க‌ரையான்க‌ள்


கால‌த்துள் எத்த‌னையோ உயிரின‌ங்க‌ள் க‌ரைந்துபோன‌ நிலையில், கால‌த்தால் க‌ரைப‌டாம‌ல் வாழ்பவை க‌ரையான்க‌ள்.

"F. M. Weesner indicates that the Mastotermitidae termites may go back to the Late Permian, 251 million years ago"

வீஸ்ன‌ர் என்ற‌ பூச்சியின‌ ஆராய்ச்சியாள‌ர் கூற்றுப்ப‌டி க‌ரையான்க‌ள் 251 மில்லிய‌ன் ஆண்டுக‌ளாக‌ பூமியில் வாழ்ந்திருக்கின்ற‌ன‌.


முதன்முதலில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் தோன்றிய கரையான்கள் கடல் வழியாக மரக்கட்டைகள் மூலமாக பல்வேறு இடங்களுக்கு சென்று தனது காலனிகளை அமைத்துக்கொண்டதாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

ஒவ்வொரு இடத்திற்கும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் கரையான்கள் தங்களது குழுக்களை பரிணமித்துக் கொண்டு இன்றளவும் நீடித்து வருகின்றது. 

இதுவரையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் வகைகளைக் கண்டறிந்து வரிசைப்படுத்தியுள்ளனர் விலங்கியலாளர்கள்.

தேனீக்களைப் போன்று கரையான்களுக்கும் ராணிக்கள் உண்டு. ஓரிரு ஆண் கரையான்கள் த‌விர‌ மற்றவை அனைத்தும் பணியாளர்களைப் போல செயல்படும்.

ஒவ்வொரு கரையான் குழுவிற்கும் ஒரு ராணி இருக்கும். ராணிக்கள் மற்றும் இந்த ஒரு சில ஆண் கரையான்களின் பிரதான வேலை இனப்பெருக்கம் மட்டுமே. ஒரு இனப்பெருக்கத்தில் ராணி கரையான்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான முட்டைகளை இடக்கூடிய தன்மை கொண்டவை.

பூச்சி இனங்களிலேயே அதிக ஆயுட்காலம் கொண்டதும் ராணி கரையான்கள் மட்டுமே. ராணி கரையான்கள் சராசரியாக 30 முதல் 50 வருடங்கள் வரையிலும் வாழும் தன்மையுடையது.

உலகில் மிக பழமையான கரையான் புற்றுகள் பிரேசில் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்காக ஆண்டுகள் கோடிக்கணக்கான கரையான்கள் இணைந்து சேகரித்த மண் குவியல்களே இந்த நாலாயிரம் வருட பழமையான கரையான் புற்றுகள். ஒட்ட‌க‌ச்சிவிய‌ங்கியை விட‌வும், ம‌ர‌ங்க‌ளை விட‌வும் உய‌ர‌மான‌ க‌ரையான் புற்றுக்க‌ள்தான் கீழுள்ள‌ ப‌ட‌ங்க‌ள். பூமிக்கு மேலிருப்ப‌தை போன்றே பூமிக்கு அடியிலும் அவை நேர்த்தியாக‌ க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

கரையான்கள் தங்கள் எச்சில் மற்றும் மண் ஆகியவற்றைக் கொண்டு தங்களின் புற்றுகளைக் காட்டுகிறது.

கரையான் புற்றுகளின் கட்டுமானம் மற்றும் கரையான்கள் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளின் முடிவுகள் இப்பொழுது ஜௌர்னல் ஆப் எக்ஸ்பிரிமெண்டல் பயோலஜி (Journal of Experimental Biology) என்னும் அறிவியல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டு இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர் அறிவியலாளர்கள். அதிலிருந்து சில‌ த‌க‌வ‌ல்க‌ள் கீழே...

கரையான்கள் தங்கள் புற்றுகளை தகுந்த வெளிச்சம் (light), காற்றோட்டம் (ventilation), குளிரூட்டும் முறைகள் (cooling systems) , வெப்பநிலை மாறுதல்கள் (temperature gradients) , உணவு சேகரிப்பு வங்கி (food storage banks) , முட்டைகளுக்கான இடம்(eggs place) போன்றவைகளை தனித்தனியாக வடிவமைத்துக்கொள்ளும் திறமை உடையவை.

இந்த புற்றுகளில் சிறு சிறு துளைகள் இருக்கும் அவை சூரிய ஒளி ஊடுருவ உதவுகிறது. கரையான் புற்றின் நடுவினில் ஒரு சிம்னி (chimney) போன்ற அமைப்பை கரையான்கள் உருவாக்குகின்றன. சிம்னியை சுற்றி சில புனல்களையும் (funnels) வடிவமைக்கின்றன.

இந்த சிம்னியின் மற்றும் புனல்களின் உதவியோடு தான் புற்றுக்குள் ஆக்சிஜென் செல்கிறது, கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுகிறது. புற்றுகளின் அடியினில் நமக்கு புரிகிற வகையில் சொல்லவேண்டுமெனில், வீடுகள் போன்ற அமைப்புகளை கரையான்கள் உருவாக்குகின்றன.

தனது முட்டைகளை பாதுகாக்கவும், அவை வளருவதற்காகவும் பிரத்யேகமாக இந்த வீடுகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. முட்டைகளை இடுவது முதல் அவைகளை பராமரிப்பது வரையிலான வேலைகளை ராணி கரையான் செய்கின்ற‌து.

உணவு சேகரிப்பு, புற்று பாதுகாப்பு மற்றும் இன்னபிற பணிகளை பணியாள் கரையான்கள் செய்கின்றன. இந்த குழுக்கள் பல ஆண்டுகளுக்கு தாம் வடிவமைத்த புற்றினுள் எந்த காலநிலை மாறுதல்களுக்கும் ஏற்றாற்போல் தம்மை மாற்றிக்கொண்டு வாழும் தன்மையுடையவை.

கரையான் புற்றுகள் அதன் வடிவமைப்பு, சூரிய ஒளியின் உதவியோடு அவை இயங்கும் முறை, கரையான்களின் செயல்பாடுகள் போன்றவற்றை மேலை நாட்டு அறிவியலாளர்கள் பல ஆண்டுகள் ஆராய்ந்து இந்த செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவிலோ இந்த கரையான் புற்றுகளுக்கடியில் இருக்கும் கரையான்களை உண்ண வரும் பாம்பை கடவுளாக எண்ணி, புற்றுகளில் பால் ஊற்றுவதும், மஞ்சள், குங்குமம் தெளித்து அதனை புற்றுக்கோவிலாக மாற்றி வழிபடுவதையுமே காண முடியும்.

ஏனெனில் இங்கு அனைத்தையும் ம‌த‌ ந‌ம்பிக்கைக்குள் உள்வாங்கிவிடுகிறோம்,   மாற்றிவிடுகிறோம். கரையான் புற்றில் இருக்கும் அழகான அறிவியலறிவை படிக்காவிட்டாலும் பரவாயில்லை, புற்றுகளை கோவில்களாக மாற்றி நம் அடுத்த தலைமுறையையும் அறிவியல் பின்புலமற்று வளர்த்தெடுத்து விடுகிறோம், இது அபாயகரமானது. 

நம்மை சுற்றியுள்ள இயற்கை எண்ணற்ற அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியது. விஞ்ஞான‌ம் அத‌ன் உண்மைக‌ளை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வெளிக்கொண‌ரும் சூழ‌லில், நாம் ப‌தில் தெரியா கேள்விக‌ளின் ஒட்டுமொத்த‌ ப‌திலாய் க‌ட‌வுள் என்ற‌ ப‌த‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்துகிறோம்.

கால‌த்துள்
க‌ரைந்துபோன‌ 
க‌ட‌வுள்க‌ள் ப‌ல‌ உண்டு

க‌ரையானின் கால‌த்தை
கட‌ந்து நிற்கும்
க‌ட‌வுள‌ர் எவ‌ர் உண்டு

(எண்ண‌ப்பூக்க‌ள் புத்த‌க‌த்தில் இட‌ம்பெற்றுள்ள‌ க‌ட்டுரைக‌ளுள் ஒன்று)

நன்றி  - பதிவர் ( Fazil Freeman Ali )
Post - https://www.facebook.com/719759147/posts/pfbid02TD2EWTFJ9X6czKd1CbE4dyJwTFiATEGAq2yx31DedpQq7JBsXczQq69Rbabtg8HZl/?app=fbl