பறை இசை (தப்பு)

 


சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கேட்ட வினாடியே தாளமிட வைத்த உன்னத இசை. “ பறை! இது வெறும் சப்தமிடும் கருவியல்ல சமதர்ம சமுதாயம் படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் உடைய உன்னத மனிதர்களைக் கொண்ட புண்ணிய பூமியாம் நம் தமிழ் திருநாட்டில், சாதி, மத பேதமற்ற நல்லதொரு சமுதாயம் படைக்கும் சீரிய முயற்சியில் நமக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உரத்துச் சொல்ல உதித்த பறை ! வீரத் தமிழன் காக்கும் பறை ! ஆதித் தமிழன் ஒலித்த பறை ! அடிமைத் தளையை உடைத்த பறை ! கேட்போர் செவிகளுக்கு விருந்தான பறை ! காண்போர் கண்களுக்கு மருந்தான பறை


தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ளது. பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையர்குடியின் குறயீடாகவும், தொழிலாகவும் அமைந்தது. பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் பறை பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.பறை என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது எனத் தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.


தோற்கருவிகளின் பொதுப் பெயராகப் பறை என்பது வழங்கபட்டுள்ளது. பறை என்ற சொல்லுக்குக் கூறு, சொல் என்ற பொருள்களில் இருக்கின்றன. மலையாளத்தில் பறைதல் என்பது சொல்லுதல் என்ற பொருளில் வழங்கி வருவதை இன்றும் காணலாம். தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிடப்பட்டுள்ளது.


சங்க காலம், சோழ, பாண்டிய அரசர்கள் காலத்தில் பறை இசைக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் உள்ளன. அரசர்களது அறிவிப்புகளை மக்களுக்கு முரசு அறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபு. ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேர வேண்ட, பெருகிவரும் புனலை அடைக்க,உழவர் மக்களை அழைக்க,போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட,வெற்றி தோல்வியை அறிவிக்க,வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைக்க, அறுவடை செய்ய, காடுகளில் விலங்குகளை விரட்ட,மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க,இயற்கை வழிபாட்டில், கூத்துகளில், விழாக்களில், இறப்பில் எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் பறை இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.


 “துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்நான்கு அல்லது குடியும் இல்லை” – துடிகொட்டுபவன், யாழ் மீட்டுவோன், பறையறைபவன், வெறியாடுபவன் ஆகிய கலைஞர்களைக் காட்டிலும் சிறந்த குடிகள் உலகில் இல்லை என்று கூறி அவர்களைப் புகழ்ந்துரைக்கிறார் மாங்குடி கிழார் எனும் புலவர்.


தொல்குடித் தமிழ்ச் சமுதாயத்தின் கலைஞர்களான பறையர் அடிமைகளாக்கப்பட்டதும், பறை எனும் இசைக் கருவி அடிமையின் கைக் கருவியாக்கப்பட்டதும் இன்றுவரை மாறவில்லை. பறையடிப்பதற்கும் அடிமைத் தொழில் செய்வதற்கும் மறுத்ததற்காக ம.க.இ.க.வின் ஆதரவாளர் குருமூர்த்தியின் (குருங்குளம், தஞ்சை) கட்டைவிரல் வெட்டப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்து, பறையர் எனும் சொல் சாதி மக்களைக் குறிக்கும் சொல்லாக இருப்பது ஒழிக்கப்பட்டு இசைவாணர்களைக் குறிக்கும் மரியாதைக்குரிய சொல்லாக மாற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.


வகைகள் :


1.அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை. (சீவக சிந்தாமணி)

2.ஆறெறிப் பறை - வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை.

ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் (சிலப்பதிகாரம்.)

3. உவகைப்பறை - மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவாகர நிகண்டு)

4.சாப்பறை - சாவில் அடிக்கப்படும் பறை. (திவாகர நிகண்டு)

5.சாக்காட்டுப் பறை - இறுதிச் சடங்கின் போது இசைக்கும் பறை.

6.வெட்டியான்பறை - சில விசேஷ காலங்களிற் கொட்டும் பறை.

7.நெய்தற்பறை - நெய்தல் நிலத்துக்குரிய பறை (திருக்குறள்)

8.பம்பை - நெய்தனிலங்கட்குரிய பறை. (திவாகர நிகண்டு).

தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக சிந்தாமணி)

9.மீன்கோட்பறை - நெய்தனிலப் பறை.

10.மருதநிலப்பறை - மருதநிலத்திற்குரிய பறை.

11.கல்லவடம் - ஒரு வகைப்பறை

நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப் கல்லவடமிட்டுத் திசைதொழு தாடியும் (தேவாரம்)

12. குரவைப்பறை குறிஞ்சிநிலத்துக்குரியது. குறிஞ்சிப்பறை =குறிஞ்சிநிலத்துக்குரிய தொண்டகப் பறை.

13.தடறு - தொண்டகப் பறை. (அக. நி.)

14.குறும்பறை - குறும்பறை யசைஇ (புறநானூறு)

15.கொடுகொட்டி - ஒரு வகைப்பறை

கொடுகொட்டி யாடலும் (சிலப்பதிகாரம்) குடமுழவங் கொடு கொட்டி குழலு மோங்க (தேவாரம்)

16.கோட்பறை - செய்திகளை நகரத் தார்க்குத் தெரிவிக்கும் பறை.

17.தமுக்கு - செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை.

18.நிசாளம் - ஒருகட் பறை.

19.சூசிகம் - ஒருவகைப் பறை. தகுதியெனக் கூறும் நெறி.

20.தக்கை - அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. (பிங்கல நிகண்டு); (சிலப்பதிகாரம்)

21.தடாரி - பம்பையென்னும் பறை. (பிங்கல நிகண்டு)

22.பறைத்தப்பட்டை, தண்ணம், தம்பட்டம், திடும், திண்டிமம், நாவாய்ப்பறை, திமிலை (சிலப்பதிகாரம்.)

23.தலைப்பறை - யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை.

24.படலை - வாயகன்ற பறை. (சூடாமணி நிகண்டு)

25.பண்டாரமேளம் - அரச விளம்பரங்களை குறிக்கும் பறை.

26.பன்றிப்பறை - காட்டுப்பன்றிகளை விரட்டக் கொட்டும் பறை. (பிங்கல நிகண்டு)

27.முரசம், வெருப்பறை - போர்ப் பறைகள். (புறநானூறு)

28.பூசற்றண்ணுமை - பகைவருடன் போர்புரிதற்காக, வீரரை அழைத்தற்குக் கொட்டும் பறை. (நன்னூல்)

29.முருகியம் - குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல்காப்பியம்)

30.வெறியாட்டுப்பறை - குறிஞ்சிநிலப் பறை.

31.வீராணம் - ஒருவகைப் பெரிய பறை.

வீராணம் வெற்றிமுரசு (திருப்புகழ்)

32.பஞ்சமாசத்தம் - சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவிதமாகச் சொல்லும் ஐவகைப் பறை.

இவ்வாறாக மொத்தம் 32 வகை பறை உள்ளது.


திரையிசை உள்ளிட்ட புதிய தேவைகளையொட்டிப் பறை பயன்படுத்தப்பட்டாலும் ஒரு கருவி என்ற முறையில் அது தீண்டத்தகாத கருவியாகவே சமூகத்தில் இன்னமும் கருதப்படுகிறது. எனவே மாட்டுக்கறி தின்பது, தீண்டாமை மறுப்புத் திருமணம் போல பிற சாதியினர் தப்படிப்பதும் ஒரு தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கையாகவே உள்ளது. சாதி ஒழிப்பு குறித்துப் பேசும் அமைப்புகளின் அணிகள் இதைச் செய்ய முன்வர வேண்டும். மணவிழாவுக்கு மங்கல வாத்தியம் (நாதசுரம்) – சாவுக்குப் பறை எனும் பார்ப்பனியப் பண்பாட்டை ஒழித்து பறையை மணவிழாவின், மகிழ்ச்சியின் இசைக் கருவியாக்க வேண்டும். சாப்பறையை நிறுத்த வேண்டும். பறை இசை இது வீணை போன்ற மெல்லிசை அல்ல. புல்லாங்குழல் போன்று மனதை வருடும் இசையும் அல்ல. நம் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் போர்த் தமிழ் இசை. அதுவே தமிழனின் இசை.


நம் சமூக அமைப்பில் புரையோடிப் போயிருக்கும் சாதி முறைகளும் வருண தர்மமும் மக்களில் மட்டுமல்லாது கலைகளிலும் ஏற்ற தாழ்வுகளைப் பார்க்கும் மனப்பான்மையை மக்களிடயே ஏற்படுத்திவிட்டது. கிராமிய கலைகளை உயர்வாகவும், நாட்டுநாட்டுப்புறக் கலைகளைத் தாழ்வாகவும் எண்ண வைத்துவிட்டது. இந்நிலையில் வேற்றுமைகளை வேரறுக்கும் முயற்சியினை, முதலில் கலைகளிருந்து தொடங்குவதே சாலச்சிறந்தது. பறையிசையினையும் அதன் மேன்மைகளையும் மாணவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் அது ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளம் என்பதனை விடுத்தது தமிழ் பண்பாட்டின் அடையாளம் என்ற கருத்து மாணவர்களிடையே வலுப்பெறும். இதன் மூலம் அக்கருவியின் பெயரால் வழங்கப்படும் மக்கள் ஒரு குறிப்பிட சாதியினர் என்ற கருத்தாக்கம் மறைந்து அனைவரும் தமிழ் மக்கள் என்ற உணர்வு வலுப்பெறும்.  மேலும் பறை இசையினைப் போன்று சாதி அடையாளங்களாக இனம் காணப்பட்டுள்ள பல்வேறு நாட்டுப்புறக் கலைகளை மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் மூலமாகவும் பெற்றோர்கள் மூலமாகவும் அறிந்துகொள்ள உந்துகோலாய் இருக்கும். சாதி ஒழிப்பிற்கான ஒரு சிறு நடவடிக்கையாக இது அமையும் என்பதில் மாற்றுகருத்துகள் இல்லை. இந்திய மண்ணில் புரையோடிப் போயிருக்கும் சாதிப் பிரிவினை இந்த ஆதிக் கருவியை சாதிக் கருவியாய் மாற்றிவிட்டது. சாவுக்கான இசையாய் ஒலிக்கவிட்டது. இந்த இழிநிலையை மாற்றி பறை மீது படிந்திருக்கும் கறையினைத் துடைத்து அதைக் கொண்டாட்டத்திற்கான இசைக் கருவியாக மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும்.


மு.ரா. ராஜேஷ்