடைந்ததும் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது. நுரையீரலில் பரவும் வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் இந்த மருந்து செயல்படுவதால் இது கொரோனா நோயாளிகள் ஆக்சிஜனை சார்ந்திருக்க வேண்டிய சூழலைக் குறைக்கிறது என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றினால் மருத்துவமனை அனுமதியும் ஆக்சிஜனும் தேவைப்படும் சூழலில், சிகிச்சை நாள்களின் எண்ணிக்கையை குறைத்து, ஏராளமான உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த மருந்து செயல்படுகிறது.


மருந்தின் விலை : விலை நிர்ணயம் குறித்து இதுவரை இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் ஒவ்வொரு சாக்கெட்டிற்கும் ரூ .500-600 வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.


மருந்து உட்கொள்ளும் முறை : இந்த மருந்து பவுடர் வடிவில் ஒரு சாக்கெட்டில் வருகிறது, இது தண்ணீரில் கரைந்து வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்


பக்கவிளைவுகள் : டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) மருந்து மனித உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ள நிலையில், ஆறுதல் அளிக்கும் விஷயமாக DRDO வின்

(2-DG) மருந்தினால் விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படுவதோடு, COVID-19 விரைவில் குணமாகி இந்த மருந்து ஒரு பெரும் மைல் கல்லாக இருக்குமா என்று பொருந்திருந்து பார்ப்போம்.


மு.ரா. ராஜேஷ் 

முதுநிலை ஆசிரியர்